ஜிம்பாப்வே அணியின் புதிய தலைவர்களாக எர்வின், சீன் வில்லியம்ஸ்

India vs Sri Lanka 2022

1673

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தலைவராக அந்த அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் கிரைக் எர்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பதவி மற்றும் பயிற்றுவிப்பு குழாத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான தலைவராக கிரைக் எர்வின் நியமிக்கப்பட்டுள்ளதுடன், டெஸ்ட் அணியின் தலைவராக சீன் வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேநேரம், அனைத்துவகையான போட்டிகளுக்குமான உப தலைவராக ரெஜிஸ் செகப்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியின் தலைவர்களில் இவ்வாறான மாற்றங்களை மேற்கொண்டதுடன், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக லான்ஸ் குலூஸ்னர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, கடந்த 2016-2018ம் ஆண்டுகளில் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்ததுடன், அதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார். இதேவேளை, ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இருந்த ஸ்டுவர்ட் மட்ஷிகெனேரி தற்போது, உதவி பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக லால்சாந் ராஜ்புட் செயற்பட்டுவரும் நிலையில், பந்துவீச்சு பயிற்றுவிப்பாளரை ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<