வனிந்துவின் சகலதுறை ஆட்டத்தோடு டெஸர்ட் வைப்பர்ஸ் இறுதிப் போட்டியில்

1128

இன்டர்நெஷனல் லீக் T20 தொடரின் (ILT20) முதல் குவாலிபையர் போட்டியில் வனிந்து ஹஸரங்கவின் டெஸர்ட் வைப்பர்ஸ், கல்ப் ஜயன்ஸ் அணியினை 19 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு ILT20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான முதல் அணியாகவும் மாறியிருக்கின்றது.

ILT20 தொடரின் இறுதிப் போட்டியில் விளைாடும் முதல் அணியினைத் தெரிவு செய்யும் தொடரின் முதல் குவாலிபையர் போட்டி நேற்று (08) துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றிருந்தது.

இறுதி ஓவரில் இலங்கையை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் மகளிர்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான கல்ப் ஜயன்ட்ஸ் அணியினர் முதலில் டெஸர்ட் வைப்பர் வீரர்களை முதலில் துடுப்பாடப் பணித்தனர்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய டெஸர்ட் வைப்பர்ஸ் வீரர்கள் சிறந்த ஆரம்பத்தினைப் பெறாத போதும் மத்திய வரிசை வீரர்களின் சிறப்பாட்டத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தனர்.

டெஸர்ட் வைப்பர்ஸ் அணி துடுப்பாட்டம் சார்பில் மத்திய வரிசையில் களமிறங்கிய செர்பானே ருத்தர்போட் 19 பந்துகளில் ஒரு பௌண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கலாக 37 ஓட்டங்கள் எடுக்க ஏனைய மத்திய வரிசை வீரரான வனிந்து ஹஸரங்க 20 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 31 ஓட்டங்கள் பெற்றார்.

அதேவேளை கல்ப் ஜயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கல்ப் ஜயன்ட்ஸ் அணி சிறந்த ஆரம்பத்தினைப் பெற்ற போதும், முதல் பவர்பிளேயினை அடுத்து வனிந்து ஹஸரங்க கிறிஸ் லின், கொலின் டி கிரான்ட்ஹோமே ஆகியோரின் விக்கெட்டுக்களைக் கைப்பற்றி நெருக்கடியினை உருவாக்கினார். தொடர்ந்த ஆட்டத்தில் கல்ப் ஜயன்ட்ஸ் அணியினர் வெற்றிக்காக முயன்ற போதும் இறுதியில் 19.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 159 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவினர்.

கல்ப் ஜயன்ட்ஸ் அணி துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சிம்ரோன் ஹெட்மேயர் 21 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்தார்.

இதேநேரம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்த அதன்  பந்துவீச்சில் டொம் கர்ரன் 4 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்க, லூக் வூட் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ள டெஸர்ட் வைப்பர்ஸ் அணி தொடரின் இறுதிப் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12) ILT20 தொடர்  இரண்டாவது குவாலிபையர் போட்டியில் வெற்றி பெறும் அணியினை எதிர்கொள்ளவிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

டெஸர்ட் வைப்பர்ஸ் – 178/7 (20) செர்பானே ருத்தர்போர்ட் 37(19), வனிந்து ஹஸரங்க  31(20), கிறிஸ் ஜோர்டன் 40/3(4)

கல்ப் ஜயன்ட்ஸ் – 159 (19.4) சிம்ரோன் ஹெட்மேயர் 36(21), டொம் கர்ரன் 31/4(4), வனிந்து ஹஸரங்க 31/4(4)

முடிவு – டெஸர்ட் வைப்பர்ஸ் 19 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<