கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார் கோலி

ICC T20 World Cup 2022

122

T20 உலகக் கி;ண்ணத் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை பின்தள்ளி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் துடுப்பாட்டாத்தில் பிராகாசித்த விராட் கோலி, 44 பந்துகளில் 62 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன்மூலம் T20 உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருந்த கிறிஸ் கெய்லை (965 ஓட்டங்கள்) பின்னுக்குத் தள்ளி விராட் கோலி (989 ஓட்டங்கள்) இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவரான விராட் கோலி ஒரே உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.

அதேபோல, அவர் நடப்பு உலகக் கிண்ணத் தொடரிலும் 2 அரைச் சதங்களை விளாசி அசத்தி வருகிறார். இவர் தற்போது வரை 23 T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி 989 ஓட்டங்னளைக் குவித்துள்ளார். எனவே இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தனவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன 2014 T20 உலகக் கிண்ணத்தில் கடைசியாக விளையாடினார். T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார். இவர் 31 T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடி 1016 ஓட்டங்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். அத்துடன் T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் 7 முறை அரைச் சதம் கடந்து அசத்தியுள்ளார்.

எனவே, மஹேவ ஜயவர்தனவின் சாதனையை முறியடிக்க விராத் கோலிக்கு இன்னும் 27 ஓட்டங்களே தேவைப்படுகின்றன.

முன்னதாக 2014 (319 ஓட்டங்கள்), 2017 (273 ஓட்டங்கள்) T20 உலகக் கிண்ணத் தொடர்களில் அதிக ஓட்டங்களைக் குவித்து தொடர் நாயகன் விருதையும் விராட் கோலி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன், T20 உலகக் கிண்ணத் தொடரில் 2 முறை தொடர் நாயகன் விருதைப் பெற்ற ஒரே வீரர் கோலி என்பதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா தற்போது வரை 35 T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி 904 ஓட்டங்களைக் குவித்து 4ஆவது இடத்தில் உள்ளார். எனவே, நடப்பு T20 உலகக் கிண்ணத் தொடரில் இவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்து முன்னேறும் வாய்ப்பு உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<