அடுத்தடுத்த தொடர்களை உறுதிசெய்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்

125
Cricbuzz
 

எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அடுத்தடுத்த மூன்று  தொடர்களை முறையே தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு எதிராக நடத்த இருப்பதை அந்நாட்டு கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.  

கடந்த 2020 இல்  தென்னாபிரிக்கா அணிக்கெதிராக நடக்கவிருந்த டெஸ்ட் மற்றும் T20 தொடர்கள் இவ்வருடத்திற்கு மாற்றப்பட்டத்தையடுத்து, அந்த தொடர் மூலம் மேற்கிந்திய தீவுகளின் கோடை பருவகால கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பமாகிறது. 

Video – தேர்வுக்குழுவின் திட்டத்தை வெளியிட்ட குசல் பெரேரா!

அந்தவகையில், தென்னாபிரிக்கா அணி எதிர்வரும் ஜூன்முதலாம் திகதி சென்ட் லூசியாவிற்கு வருகைதந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடும். அதைத்தொடர்ந்து ஜூன் 26 முதல் ஜூலை 3ஆம் திகதி வரை கிரெனேடாவில் 5 T20 போட்டிகளை விளையாடும். மேற்கிந்திய தீவுகளில் இரண்டு விதமான தொடர்களில்  தென்னாபிரிக்கா அணி விளையாடுவது 2010க்கு பிறகு இதுவே முதல் தடவையாகும். 

பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான அவுஸ்திரேலியா அணியினது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட  கிரிக்கெட் சுற்றுப்பயணம்  ஜூலை 9 ஆம் திகதி ஆரம்பமாகும். சென்ட் லூசியாவில் ஜூலை 9 தொடக்கம் 24 வரை 5 T20 போட்டிகளை விளையாடிய பின்னர் அவுஸ்திரேலியா அணி, மூன்று ஒருநாள் போட்டிகளை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பார்படோஸ் அரங்கில் விளையாடும். 

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதற்காக நடைபெறும் ஐசிசி ஒருநாள் சுப்பர் லீக்கில் தற்போது 30 புள்ளிகளை பெற்றிருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு, அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் மூலம் தமது புள்ளிகளை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

அதேநேரம், பாகிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T20 போட்டிகளை கொண்ட தொடரை விளையாடுவதற்காக ஜூலை 21 ஆம் திகதி பார்படோஸை வந்தடையும்.  முதலிரு T20 போட்டிகளும் கெனிங்ஸ்டன் ஓவலில் நடைபெற்று இறுதி 3 T20 போட்டிகளும் ஜூலை 31 இலிருந்து ஓகஸ்ட் 3 வரை கயானாவில் நடைபெறும்.   

T20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகள்

அதன் பின்னர் இவ்விரு அணிகளும் ஓகஸ்ட் 12 இலிருந்து 24ஆம் திகதி வரை 2 டெஸ்ட் போட்டிகளை ஜமைக்காவில் விளையாடும். கரீபியன் பிரீமியர் லீக் தொடர் ஆரம்பிக்க 4 நாட்களுக்கு முன் இவ்விரு அணிகளுக்கிடையிலான தொடர் நிறைவு பெறும்.   

அடுத்தடுத்த மூன்று தொடர்களை நடத்துவது குறித்து கருத்து தெரிவித்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் ஜோனி க்ரேவ்,

“இவ்வருட ஆரம்பத்தில் இலங்கைக்கெதிரான அனைத்து வகையான போட்டித் தொடர்களையும் வெற்றிகரமாக நடத்தியதற்கு பிறகு தற்போது நாம் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களை நடத்தவுள்ளோம். ஐந்து இடங்களில் மூன்று சர்வதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளை நடத்துவதென்பது இதற்கு முன் நடக்கவில்லை. 

இந்த கொவிட் அச்சுறுத்தல் உள்ள காலங்களில் இப்படி போட்டிகளை நடத்த திட்டமிடுவது என்பது ஒரு சவாலான விடயமே. கிரிக்கெட் உலகில் இந்த சவாலான காலங்களில் இங்கு வருகைதர சம்மதித்து இருக்கும் அணிகளுக்கு நாம் நன்றிகளை தெரிவிப்பதோடு,  எமது ரசிகர்களுக்கு பொழுதுபோக்கையும்  எமது வீரர்களுக்கு வருவாய்களையும் தந்து இந்த தொடர்கள் பாதுகாப்பாக நடைபெற எம்மோடு இணைந்து பணியாற்றும் மாநில அரசாங்கங்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.” 

ICC டெஸ்ட் தரவரிசையில் இலங்கைக்கு பின்னடைவு

தற்போது வெளியாகியுள்ள புதிய அட்டவணைக்கு அமைய, ஒக்டோபரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள T20 உலகக் கிண்ண தொடருக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி 15 T20 போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்களின் சுருக்கம் 

மே.தீவுகள் எதிர் தென்னாபிரிக்கா, 2021 

 • 1ஆவது டெஸ்ட் – ஜூன் 10-14, சென்ட் லூசியா 
 • 2ஆவது டெஸ்ட் – ஜூன் 18-22, சென்ட் லூசியா 
 • 1 ஆவது T20I – ஜூன் 26, கிரெனேடா 
 • 2 ஆவது T20I – ஜூன் 27, கிரெனேடா 
 • 3 ஆவது T20I – ஜூன் 29, கிரெனேடா 
 • 4 ஆவது T20I – ஜூலை 1, கிரெனேடா 
 • 5 ஆவது T20I – ஜூலை 3, கிரெனேடா 

மே.தீவுகள் எதிர் அவுஸ்திரேலியா , 2021 

 • 1 ஆவது T20I – ஜூலை 9, சென்ட் லூசியா  
 • 2 ஆவது T20I – ஜூலை 10, சென்ட் லூசியா 
 • 3 ஆவது T20I – ஜூலை 12, சென்ட் லூசியா  
 • 4 ஆவது T20I – ஜூலை 14, சென்ட் லூசியா 
 • 5 ஆவது T20I – ஜூலை 16, சென்ட் லூசியா 
 • 1 ஆவது ஒருநாள்  – ஜூலை 20, பார்படோஸ் 
 • 2 ஆவது ஒருநாள்  – ஜூலை 22, பார்படோஸ்   
 • 3 ஆவது ஒருநாள்  – ஜூலை 24, பார்படோஸ் 

மே.தீவுகள் எதிர் பாகிஸ்தான், 2021 

 • 1 ஆவது T20I – ஜூலை 27, பார்படோஸ்  
 • 2 ஆவது T20I – ஜூலை 28, பார்படோஸ்
 • 3 ஆவது T20I – ஜூலை 31, கயானா  
 • 4 ஆவது T20I – ஓகஸ்ட் 1, கயானா  
 • 5 ஆவது T20I – ஓகஸ்ட் 3, கயானா  
 • 1 ஆவது டெஸ்ட் – ஓகஸ்ட் 12-16, ஜமைக்கா 
 • 2 ஆவது டெஸ்ட் – ஓகஸ்ட் 20-24, ஜமைக்கா