டெஸ்ட் தரவரிசையில் முன்னேறும் இலக்கோடு மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு

1313
Windies Test Squad
Image Courtesy - WICP

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையானது (CWI) அவர்களது சொந்த மண்ணில் இடம்பெறவிருக்கும் இலங்கை அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான, 13  பேர் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் குழாமை நேற்று (24) வெளியிட்டிருக்கின்றது.

அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் விளையாட முன்வரிசை துடுப்பாட்ட வீரரான டெவோன் ஸ்மித் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றார்.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்

இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்…

36 வயதாகும் ஸ்மித், 2015 ஆம் ஆண்டிலேயே மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்மித்தினை மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் தேசிய அணியில் உள்வாங்க காரணம் உள்ளூர் போட்டிகளில் அவரது சிறப்பான பதிவுகளாகும். 2017-18 ஆம் ஆண்டுகளின் பருவகாலத்திற்காக நடைபெற்ற நான்கு நாட்கள் கொண்ட பிராந்திய கிரிக்கெட் தொடரில் ஸ்மித்தினால் 1095 ஓட்டங்கள் 84.23 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் பெறப்பட்டிருந்தது. இதில் ஆறு சதங்களும் அடங்கும்.

இதேவேளை, இதுவரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாடாத விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஜஹ்மர் ஹமில்டனுக்கும் மேற்கிந்திய தீவுகளின் இந்த டெஸ்ட் குழாமில் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகள் “A” அணிக்காக விளையாடிவரும் ஹமில்டன் அண்மையில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இடம்பெற்று முடிந்த இரண்டு  முதல் தரப் போட்டிகளிலும் ஒரு சதம், ஒரு அரைச்சதம் உட்பட மொத்தமாக 208 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

“ஜஹ்மர் ஹமில்டன் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றார். அவர் அண்மையில் இடம்பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான தொடரிலும் A அணியில் விளையாடி நல்ல பதிவுகளைக் காட்டியிருந்தார். (மேற்கிந்திய தீவுகள்) அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் அவருக்கு பங்களிப்பு இருக்க வாழ்த்துகிறோம்“ என மேற்கிந்திய தீவுகள் அணியின் சிரேஷ்ட தேர்வாளர் கோர்ட்னி ப்ரோவ்னி, ஜஹ்மர் ஹமில்டனின் தேர்வு பற்றி பேசியிருந்தார்.

மேலும் பேசிய அவர், தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த அணி மூலம் டெஸ்ட் தரவரிசையில் மேற்கிந்திய தீவுகளின் நிலையை முன்னேற்ற எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு அடுத்த மாதம்…

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடி இருக்கும் துடுப்பாட்ட வீரரான சுனீல் அம்பிரிஸ், ஜெர்மைன் பிளக்வூட் போன்ற துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்த டெஸ்ட் குழாமில் வாய்ப்பு தரப்படவில்லை. அத்துடன் வேகப்பந்து வீச்சாளரான அல்ஷாரி ஜோசேப்பும் காயத்தினால் அணியில் உள்ளடக்கப்படவில்லை.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சுத்துறையை பலப்படுத்தும் பொறுப்பினை அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் உடன் சேர்ந்து அனுபவ வீரரான கேமர் ரோச் முன்னெடுக்கின்றார். மறுமுனையில் அணிக்கு சுழல் பந்துவீச்சாளர்களாக ரோஸ்டோன் சேஸ், தேவேந்திர பீஷூ ஆகியோர் இருக்கின்றனர்.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை ட்ரினிடாட் நகரில் இடம்பெறவிருக்கின்றது. பின்னர் ஜூன் 14 ஆம் திகதி நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட இரண்டு அணிகளும் சென். லூசியாவுக்கு பயணிக்கின்றன. தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி பகலிரவு ஆட்டமாக பார்படோஸ் நகரில் ஜூன் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம் – ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), தேவேந்திர பீஷூ, க்ரைக் ப்ராத்வைட், ரோஸ்டன் சேஸ், மிகுவேல் கம்மின்ஸ், சேன் டோவ்ரிச், சனோன் கேப்ரியல், ஜஹ்மர் ஹமில்டன், சிம்ரோன் ஹெட்மேயர், ஷாய் ஹோப், கெய்ரன் பவல், கேமர் ரோச், டேவோன் ஸ்மித்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<