இலங்கை ஏ அணியில் விளையாடுவதை புறக்கணித்த சந்திமால்

950

இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்ற வாய்ப்பை இழந்த இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரும், அனுபவமிக்க வீரருமான தினேஷ்  சந்திமால் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இந்திய ஏ அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து தன்னை விடுவிக்கும்படி தேர்வுக் குழு உறுப்பினரும், இலங்கை ஏ அணியின் முகாமையாளருமான சமிந்த மெண்டிஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழுவில் சங்கக்கார

ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுக்கு…

இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணம் தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கை அணியின் முகாமையாளர் சமிந்த மெண்டிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “இந்திய அணியுடனான சுற்றுப்பயணத்தில் விளையாடுவது குறித்து நாம் சந்திமாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அப்போது அவர் இங்கிலாந்தின் கவுண்டி அணியயொன்றுக்காக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், எனவே, தன்னை இலங்கை அணியில் இருந்து விடுவிக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனவே மூன்று மாதங்கள் கவுண்டி அணிக்காக விளையாடுவது சந்திமாலுக்கு நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என கருதி அவருக்கு அதில் பங்கேற்பதற்கான அனுமதியை நாங்கள் கொடுத்தோம். இதனால் அவரை இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளவில்லை. எனினும், அவர் எந்த அணிக்காக விளையாடப் போகின்றார் என்பது பற்றி எமக்கு அறிவிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டார்.

ஸ்கொட்லாந்துடனான இறுதி வாய்ப்பை பயன்படுத்துமா இலங்கை?

உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை…

இதேநேரம், இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாடுவது தொடர்பில் தினேஷ் சந்திமால் இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று குழுவிடம் இதுவரை அனுமதி கேட்கவில்லை எனவும், பொதுவாக அவ்வாறு வெளிநாட்டு அணியொன்றுக்காக விளையாடுவதாக இருந்தால் முதலில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கடிதம் மூலம் அறிவிக்க வேண்டும் என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் ரவீன் விக்ரமரத்ன சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் வாய்ப்பை தவறவிட்ட இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான அகில தனன்ஜய தொடர்பில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ரோய் டயஸ் இதன்போது கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுகின்ற அனைத்து திறமைகளும் அகில தனன்ஜயவிடம் உள்ளது. எனினும், துரதிஷ்டவசமாக அவருக்கு இறுதி 15 பேர் கொண்ட இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எதுஎவ்வாறாயினும், இந்திய அணியுடனான போட்டித் தொடர் நிறைவுக்கு வரும்போது அவர் இன்னும் சிறப்பாக விளையாடி தனது திறமைகளை வெளிப்படுத்தி இலங்கை அணியில் மீண்டும் இடம்பெறுவார் என தான் நம்புகிறேன்” என அவர் குறிப்பிட்டார்.

Photos: Media Briefing on Sri Lanka ‘A’ Team tour to India

 

அத்துடன், இலங்கை அணியின் சுழல் பந்து பயற்சியாளர்களில் ஒருவரான பியல் விஜேதுங்கவின் கீழ் அகில தனன்ஜய பயிற்சிகளைப் பெற்று வருகின்றார். அவர் தற்போது முன்னரை விட சிறப்பாக பந்துவீசுகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கான இலங்கை குழாத்தை அறிவிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பு கடந்த மாதம் இடம்பெற்றது. இதில் அகில தனன்ஜய உலகக் கிண்ண அணியில் இருந்து நீக்கப்பட்டமைக்கான காரணத்தை தேர்வுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல்லிடம் வினவியபோது, போட்டித் தடைக்குப் பின்னர் அவர் முன்னரைப் போல பந்து வீசுவதில்லை எனவும், அதனால் அகிலவை மேலதிக வீரர்களில் கூட இணைத்துக்கொள்ள முடியாமல் போனதாக அவர் தெரிவித்திருந்தார்.

உலகக் கிண்ணத் தொடர்களில் இலங்கை அணிக்கு மறக்க முடியாத இணைப்பாட்டங்கள்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களை பொறுத்தவரையில்…

இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் தலைவர் ஷான் பிரியன்ஜன், ”இந்திய அணியுடன் விளையாடவுள்ள அனைத்து வீரர்களுக்கும் இந்தப் போட்டித் தொடர் மிக முக்கியமானதாக அமையவுள்ளது. அதேபோல, எமது திறமையை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாகவும் இது அமையவுள்ளது. இந்தியா அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது இலகுவான விடயமல்ல. எனினும், கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் பயிற்சிகளில் ஈடுபட்டோம். நிச்சயம் இப்போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி நான்கு நாட்கள் கொண்ட 2 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கான எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) இந்தியா நோக்கி பயணமாகவுள்ளது.

இதேவேளை, இந்திய அணியுடனான டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்ற இடதுகை சுழல் பந்துவீச்சாளரான லசித் எம்புல்தெனிய இன்னும் உபாதையிலிருந்து 100 சதவீதம் குணமடையாத காரணத்தால் அவருக்குப் பதிலாக மாலிந்த புஷ்பகுமாரவை இணைத்துக்கொள்ள தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் இடம்பெற்ற வேகப் பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீரவும் உபாதையிலிருந்து குணமடையாத காரணத்தால் அவருக்குப் பதிலாக மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளர் ஒருவரை அணியில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<