மே.தீவுகள் ஒருநாள் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு

38

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த தொடருக்கான 16 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்கா தொடரில் விளையாடிய பெரும்பாலான வீராங்கனைகளுக்கும் வாய்ப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தின் தலைவியாக தொடர்ந்தும் சமரி அதபத்து செயற்படவுள்ளதுடன், 22 வயதான இடது கை சகலதுறை வீராங்கனையான சச்சினி நிசன்சலா 16 பேர் கொண்ட அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

எனினும், அனுபவ விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீராங்கனையான பிரசாதனி வீரக்கொடி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், தொடர்ச்சியாக இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவரும் ஹர்சிதா சமரவிக்ரம, சுழல் பந்துவீச்சில் பிரகாசிக்கும் ஓசதி ரணசிங்க, அனுஷ்கா சஞ்சீவனி, நிலக்ஷி டி சில்வா, சுகந்திகா குமாரி மற்றும் இனோகா ரணவீர போன்ற முன்னணி வீராங்கனைளும் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20i தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி இலங்கை வந்துள்ள நிலையில், போட்டித்தொடரானது எதிர்வரும் 15ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம்

சமரி அத்தபத்து (தலைவி), விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹசினி பெரேரா, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி, ஹன்சிமா கருணாரத்ன, அனுஷ்கா சஞ்சீவனி, ஓஷதி ரணசிங்க, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி, சச்சினி நிசன்சலா, உதேஷிகா பிரபோதனி, கௌதியா பிரபோதனி, அச்சினி குலசூரிய, காவ்யா காவிந்தி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<