சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு மைக்கல்மென் விளையாட்டுக் கழகம் 49ஆவது வருடமாக மட்டு நகரில் நடாத்தும் வெபர் (Weber) கிண்ண கூடைப்பந்தாட்டத் தொடரின் குழுநிலை ஆட்டங்கள் (Group Stage) மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் (Semi Finals) யாவும் புனித மைக்கல் கல்லூரி மைதானத்தில் நிறைவடைந்துள்ளது.

 குழு நிலைப் போட்டிகள்

மட்டக்களப்பு சிவப்பு அணி எதிர் புனித மைக்கல் கல்லூரி

தொடரின் முதல் போட்டியான இந்த ஆட்டத்தில் மைதான சொந்தக்காரர்களான இரண்டு அணிகளும் மோதிக்கொண்டன. குழு A அணிகளான இரண்டும் நல்ல ஆரம்பத்தைக் காட்டியிருப்பினும் மட்டக்களப்பு சிவப்பு அணியினர் தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவிக்கத் தொடங்கினர். இதனால் முதல் கால்பகுதி 23:9 என்ற புள்ளிகள் கணக்கில் மட்டக்களப்பு அணிக்கு சொந்தமாகியது.

இரண்டாம் கால்பகுதியில் மைக்கல் கல்லூரியின் இளம் வீரர்கள் எதிரணிக்கு நிகராக சமபலத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் காரணமாக இக்கால்பகுதியில் மொத்தமாக 16 புள்ளிகளை அவர்கள் சேர்த்திருந்தனர். மட்டக்களப்பு சிவப்பு அணியினர் எதிரணியை விட இக்கால் பகுதியில் ஒரு புள்ளியை மாத்திரமே அதிகமாகப் பெற்றனர்.

மட்டுநகரின் வெபர் கிண்ண கூடைப்பந்து தொடர் இவ்வார இறுதியில்

அருட்தந்தை வெபர் அடிகளாரை மதிக்கும் வகையில் மைக்கல்மென் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

மூன்றாம் கால்பகுதியையும், இறுதிக் கால்பகுதியையும், சிறப்பாக செயற்பட்டு மைக்கல் கல்லூரி கைப்பற்றிய போதிலும் முதல் கால்பகுதியில் விட்ட தவறுகள் போட்டியை மட்டக்களப்பு அணி வெல்வதற்கு காரணமாக அமைந்துவிட்டது. இறுதியில் 63:72 என்ற புள்ளிகள் கணக்கில் இந்த வருட வெபர் கிண்ணத்தின் முதல் போட்டியின் வெற்றியாளர்களாக மட்டக்களப்பு சிவப்பு அணி மாறியது.


 மட்டக்களப்பு நீல அணி எதிர் யாழ்ப்பாணம்

குழு B அணிகளின் முதல் போட்டியில் கிழக்கு மாகாணம் மற்றும் வட மாகாணம் ஆகிய இரண்டையும் பிரதிநிதித்துவம் செய்த இரண்டு அணிகள் பங்குபற்றியிருந்தன.

இரண்டு அணிகளும் சமபலத்தைக் காட்டியிருந்த போதிலும் யாழ்ப்பாண வீரர்களைவிட சற்று சிறப்பாக செயற்பட்ட மட்டக்களப்பு நீல அணி முதற் கால்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது.

இரண்டாம் கால்பகுதியில் புள்ளிகள் சேர்ப்பதில் யாழ்ப்பாண அணியினர் அதிகமாக தவறுகளை விட்டிருந்தனர். எனினும் மட்டக்களப்பு இதற்கு எதிர்மாறாக அதிக புள்ளிகளை இந்த கால்பகுதியில் பெற போட்டியின் முதல் பாதி 41:21 என்ற புள்ளிகள் கணக்கில் மட்டக்களப்பு அணியின் முன்னிலையுடன் நிறைவடைந்தது.

போட்டியின் இறுதி இரண்டு கால்பகுதிகளிலும் யாழ்ப்பாண வீரர்கள் தமது ஆதிக்கத்தைக் காட்டியிருந்த போதிலும் அது அவர்களை வெற்றியாளர்களாக மாற்ற உதவி செய்யவில்லை. முடிவில் 68:57 என்ற புள்ளிகள் கணக்கில் யாழ்ப்பாணத்தை மட்டக்களப்பு நீல அணி வீழ்த்தியது.


 மட்டக்களப்பு சிவப்பு அணி எதிர் கம்பஹா

குழு A இற்கான இந்தப் போட்டியின் முதல் கால்பகுதியில் மைதான சொந்தக்காரர்களான மட்டக்களப்பு சிவப்பு அணியின் ஆதிக்கம் அதிகம் காணப்பட்டிருந்தது. முதல் பாதி 24:18 என்ற புள்ளிகள் கணக்கில் மட்டக்களப்பின் ஆதிக்கத்தோடு முடிவடைந்த போதிலும் போட்டியின் இரண்டாம், மூன்றாம் கால்பகுதிகள் அவ்வாறு அமைந்திருக்கவில்லை.

