10 வருடங்களுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகும் இலங்கை

1254

2018 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி பல கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு விளையாடவுள்ளது.

இதில் முதலாவதாக இலங்கை அணி எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 2 டி20 மற்றும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.

இதனையடுத்து இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்பு டி20 போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தை எதிர்வரும் மே மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ள இலங்கை அணி, முதற்தடவையாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்டித் தொடர் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இன்று (04) வெளியிட்டது.

இதன் அடிப்படையில் முதலாவது டெஸ்ட் போட்டி ஜுன் மாதம் 06 ஆம் திகதி ட்ரினிடாட்டிலும், 2 ஆவது மற்றும் 3 ஆவது டெஸ்ட் போட்டிகள் முறையே பார்படோஸ் மற்றும் சென். லூசியாவில் 14 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அத்துடன், பார்படோஸிலுள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் முதற்தடவையாக இலங்கை அணி விளையாடவுள்ளதுடன், அம்மைதானத்தில் நடைபெறுகின்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியாகவும் அது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்காக போராட்ட சதங்களை குவித்த சந்திமால், மெதிவ்ஸ்

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட்…

இதன்படி இலங்கை அணி 4 ஆவது தடவையாக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற 3 டெஸ்ட் தொடர்களிலும் 6 போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், இதில் ஒரு போட்டியில் மாத்திரமே இலங்கை அணி வெற்றியைப் பதிவுசெய்தது. ஏனைய போட்டிகளில் 3 இல் தோல்வியையும், 2 போட்டிகள் சமநிலையிலும் நிறைவுக்கு வந்தன. இறுதியாக கடந்த 2008 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரை 1-1 என சமப்படுத்திய இலங்கை அணி, முதற்தடவையாக அந்ந நாட்டில் வரலாற்று டெஸ்ட் வெற்றியையும் பதிவுசெய்தது. அதனையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டித் தொடர்களில் மாத்திரம் அங்கு சென்று விளையாடியுள்ள இலங்கை அணி, 2010 டி20 உலகக்கிண்ணம் மற்றும் இந்தியாவுடனான முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் இறுதியாக விளையாடியிருந்தது.

எனினும், இறுதியாக 2015 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்ததுடன், இதில் 2-0 என இலங்கை அணி வெற்றியைப் பதிவுசெய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இவ்விரு அணிகளும் அண்மைக்காலமாக கிரிக்கெட் அரங்கில் சரிவை சந்தித்து வருகின்ற அணிகளாக விளங்குகின்றன. எனவே இப்போட்டித் தொடரானது நிச்சயம் இரு அணிகளிலுமுள்ள இளம் வீரர்களுக்கு சிறந்த களமாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும், கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கை A அணி மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தது. இதில் 4 நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் தொடரை தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை A அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

பயிற்சிப் போட்டி – மே மாதம் 30 முதல் ஜுன் முதலாம் திகதி வரை (பிரையன் லாரா கிரிக்கெட் மைதானம்)

முதலாவது டெஸ்ட் போட்டி – ஜுன் மாதம் 6 முதல் 10 வரை (குவீன்ஸ் பார்க் ஓவல் மைதானம்)

இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜுன் 14 முதல் 18 வரை (கெனிங்டன் ஓவல் மைதானம்)

மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஜுன் 23 முதல் 27 வரை (டெரன் சமி கிரிக்கெட் மைதானம்)