விடுமுறைக் காலம் நிறைவுற்றுள்ளது. தமது அடுத்த சுற்றுத் தொடரான இங்கிலாந்து அணியுடனான கிரிக்கட் போட்டித் தொடருக்கு தற்போது இலங்கை கிரிக்கட் வீரர்கள் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட வேண்டிய நேரமாகும்.

இலங்கை அணி கடைசியாக 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் விளையாடிய போது டெஸ்ட் போட்டித் தொடரை 1-0 என்ற அடிப்படையிலும், ஒருநாள் போட்டித் தொடரை 3-2 என்ற அடிப்படையிலும், ஒரு போட்டியைக் கொண்ட டி20 போட்டியையும் வெற்றி கொண்டு வரலாறு படைத்து விட்டே நாடு திரும்பியது.

தெற்காசியத் தீவான இலங்கை கடந்த காலங்களில் குறுகிய வடிவ விளையாட்டுப் போட்டித் தொடர்களான டி20 ஆசியக் கிண்ணம் மற்றும் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடர்களில் மோசமாகத் தோல்வி அடைந்து இருந்தது. எவ்வாறாயினும் அவர்கள் விரைவில் தங்களை மாற்றி கடந்த தோல்விகளை மறந்து பந்து வீச்சுக்கு சாதகமான துடுப்பாட்டத்துக்கு கடினமான ஆங்கில மைதானங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர சுய நம்பிக்கையோடு உட்புக வேண்டிய நிலையில் உள்ளனர்.

இலங்கை அணி எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் மற்றுமொரு கோடை கால மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகும் நிலையில் புதிய மற்றும் பழைய வீரர்கள் தொடர்பில் உற்று நோக்குவோம்.

தரங்க பரனவித்தான

Tharanga Paranavithana

எமக்குக் கிடைத்த ஆதாரங்களின் படி கடந்த வெள்ளிக்கிழமை தனது 34ஆவது வயதை எட்டிய இலங்கை டெஸ்ட் அணியின் முன்னால் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தரங்க பரனவித்தானவை நியுசிலாந்து அணியுடனான தொடரின் 4 இனிங்ஸ்களில் வெறுமனே 30 ஓட்டங்களைப் பெற்ற உதார ஜயசுந்தரவிற்குப் பதிலாக அணியில் இணைக்க இலங்கை கிரிக்கட் தேர்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இடதுகை துடுப்பாட்ட வீரரான தரங்க பரனவித்தான கடந்த உள்ளூர் மட்டக் கிரிக்கட் பருவ காலப் போட்டிகளில் தமிழ் யூனியன் கிரிக்கட் கழகத்திற்கு விளையாடினார். அந்தப் போட்டித் தொடரில் 10 போட்டிகளில் பங்குபற்றி 953 ஓட்டங்களைப் பெற்று இருந்தார். அதில் 3 சதங்கள் மற்றும் 5 அரைச் சதங்கள் அடங்கும். அது மட்டுமில்லாமல் அத்தொடரின் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற பெருமையை தரங்க பரனவித்தான தன் வசமாக்கியதோடு அத்தொடரில் அவரது துடுப்பாட்ட சராசரி 79.41 என்று காணப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் இடம் பெற்ற நியுசிலாந்து அணியுடனான தொடரில் திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் எதிர்பார்த்த சிறந்த ஆரம்பத்தை இலங்கை அணிக்கு பெற்றுக் கொடுத்தமையால் இங்கிலாந்து அணியுடனான போட்டிகளில் தரங்க பரனவித்தான 3ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவ்சல் சில்வா

Kaushal Silva

மற்றுமொரு சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கவ்சல் சில்வாவை எந்த இடத்தில் விளையாடவிடுவது என்று ஒரு பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. நம்பிக்கைக்குரிய இளம் திறமை கொண்ட  குசல் மென்டிசிற்குப் பதிலாக அணியில் இணைவாரா அல்லது விக்கட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் என்ற அடிப்படையில் 7ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்குவாரா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. 29 வயது நிரம்பிய கவ்சல் சில்வா கடந்த 11 டெஸ்ட் இனிங்ஸ்களில் ஒரேயொரு அரைச் சதத்தை மட்டும் பெற்று இருந்ததால் அவர் தனது ஆரம்பத் துடுப்பாட்ட இடத்தில் இருந்து கழற்றி விடப்பட்டார். அதன் பின் நியுசிலாந்து அணியுடனான தொடரில் அவருக்கு இடம் வழங்கப்பட்டாலும் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் விமர்சகர்கள் திகைக்கச் செய்யும் வண்ணம் முதல் தரப் போட்டிகளில் SSC அணிக்காக விளையாடிய கவ்சல் சில்வா அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதங்களைக் குவித்து இருந்தமை ஒரு முக்கிய விடயமாகும். இவ்வாறு இருக்கும் நிலையில் அவர் இங்கிலாந்து அணியுடனான தொடரில் இணையக் கூடிய வாய்ப்புகள் உள்ளது எனக் கூறப்படுகிறது.

