பலம் மிக்க மேற்கிந்திய தீவுகளை T20I தொடரில் வீழ்த்துமா இலங்கை?

54

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் நிறைவின் பின்னர், இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடர் நாளை (04) பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை பொருத்தவரை மிகவும் நேர்த்தியாக விளையாடிய இலங்கை அணி 3-0 என தொடரை கைப்பற்றியது. இதில், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என அனைத்து விதத்திலும் இலங்கை அணி பிரகாசித்திருந்தமையை பார்க்க முடிந்தது.

அதிலும் இலங்கை அணியின் தொடர் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அணியின் களத்தடுப்பு அமைந்திருந்ததுடன், அஞ்செலோ மெதிவ்ஸ் மீண்டும் பந்துவீசுவது அணியின் கட்டமைப்பில் சமனிலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் அணியில் ஓரிரண்டு வீரர்கள் மாத்திரம் பிரகாசிக்க, இலங்கை அணியால் வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. எனினும், இந்த ஒருநாள் தொடரை பொருத்தவரை ஒவ்வொரு வீரர்களும் வெற்றியில் சிறந்த முறையில் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

இவ்வாறு ஒருநாள் தொடரில் 3-0 என வெற்றிக்கொண்டிருந்த இலங்கை அணி நம்பிக்கையுடன் T20I தொடரை எதிர்கொள்ள காத்திருக்கிறது. ஆனாலும், இறுதி 5 T20I போட்டிகளில் இலங்கை அணி மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் தொடரை 2-0 என இழந்திருந்த இலங்கை அணி, அவுஸ்திரேலியாவில் 3 போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது.

குறித்த தொடர்களுக்கு முன்னதாக தசுன் ஷானக தலைமையில் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை அவர்களது சொந்த மண்ணில் 3-0 என வைட்வொஷ் செய்திருந்தது. இவ்வாறான நிலையில், தொடர்ச்சியாக 5 T20I போட்டிகளில் தோல்வியடைந்துள்ள அணிக்கும், T20I அணித் தலைவரான லசித் மாலிங்கவுக்கும் இந்த தொடர் மிக முக்கியமான தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை இழந்துள்ள போதும், T20I தொடரை பொருத்தவரை, இலங்கைக்கு மிக அதிகமான சவால்களை கொடுக்கக்கூடிய அணியாக உள்ளது.

சர்வதேச ரீதியில் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர்கள் T20 தொடர்களில் விளையாடி வருவதுடன், T20  போட்டிகளுக்கு ஏற்ப மிகத்திறமையான வீரர்களை அந்த அணி கொண்டுள்ளது. அதேநேரம், ஒருநாள் குழாத்தில் இடம்பெற்றிருக்காத, அன்ரே ரசல் மற்றும் டுவைன் பிராவோ ஆகிய அதிரடி சகலதுறை வீரர்கள் T20 குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளமை அந்த அணிக்கு மேலும் அதிக வலுவை அளிக்கக்கூடியதாக இருக்கும்.

அதேநேரம், உடற்தகுதி காரணமாக ஒருநாள் தொடரில் இணைக்கப்படாமல் இருந்த சிம்ரொன் ஹெட்மையர், அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களரன எவின் லிவிஸ் மற்றும் லெண்டல் சிம்மன்ஸ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு மிக பலமான அணியாக களமிறங்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, ஒருநாள் தொடரை இழந்த போதும், T20I தொடரில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரையில் ஒரு இருதரப்பு T20I தொடரில் மாத்திரமே விளையாடியுள்ளன. 2015ம் ஆண்டு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி முதல் போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றிப்பெற்று தொடரை சமப்படுத்தியிருந்தன.

இருதரப்பு தொடரை விடவும், இரண்டு அணிகளும் அதிகமாக ஐசிசியால் நடத்தப்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளன. அதன்படி, இருதரப்பு மற்றும் ஐசிசி தொடர்கள் என மொத்தமாக 9 போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடியுள்ளன. இதில், இலங்கை அணி 6 வெற்றிகளையும், மேற்கிந்திய தீவுகள் அணி 3 வெற்றியையும் பெற்றுள்ளன.

மூன்று வெற்றிகளாக இருந்தாலும், மேற்கிந்திய தீவுகள் அணி 2012ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற T20I உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்பார்ப்பு வீரர்கள்

வனிந்து ஹசரங்க

இலங்கை அணியின் T20I துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டும் கடந்த 12 மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியை கண்டிருக்கிறது. முன்னணி துடுப்பாட்ட வீரர்களின் ஓட்ட சராசரி 30 இற்கும் குறைவாகவே உள்ளது.

பந்துவீச்சை பொருத்தவரை லசித் மாலிங்க கடந்த 11 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள போதும், புதுமுக சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க மிகச்சிறப்பான முறையில் செயற்பட்டு வருகின்றார்.

இவர், கடந்த 12 மாதங்களில் 11 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன், தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயற்பட்டுள்ளதால், இந்த T20I தொடரில் இலங்கை அணியின் எதிர்பார்க்கப்படும் வீரராக வனிந்து ஹசரங்க உள்ளார்.

கீரன் பொல்லார்ட்

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் கீரன் பொல்லார்ட் T20I  போட்டிகளில் நம்பிக்கைக்குறிய துடுப்பாட்ட வீரராக உள்ளார்.

அணியினை சிறந்த முறையில் வழிநடத்தும் இவர், கடந்த 12 மாதங்களில் அணி சார்பாக அதிகமான T20I ஓட்டங்களை பெற்றுள்ள வீரராகவும் உள்ளார். 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இவர், 43 என்ற ஓட்ட சராசரியில் 301 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடிய இவர், தனியாளாக போட்டியின் திசையை மாற்றக்கூடியவர் என்பதுடன், மித வேக பந்துவீச்சிலும் அணியிக்கு சமனிலையை கொடுக்கக்கூடியவர்.

அணிக்குழாம்கள்

இலங்கை குழாம்

லசித் மாலிங்க (அணித்தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, நிரோஷன் டிக்வெல்ல, அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், ஷெஹான் ஜயசூரிய, வனிந்து ஹஸரங்க, தசுன் ஷானக்க, திசர பெரேரா, லக்ஷான் சந்தகன், அசித பெர்னாண்டோ, இசுரு உதான, லஹிரு குமார

மேற்கிந்திய தீவுகள் குழாம்

கீரன் பொல்லார்ட் (தலைவர்), டுவைன் பிராவோ, ஷெல்டன் கொட்ரல், ஷிம்ரொன் ஹெட்மையர், பிரெண்டன் கிங், எவின் லிவிஸ் கெஹ்ரி பீரி, நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பவெல், ஷெர்பென் ரதபோர்ட், லெண்டல் சிம்மன்ஸ், ஹெய்டன் வோல்ஸ் ஜூனியர், கெஸ்ரிக் வில்லியம்ஸ்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் மிக சுவாரஷ்யமான முறையில் நிறைவடைந்ததுடன், இலங்கை அணி தொடரையும் 3-0 என கைப்பற்றியது.

இவ்வாறான, நிலையில் T20I போட்டிகளை பொருத்தவரை மிக பலம் மிக்க அணியென கருதப்படும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20I தொடரும் மிக சுவாரஷ்யமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 >>  மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<