ஐ.சி.சி இன் உலக மகளிர் டி-20 தகுதிகாண் சுற்று இம்மாத இறுதியில்

152
Women's T20 World Cup qualifiers
©ICC
 

அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.சி.சி இன் உலக மகளிர் டி-20 போட்டிக்கு முன்னோடியாக எட்டு நாடுகள் பங்கேற்கின்ற தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7 ஆம் திகதி வரை ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ளது. 

இந்தத் தொடரில் நெதர்லாந்து (ஐரோப்பிய வலயம்), பப்புவா நியூகினி (கிழக்கு ஆசிய பசுபிக் வலயம்), தாய்லாந்து (ஆசிய வலயம்), ஐக்கிய அமெரிக்கா (அமெரிக்க வலயம்), உள்ளிட்ட நாடுகள் தத்தமது வலயங்களில் சம்பியனாகத் தெரிவாகி ஐ.சி.சி இன் உலக மகளிர் டி-20 தகுதிகாண் சுற்றுப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டது. அத்துடன், போட்டியை நடாத்தும் நாடாக ஸ்கொட்லாந்து நேரடியாக விளையாடத் தகுதிபெற்றது. 

பொதுநலவாய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளின்…

இதேநேரம், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் A குழுவிலும், அயர்லாந்து, தாய்லாந்து, நமிபியா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் B குழுவிலும் விளையாடவுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக் கொள்கின்ற அணிகள் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதிபெறும். 

இதன்படி, ஆரம்பப் போட்டியில் கடந்த வருடம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஐ.சி.சி இன் உலக மகளிர் டி-20 தகுதிகாண் சுற்று முன்னோடிப் போட்டியில் சம்பியனான பங்களாதேஷ் மகளிர் அணி, பப்புவா நியூ கினியை எதிர்த்தாடவுள்ளது. 

அந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அயர்லாந்து மகளிர் அணி, தமது முதல் போட்டியில் நமிபியாவை எதிர்கொள்ளும். இதனிடையே போட்டியை நடாத்தும் ஸ்கொட்லாந்து அணி, ஐக்கிய அமெரிக்காவையும், தாய்லாந்து அணி, நெதர்லாந்தையும் சந்திக்கவுள்ளது. 

இதேநேரம், ஆபிரிக்க வலயத்தில் சம்பியனாகிய ஜிம்பாப்வே அணிக்கு, இம்முறை போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அந்நாட்டு கிரி;க்கெட் சபையில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது. 

இதனால் ஐ.சி.சி இன் எந்தவொரு போட்டியிலும் ஜிம்பாப்வே அணிக்கு பங்குபற்ற முடியாது. இதன் காரணமாக குறித்த போட்டித் தொடரில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட நமீபிய அணி ஐ.சி.சி இன் உலக மகளிர் டி-20 தகுதிகாண் சுற்றுப் போட்டியில் களமிறங்கவுள்ளது. 

இதனிடையே, உலக மகளிர் டி-20 தகுதிகாண் சுற்று அரையிறுதிப் போட்டிகள் செப்டெம்பர 5 ஆம் திகதியும், இறுதிப் போட்டி செப்டெம்பர 7 ஆம் திகதியும் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டிக்குத் தெரிவாகின்ற இரண்டு அணிகளும் அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி இன் உலக மகளிர் டி-20 போட்டிகளில் விளையாடத் தகுதிபெறும். 

இதேநேரம், ஐ.சி.சி இன் உலக மகளிர் டி-20 தகுதிகாண் சுற்றுப் போட்டி ஆரம்பமாவதற்கு முன் ஒவ்வொரு அணிகளும் தலா ஒவ்வொரு பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது. இந்தப் பயிற்சிப் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இதேவேளை, ஐ.சி.சி இன் உலக மகளிர் டி-20 போட்டித் தொடர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் கென்பரா, மெல்பேர்ன், பேர்த் மற்றும் சிட்னி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<