தம்மிக்க பிரசாத்

Dhammika Prasad

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை பெற்றுள்ள மிகச் சிறந்த விக்கட்டுகளைக் கைப்பற்றக் கூடிய வேகபந்து வீச்சாளர்களில் முதன்மையானவரான தம்மிக்க பிரசாத் இலங்கை அணியின் பந்து வீச்சை பலப்படுத்த மீண்டும் அணியில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த நியுசிலாந்து அணியுடனான தொடரின் பயிற்சிப் போட்டியில் விளையாடிய போது காயமுற்ற பிரசாத் அந்தத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். 32 வயது நிரம்பிய தம்மிக்க பிரசாத் கடந்த 2 வருடங்களாக இலங்கை வேகப் பந்து வீச்சாளர்களில் முதன்மையானவராக தனது பெயரை பதிவு செய்து இருந்தார். 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான வரலற்று சிறப்பு வாய்ந்த லீட்ஸ் மைதான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரசாத் முதல் இனிகங்ஸில் 1 விக்கட்டையும் இரண்டாவது இனிகங்ஸில் 5 விக்கட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். அதன் பிறகு பந்து வீசிய 24 இனிகங்ஸ்களில் தம்மிக்க பிரசாத் 47 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதிலும் 4 இனிங்ஸ்களில் மட்டுமே அவருக்கு விக்கட்டொன்றையேனும் கைப்பற்ற முடியாமல் போனது.  காயத்தில் இருந்து குணமாகியுள்ள தம்மிக்க பிரசாத் குறைந்த பட்சம் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரொஷன் சில்வா

Roshane Silva

கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த 27 வயதான, றாகம கிரிக்கட் கழகத்திற்காக விளையாடி வரும் வலதுகை துடுப்பாட்ட வீரரான ரொஷன் சில்வா சமீபத்தில் முடிவுற்ற 2015/16 ஆண்டுக்கான பிரீமியர் லீக் போட்டிகளில் மிக அபாரமாக விளையாடி 10 போட்டிகளில் 678 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அதில் ஒரு இரட்டை சதம் அடங்கும். கடந்த வருடம் நடைபெற்ற இலங்கை “எ” அணி மற்றும் நியுசிலாந்து “எ” அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவர் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 120 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையில் இருந்த இலங்கை “எ” அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். நிதானமான மத்தியதர வரிசைத் துடுப்பாட்ட வீரரான இவர் இங்கிலாந்துடனான தொடரில் கித்ருவன் விதானகேயிற்கு பதிலாக இணைக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.

தனஞ்சய டி சில்வா

Dhananjaya De Silva

24 வயது நிரம்பிய வலதுகை துடுப்பாட்ட மற்றும் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளரான தனஞ்சய டி சில்வா தனது விளையாட்டுக் கழகமான தமிழ் யூனியன் கிரிக்கட் கழகத்திற்கு கடந்த கால பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் 868 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அது மட்டுமில்லாமல் 34 விக்கட்டுகளைக் கைப்பற்றி தமிழ் யூனியன் கிரிக்கட் கழகத்தின் சார்பாக அதிக விக்கட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் 2 டி20 போட்டிகளில் விளையாடி இருந்தார். அதன் பின் அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற சூப்பர் டி20 மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடரில் கொழும்பு கொமாண்டோஸ் அணிக்காக விளையாடிய தனஞ்சய டி சில்வா 6 போட்டிகளில் 234 ஓட்டங்களைப் பெற்று போட்டித் தொடரின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார். உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்த இந்த இளம் வீரருக்கு இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டித் தொடரில் வரையறுக்கப்பட்ட-ஓவர்கள் கொண்ட போட்டிகளிலாவது விளையாட இலங்கை கிரிக்கட் தேர்வுக்குழு வாய்ப்பு வழங்குவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் ஆரம்பக் கோடை கால நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு 7 துடுப்பாட்ட வீரர்கள், 3 வேகமாக பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் விளையாட வேண்டும். இந்தத் தேவையை நிறைவேற்ற இலங்கை டெஸ்ட் குழாமில் இலங்கை கிரிக்கட் சபை தேர்வாளர்கள் 8 துடுப்பாட்ட வீரர்கள், 5 வேகப் பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் இணைப்பார்கள் என நம்பப்படுகிறது. அது மட்டுமில்லாமல் கடந்த வாரம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறப்பட்டதிற்கு அமைய நாளை முதல் மே மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறும் 19 வயதிற்குட்பட்டோருக்கான மாகாணப் கிரிக்கட் போட்டித் தொடரில் இருந்தும் ஒரு வீரர் 16வது வீரராக இணைக்கப்படுவார் என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.

தெரிவு செய்யப்படும் என எதிர்ப்பர்ர்க்கப்டும் இலங்கை டெஸ்ட் குழாம்

எஞ்சலொ மெதிவ்ஸ் (தலைவர்), தினேஷ் சந்திமால் (உப தலைவர்), திமுத் கருணாரத்ன, கவ்சல் சில்வா, தரங்கா பரணவிதானா, குசல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, ரொஷன் சில்வா, ரங்கன ஹேரத், ஜெப்ரி வெண்டர்செ தம்மிக்க பிரசாத், துஷ்மன்த சமீர, நுவன் பிரதீப், சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ.