உலகக் கிண்ணம் நடாத்த இலங்கையின் ஆதரவை நாடும் பாகிஸ்தான்

584
PCB to form consortium

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இரண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களினை இலங்கை (SLC), பங்களாதேஷ் (BCB) ஆகிய நாடுகளுடன் இணைந்து நடாத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

>> இலங்கை வீரர்களின் PCR முடிவுகள் வெளியாகின

இதேநேரம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் (ECB) கிரிக்கெட் சபையுடனும் பேச்சு வார்த்தை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இரண்டு T20 உலகக் கிண்ணத் தொடர்களினை அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் இணைந்து நடாத்த எதிர்பார்த்துள்ளதோடு, அதற்கு மேலதிகமாக  இரண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களினையும் நடாத்த திட்டமிட்டிருக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த கிரிக்கெட் சுழற்சிக்காலத்தில் (2024-2031) உள்ளடங்கும் ஆறு பல்நாட்டுத் தொடர்களினை நடாத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்துள்ள விடயம் தொடர்பில், அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் எஹ்சான் மணி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். 

”நாங்கள் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னதாகவே கோரிக்கைகளை முன்வைத்திருப்பதோடு, அதற்காக இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் இணைவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.” 

”அதோடு, இது மாதிரியான விடயம் ஒன்றுக்கான இணைப்பினை நாம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் சபையுடனும் எதிர்பார்க்கின்றோம்.” 

இந்திய கிரிக்கெட் செய்திச் சேவையான Cricbuzz வெளியிட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 2027 மற்றும் 2031ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களினை இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடாத்துவதற்கும், 2025 மற்றும் 2029ஆம் ஆண்டுகளுக்கான சம்பியன்ஸ் கிண்ணத்தொடரினை தனியாக தமது நாட்டில் மாத்திரம் நடாத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

>> இலங்கை – இந்தியா இடையிலான ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

ஆனால், ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பாகிஸ்தான்  இணைந்து நடாத்த விருப்பம் தெரிவித்துள்ள T20 உலகக் கிண்ணத்தொடர்கள் குறித்த அறிவிப்புக்கள் இன்னும் வெளியாகவில்லை. 

கடந்த 25 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் எந்தவித கிரிக்கெட் தொடர்களினையும் நடத்தாத பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, 2025ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணம், 2028ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணம் மற்றும் 2031ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிண்ணம் ஆகியவற்றினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும் (BCCI) நடாத்த தீர்மானித்திருப்பதால் கடுமையான போட்டிகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது.  

அதேநேரம், சர்வதேச கிரிக்கெட் வாரியம் அதன் அடுத்த கிரிக்கெட் சுழற்சிக்காலத்திற்கான பல்நாட்டு கிரிக்கெட் தொடர்களை நடாத்துவதற்கு பாகிஸ்தான், இலங்கை உள்ளடங்களாக மொத்தம் 17 நாடுகளின் கிரிக்கெட் சபைகள் விருப்பம் தெரிவித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<