விஷ்மி, கவீஷா அதிரடியில் இலங்கை மகளிர் ஒருநாள் தொடர் வெற்றி

West Indies Women’s Tour of Sri Lanka 2024

76
West Indies Women’s Tour of Sri Lanka 2024

இலங்கை மகளிர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகளுக்கிடையில் இன்று (18) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

21 வயது இளம் வீராங்கனை கவீஷா தில்ஹாரியின் சகலதுறை ஆட்டம் மற்றும் விஷ்மி குணரத்னவின் அரைச் சதம் ஆகியன இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 4 வி;க்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையில் இன்று (18) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி, 31 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 92 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

ரஷாதா வில்லியம்ஸ் (24), ஆலியா அலைனே (16), அபி பிளெட்சர் (16), சடீன் நேஷன் (12) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் கவீஷா தில்ஹாரி 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் சமரி அத்தபத்து 08 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அச்சினி குலசூரிய 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

93 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 21.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று வெற்றீயீட்டியது.

அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரத்ன 50 பந்துகளில் 9 பௌண்டறிகள், ஒரு சிக்ஸருடன் 50 ஓட்டங்களையும், கவீஷா தில்ஹாரி 38 பந்துகளில் 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியின் பந்துவீச்சில் கரிஷ்மா ரன்ஹரக் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்  தொடரை,  ஒரு போட்டி மீதம் இருக்க 2 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணி தனதாக்கிக்கொண்டது.. இரு அணிகளுக்கிடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி எதிரவரும் 21ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெறும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<