மலேஷியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 185 ஓட்டங்களால் இலகுவாக வென்று ஆப்கானிஸ்தான் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
கனிஷ்ட ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை
ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தினால்…
கோலாலம்பூர், கின்ராரா அகடமி ஓவல் மைதானத்தில் இன்று (19) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணிக்கு மத்திய வரிசையில் வந்த இக்ராம் அலி கைல் கைகொடுத்தார். கடைசி வரை களத்தில் இருந்த அவர் 113 பந்துகளில் 10 பௌண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 113 ஓட்டங்களை பெற்றார்.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது. இதன்போது பாகிஸ்தான் அணி சார்பில் அம்ரான் மூசா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஷஹீட் அப்ரிடி 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் ஒன்றன் பின் ஒன்றான சரிந்தன. சுழற்பந்து வீச்சாளர் முஜீப் சத்ரான் அபாரமாக பந்துவீசி பாகிஸ்தான் விக்கெட்டுகளை சாய்த்தார். பாகிஸ்தான் அணியின் ஆரம்ப விக்கெட்டுகளை ஒற்றை இலக்கத்துடன் வெளியேற்றிய முஜீப் மத்திய வரிசையையும் ஆட்டம் காணச் செய்தார்.
இதனால் பாகிஸ்தான் இளையோர் அணி 22.1 ஓவர்களில் வெறுமனே 63 ஓட்டங்களுக்கு சுருண்டது. அணிக்காக மொஹமட் தாஹா 38 பந்துகளுக்கு முகம்கொடுத்து பெற்ற 19 ஓட்டங்களுமே அதிகமாகும். இவர் தவிர அணித்தலைவர் ஹசன் கான் (10) மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றார்.
அபாரமாக பந்துவீசிய முஜீப் 7.1 ஓவர்களில் 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதே அணியுடனான லீக் போட்டியிலும் முஜீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தமை நினைவு கூறத்தக்கது.
தவிர இளையோர் ஆசிய கிண்ண போட்டியில் முஜீப் ஒட்டுமொத்தமாக ஐந்து போட்டிகளிலும் 20 விக்கெட்டுகளை பதம்பார்த்து ஆப்கான் அணிக்கு பெரிதும் பங்காற்றியிருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான காசிம் அஹமது தனது 6 ஓவர்களுக்கும் 18 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஹேரத்; நேர்த்தியான ஆரம்பத்துடன் இந்தியா
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு…
இதன்படி முதல் முறை இளையோர் ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆப்கான் அணிக்கு அந்த கிண்ணத்தையும் கைப்பற்ற முடியுமானது. முந்தைய மூன்று போட்டித் தொடர்களிலும் ஆப்கான் அணி அரையிறுதியில் தோல்வியை சந்தித்தது.
இம்முறை தொடரில் ஆப்கான் அணி அரையிறுதியில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
எனினும் இளையோர் ஆசிய கிண்ணத்தின் நடப்புச் சம்பியனாக இருந்த இந்தியா மற்றும் கடந்த முறை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இலங்கை அணிகள் லீக் போட்டிகளுடனேயே வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
ஆப்கானிஸ்தான் – 248/7 (50) – இக்ராம் அலி கைல் 107*, ரஹ்மானுல்லா குர்பாஸ் 40, இப்ராஹிம் சத்ரான் 36, மொஹமட் முசா 3/46, ஷஹிட் அப்ரிடி 42/2
பாகிஸ்தான் – 63 (22.1) – மொஹமட் தாஹா 19, முஜீப் 5/13, காசிம் அஹமது 3/18, வபதர் 1/17
முடிவு – ஆப்கானிஸ்தான் 185 ஓட்டங்களால் வெற்றி