வனிந்து ஹஸரங்கவிற்கு உபாதை?

836

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க உபாதைக்கு ஆளாகியிருப்பதாக மிகவும் நம்பந்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

வனிந்து ஹஸரங்க IPL போட்டிகளில் இந்தப் பருவத்தில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்திருந்தார். எனினும் ஹஸரங்க றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் பங்கேற்றிருக்கவில்லை.

>>ICC டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஹேஷல்வூட் ஆடுவாரா?<<

தற்போது இந்த ஆண்டுக்கான IPL தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்திருக்க றோயல் செலஞ்சர்ஸ் அணி பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாக தமக்கு இருந்த இறுதி வாய்ப்பினை குஜராத் டைடன்ஸ் அணியுடனான போட்டியில் கிடைத்த தோல்வியினால் தவறவிட்டிருக்கின்றது.

விடயங்கள் இவ்வாறு இருக்கும் நிலையிலையே வனிந்து ஹஸரங்கவின் உபாதை தொடர்பான செய்தியும் வெளியாகியிருக்கின்றது. வனிந்து ஹஸரங்க இல்லாத நிலையில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தமது இறுதி மூன்று லீக் போட்டிகளிலும் நியூசிலாந்தினைச் சேர்ந்த சகலதுறைவீரர் மைக்கல் பிரஸ்வெலினை உபயோகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் அணியுடன் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருக்கின்றது. இந்த தொடருக்கான உத்தேச குழாத்தில் வனிந்து ஹஸரங்க உள்ளடக்கப்பட்டிருந்தார்.

எனவே வனிந்து ஹஸரங்கவின் உபாதை உறுதியாகும் சந்தர்ப்பத்தில் அவர் இலங்கை – ஆப்கான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் விளையாடுவதிலும் சந்தேகம் நிலவுகின்றது.

இலங்கை அணியின் நம்பிக்கைகுரிய பந்துவீச்சாளராக சுழல்பந்து சகலதுறை வீரராக மாறியிருந்த வனிந்து ஹஸரங்கவின் உபாதை ஒரு பக்கமிருக்க, அவர் அண்மைக்காலமாக கிரிக்கெட் போட்டிகளில் சுமாரான ஆட்டத்தினையே வெளிப்படுத்தி வருகின்றார்.

கடந்த IPL பருவத்தில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக மாறியிருந்த வனிந்து ஹஸரங்க இம்முறை 8 போட்டிகளில் வெறும் 09 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்றியிருப்பதோடு, துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்கத் தவறியிருக்கின்றார்.

>>சதங்களில் சாதனை படைத்த விராட் கோஹ்லி<<

இதேவேளை, இலங்கை அணிக்காக இறுதியாக விளையாடிய ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் வனிந்து ஹஸரங்க விக்கெட்டுக்களை கைப்பற்ற தவறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே வனிந்து ஹஸரங்க இலங்கை அணிக்காக மீண்டும் ஆடும் போது சிறந்த மீள் வருகை ஆட்டமொன்றினை வெளிப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<