உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான திகதி அறிவிப்பு

163

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் நடைபெறும் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றான கருதப்படும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்துள்ளது.

அத்துடன், இறுதிப் போட்டிக்கு மேலதிக நாளாக ஜூன் 12ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2021-2023 பருவகாலத்துக்கான தொடர்கள் ஏறக்குறைய நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இன்னும் 3 டெஸ்ட் தொடர்கள் மாத்திரம் எஞ்சியுள்ளன. இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற உள்ள போர்டர் – கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடர், இலங்கை – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாபிரிக்கா – மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடர் ஆகியவையே அந்தத் தொடர்களாகும்.

இந்த ஆண்டுக்கான இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா ஆகிய நான்கு அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.

தற்போதைய நிலவரப்படி அவுஸ்திரேலியா 75.56 என்ற வெற்றி சதவீதத்துடன் முதலிடத்திலும், இந்தியா 58.93 என்ற வெற்றி சதவீதத்துடன் 2ஆவது இடத்திலும், இலங்கை 53.33 என்ற வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், தென்னாபிரிக்கா 48.72 என்ற வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளன. இதில் தற்போது அவுஸ்திரேலியா மட்டும் இறுதிப் போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்யும் நிலையில் காணப்படுகிறது.

அவுஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 அல்லது 3-0 அல்லது 3-1 என்று இந்தியா கைப்பற்ற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால், இந்திய அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அவ்வாறு நடைபெறாவிட்டால் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் விளையாடவுள்ள டெஸ்ட் தொடர்களின் முடிவுகள் கிடைக்கும் வரை அந்த அணி காத்திருக்க வேண்டும்.

இறுதியாக கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஐசிசியின் அங்குரார்ப்பண உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் ஆண்டின் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்திலும், 2025ஆம் ஆண்டின் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறும் என ஐசிசி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது.

அதன்படி, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது அத்தியாயத்தின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள தி ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக ஐசிசி புதன்கிழமை (08) அறிவித்திருக்கிறது. இதில் ஜூன் 12ஆம் திகதி மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற மைதானமாக தி ஓவல் இருப்பது குறிப்பிடத்தக்கது

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<