ஐ.பி.எல் 2019 முதல் போட்டியில் விராட் கோஹ்லி – எம்.எஸ் டோனி மோதல்

247
Image Courtesy - Hindustan Times

2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளுக்கான முதற்கட்ட போட்டி அட்டவணையானது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஐ.பி.எல் தொடரானது மார்ச் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

லீக் போட்டித் தொடர்களை பொருத்த வரையில் இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அங்கீகாரத்துடன் வருடா வருடம் நடைபெற்றுவரும் இந்த போட்டிகளுக்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகின்றது.

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் காலப்பகுதிகளில் ஐ.சி.சி இன் சர்வதேச தொடர்கள் நடைபெறுவதும் மிக அரிதாகவே காணப்படுகின்றது. பணம் கோடி கோடிகளாக கொட்டப்படுகின்ற ஒரு விளையாட்டாகவும் இந்த ஐ.பி.எல் போட்டித் தொடர் அமைந்துள்ளது.

2008 ஆம் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் கடந்த ஆண்டு வரை 11 தடவைகள் நடைபெற்றுள்ளது. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 3 தடவைகளும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 தடவைகளும், ராஜஸ்தான் ரோயல்ஸ், டெகான் சார்ஜஸ் மற்றும் சன் ரைஸஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் 1 தடவையும் சம்பியன் மகுடத்தை சூடியுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 12 ஆவது பருவகாலத்துக்கான தொடர் இந்தாண்டு (2019) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளை போன்று இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தொடரானதும் இந்தியாவில் நடைபெறுமா அல்லது தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுமா என்ற சந்தேகம் ஐ.பி.எல் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி முழுமையான ஐ.பி.எல் போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது அறிவிப்பு ஒன்றை விடுத்து குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. இருந்தாலும் போட்டி அட்டவணையானது இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கப்படவில்லை.

எனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டித்தொடருக்கான அட்டவணையை இன்று (19) வெளியிட்டுள்ளது. இவ்வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணை மாத்திரமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே முழுமையான போட்டி அட்டவணை வெளியிடப்படுமெனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இலங்கை அணிக்காக விளையாட கிடைத்தமை அதிஷ்டம்: லசித் எம்புல்தெனிய

அதன்படி வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் முதல் இரண்டு வாரத்திலும் 17 போட்டிகள் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல் தொடரில் பங்குபற்றும் 8 அணிகளினது சொந்த மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

குறித்த 17 போட்டிகளில், டெல்லி கெபிடல்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகள் 5 போட்டிகளிலும், ஏனைய 6 அணிகளும் 4 போட்டிகளிலும் விளையாடவுள்ளன. டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் 3 போட்டிகளில் சொந்த மைதானத்திலும், ஏனைய அணிகள் தலா 2 போட்டிகளில் சொந்த மைதானத்திலும் விளையாடவுள்ளன.

அதன்படி 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியானது அடுத்த மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளன. குறித்த போட்டியானது சென்னையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் (2018) நடைபெற்றிருந்த ஐ.பி.எல் தொடரில் சென்னையில் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தாலும், காவேரி நதி நீர் பிரச்சினையால் பாரிய போராட்டங்கள் தமிழ் நாட்டில் இடம்பெற்றுவந்ததன் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தலால் சென்னையில் இரண்டு போட்டிகள் மாத்திரம் நடைபெற்ற நிலையில் போட்டிகள் வேறு மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

  • 23 மார்ச் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை
  • 24 மார்ச் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா
  • மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கெப்பிடல்ஸ் – மும்பை
  • 25 மார்ச் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஜெய்பூர்
  • 26 மார்ச் – டெல்லி கெப்பிடல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – டெல்லி
  • 27 மார்ச் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா
  • 28 மார்ச் – ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூரு
  • 29 மார்ச் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – ஹைதராபாத்
  • 30 மார்ச் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் மும்பை இந்தியன்ஸ் – மொஹாலி
  • டெல்லி கெப்பிடல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி
  • 31 மார்ச் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் எதிர் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் – ஹைதராபாத்
  • சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – சென்னை
  • 01 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் டெல்லி கெப்பிடல்ஸ் – மொஹாலி
  • 02 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் – ஜெய்பூர்
  • 03 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – மும்பை
  • 04 ஏப்ரல் – டெல்லி கெப்பிடல்ஸ் எதிர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – டெல்லி
  • 05 ஏப்ரல் – ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூரு

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<