இலங்கை 19 வயதின் கீழ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த முதல் நான்கு நாள் போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது.
தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியின் நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டம் மழைக்காரணமாக பெரும்பாலான பகுதி நடைபெறவில்லை.
நேற்றைய தினம் மேற்கிந்திய தீவுகள் அணி 121 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை தொடர்ந்தது. நேற்றைய தினம் அரைச்சதம் அடித்து களத்தில் நின்ற ஜோர்டன் ஜோன்சன் இன்றும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஏனைய வீரர்கள் தடுமாற்றத்தை எதிர்கொண்டனர்.
தனியாளாக ஓட்டங்களை குவித்த ஜோர்டன் ஜோன்சன் 149 ஓட்டங்களை குவித்த போதம், மறுமுனையில் விஹாஷ் தெம்மிக அற்புதமாக பந்துவீசினார். இவர் 78 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்ற, மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணி 309 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் விஷ்வ லஹிரு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை இளையோர் அணி ஆட்டம் நிறுத்தப்படும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ரவிசான் நெத்சரா 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சாருஜன் சண்முகநாதன் 26 ஓட்டங்களையும், தினுர கலுபான 22 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை இளையோர் அணியின் முதல் இன்னிங்ஸை பொருத்தவரை தினுர கலுபான 150 ஓட்டங்களை குவிக்க அணி 432 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.