ஆக்ரோஷமான முறையில் புள்ளிகள் வேட்டையில் கம்பஹா அணியினர் தமது அதிரடியான நடவடிக்கைகள் மூலம் செயற்பட்டு விரைவாக தமது புள்ளிகளை அதிகரித்துக் கொண்டனர்.

போட்டியின் இறுதிக் கால்பகுதியில் மட்டக்களப்பு சிவப்பு அணி புள்ளிகள் சேர்க்க மிகவும் சிரமத்துக்கு ஆளாகியிருந்தது. இது போட்டியின் வெற்றியாளர் கம்பஹா அணியினர் என்பதை உறுதி செய்தது. இறுதியில் 92:64 என்ற புள்ளிகள் கணக்கில் மட்டக்களப்பு சிவப்பு அணியை கம்பஹா தோற்கடித்தது.


 யாழ்ப்பாணம் எதிர் காலி

குழு B இற்கான இந்த ஆட்டத்தில் தமது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த யாழ்ப்பாண அணியினர் இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கியிருந்தனர்.

ஆரம்பம் முதலே வடமாகாண அணி வீரர்கள் உற்சாகமாக செயற்பட்டதனால் புள்ளிகள் விரைவாக சேர்க்கப்பட்டிருந்தன. சாமர்த்தியமான முறையில் அவர்கள் தொடர்ந்தும் செயற்பட முதல் பாதி 44:29 என்ற புள்ளிகள் கணக்கில் யாழ்ப்பாண வீரர்களின் வசமானது.

மூன்றாம் கால்பகுதி மற்றும் போட்டியின் இறுதிக் கால்பகுதி என்பவற்றிலும்  யாழ்ப்பாண வீரர்களின் ஆதிக்கமே நீடித்தது. இந்த இரண்டு பகுதிகளிலும்  மொத்தமாக 40 புள்ளிகளை சேர்த்த யாழ்ப்பாண வீரர்களுக்கு அது போட்டியின் வெற்றியாளர்களாக மாறுவதற்கு உதவி செய்திருந்தது.

முடிவில் யாழ்ப்பாண அணியினர் 84:61 என்ற புள்ளிகள் கணக்கில் காலி வீரர்களை வீழ்த்தினர்.


புனித மைக்கல் கல்லூரி எதிர் கம்பஹா

மட்டக்களப்பு சிவப்பு அணியிடம் தமது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய புனித மைக்கல் கல்லூரி அணி தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கோடு குழு A அணிகளுக்கிடையிலான இந்த இறுதிப் போட்டியில் பங்கெடுத்திருந்தது.

றுவை மாவட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் சம்பியன்களான “எக்சத் ப்ரகதி”

மன்ச்சீ பிஸ்கட் (Munchee) நிறுவன அனுசரணையில் நடைபெறும் மாவட்ட மட்ட கரப்பந்தாட்ட சம்பியன்ஸ் கிண்ணப் ட்டிகளின்…

சவால் மிக்க கம்பஹா அணியினரின் தடுப்புக்களை தகர்த்து போட்டியின் முதல் புள்ளியை புனித மைக்கல் கல்லூரியே பெற்றிருந்தது. தொடர்ந்தும் சிறப்பாக செயற்பட்ட மைக்கல் கல்லூரி போட்டியில் முதல் கால்பகுதியை 18:24 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியிருந்தது.

எனினும் இரண்டாம் கால்பகுதியில் தமது அபாரத்தை கம்பஹா வீரர்கள் வெளிப்படுத்த தொடங்கினர். மூன்றாம் கால்பகுதியிலும் இது தொடர இரண்டு கால்பகுதிகளும் கம்பஹா அணிக்கு சொந்தமாகியது.

போட்டியின் கடைசி கால்பகுதியில் மைக்கல் கல்லூரி வீரர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்த போதிலும் அது எதிரணியை வீழ்த்த போதுமாக அமைந்திருக்கவில்லை. முடிவில் போட்டியை 56:65 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய கம்பஹா போட்டியின் அரையிறுதியில் விளையாடும் அணியாகவும் தம்மை பதிவு செய்து கொண்டது.


 மட்டக்களப்பு நீல அணி எதிர் காலி

குழு B இல் திறமைமிக்க அணிகளில் ஒன்றான மட்டக்களப்பு நீல அணியும் பெரும்பாலான இளம் வீரர்களைக் கொண்ட காலி அணியும் மோதிக்கொண்ட வெபர் கிண்ணத்தின் இறுதிக் குழுநிலை ஆட்டமான இந்த போட்டியில் ஆரம்பம் முதலே மட்டு வீரர்களின் ஆதிக்கமே காணப்பட்டது.

போட்டியின் முதல் கால்பகுதியில் அதிக முயற்சிகளை மேற்கொண்ட மட்டக்களப்பு நீல அணியினர் இக்கால்பகுதியை 21:08 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிக் கொண்டனர்.

இரண்டாம், மூன்றாம் கால்பகுதிகளிலும் இந்நிலைமை தொடர்ந்தது. பலமான பின்களமொன்றினை கொண்டிராத காலி அணியினரை தாண்டி இலகுவாக மட்டக்களப்பு நீல அணியினர் புள்ளிகளை சேகரித்தனர்.

போட்டியின் இறுதிக் கால்பகுதியில் காலி அணி சிறப்பாக செயற்பட்ட போதிலும் முன்னைய கால்பகுதிகளில் விட்ட தவறுகள் 76:50 என்ற புள்ளிகள் கணக்கில் மட்டக்களப்பு நீல அணி வெற்றி பெற போதுமாக அமைந்தது.

நடைபெற்ற குழுநிலைப் போட்டிகளின் அடிப்படையில் தத்தமது குழுக்களில் (A, B) முதலாம் இடத்தையும், இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட அணிகள் வெபர் கிண்ண அரையிறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருந்தன.

 அரையிறுதிப் போட்டிகள்


கம்பஹா எதிர் யாழ்ப்பாணம்

குழு A இல் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பெற்றுக் கொண்ட கம்பஹாவும் குழு B இல் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட யாழ்ப்பாண அணியும் இறுதிப் போட்டியில் விளையாடும் கனவுகளுடன் தீர்மானமிக்க தொடரின் இந்த முதலாவது அரையிறுதியில் மோதியிருந்தன.

கம்பஹா அணியினர் புள்ளிகள் குவிப்பதை தொடங்கி போட்டியை ஆரம்பித்ததுடன் முதல் கால்பகுதியையும் 17:21 என்ற புள்ளிகள் கணக்கில் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டனர்.

இரண்டாவது கால்பகுதியிலும் தீவிரமாக செயற்பட்ட கம்பஹா வீரர்கள் இப்பகுதியிலும் 15 புள்ளிகளை சேர்த்து போட்டியின் முதற்பாதியில் 36:28 என்ற புள்ளிகள் கணக்கில் தொடர்ந்து முன்னிலை பெற்றனர்.

தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப்பில் ஹெட்ரிக் தங்கம் வென்ற பாலுராஜ்

தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப்…

எனினும் மூன்றாம் கால்பகுதியில் போராட்டத்தைக் காட்டிய யாழ் மாவட்ட வீரர்கள் மொத்தமாக 25 புள்ளிகளை சேர்த்து 53:52 என கம்பஹா வீரர்களுக்கு சவாலாக மாறினர்.

புள்ளிகள் சமன் என்பதால் போட்டியின் இறுதிக் கால்பகுதி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. மூன்றாம் கால்பகுதியில் காட்டிய ஆக்ரோஷ ஆட்டத்தை இந்த நேர இடைவெளியிலும் யாழ்ப்பாண வீரர்களுக்கு காட்ட முடியாமல் போனது. இதனால் 74:70 என்ற புள்ளிகள் கணக்கில் கம்பஹா அணி போட்டியை கைப்பற்றி வெபர் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் முதல் அணியாக மாறியது.


 மட்டக்களப்பு நீல அணி எதிர் மட்டக்களப்பு சிவப்பு அணி

குழு A இல் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு சிவப்பு அணியும் குழு B இல் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மட்டக்களப்பு நீல அணியும் மோதிய இந்தப் போட்டி இரண்டு அணிகளும் மைதான சொந்தக்காரர்கள் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடைபெற்றிருந்தது.

இரண்டு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே மிகவும் விரைவாக புள்ளிகள் சேர்க்கத் தொடங்கியிருந்தன. எனினும் மட்டக்களப்பு சிவப்பு அணியின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட போட்டியின் முதல் கால்பகுதியை 19:10 என்ற புள்ளிகள் கணக்கில் அவர்களே கைப்பற்றிக் கொண்டனர்.

இரண்டாம் கால்பகுதி மட்டக்களப்பு சிவப்பு அணியினருக்கு எதிர்பார்த்த விதமாக அமையவில்லை. தமது பின்களத்தில் சற்று தளர்வினை காண்பித்த காரணத்தினால் இரண்டாம் கால்பகுதி மட்டக்களப்பு நீல அணிக்கு சொந்தமானது.

போட்டியின் மூன்றாம் கால்பகுதியிலும் மட்டக்களப்பு நீல அணி சிறப்பாக செயற்பட்ட காரணத்தினால் சிவப்பு அணியை புள்ளிகளில் நெருங்கியிருந்தனர். மூன்றாம் கால்பகுதி 48:47 என்ற புள்ளிகள் கணக்கில் மட்டக்களப்பு சிவப்பு அணியின் முன்னிலையுடன் நிறைவடைந்தது.

போட்டியின் இறுதி கால்பகுதி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட, புள்ளிகள் சேர்ப்பதில் மட்டக்களப்பு நீல அணி தடுமாற்றத்தை வெளிக்காட்டியது. போட்டியில் 70:53 என்ற புள்ளிகள் கணக்கில் மட்டக்களப்பு சிவப்பு அணியினர் வெற்றி பெற்று வெபர் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இரண்டாவது அணியாக மாறினர்.