பென் பொக்ஸின் கன்னி அரைச்சதத்தோடு இங்கிலாந்து அணி வெற்றி

156
AFP

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

உலகக் கிண்ணத்திற்கு தயராகி வரும் இங்கிலாந்து அணி அதன் ஒரு கட்டமாக அயர்லாந்து அணியுடன் மோதிய இந்த ஒரு நாள் போட்டி, டப்லின் நகரில் நேற்று (3) ஆரம்பமாகியது.

போட்டி நடைபெற்ற மைதானம் ஈரலிப்பாக காணப்பட்ட காரணத்தினால், ஆட்டம் அணிக்கு 45 ஓவர்கள் கொண்டதாக அமைந்திருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

உலகக் கிண்ணத்தில் சுற்றாடல் காப்பிற்கான ஜேர்சியை பயன்படுத்தவுள்ள இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் பயன்படுத்தவுள்ள…

இப்போட்டியில் அயர்லாந்து அணி சார்பாகவும், இங்கிலாந்து அணி சார்பாகவும் மூன்று அறிமுக வீரர்கள் உபயோகப்படுத்தப்பட்டிருந்தனர். அதன்படி அயர்லாந்து அணி சார்பாக லோர்கன் டக்கர், மார்க் ஏடைர், ஜோஸுவா லிட்டில் ஆகியோர் தமது கன்னி ஒரு நாள் சர்வதேச போட்டியில் விளையாடியதோடு, இங்கிலாந்து அணி சார்பில் பென் பொக்ஸ், டேவிட் மாலன், ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளின் அறிமுகத்தினைப் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் போட்டியின் துடுப்பாட்டத்தினை அயர்லாந்து அணி நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக ஆரம்பம் செய்தது. அயர்லாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த அதன் அணித்தலைவர் வில்லியம் போடர்பீல்ட், போல் ஸ்ட்ரிலிங் ஆகியோர் நல்ல ஆரம்பத்தை தந்த போதிலும் டொம் கர்ரனின் பந்துவீச்சினால் அயர்லாந்து அணி தமது முதல் விக்கெட்டினை பறிகொடுத்தது. அயர்லாந்து அணியின் முதல் விக்கெட்டாக ஓய்வறை நடந்த போல் ஸ்ட்ரிலிங் 33 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

ஸ்ட்ரிலிங்கின் விக்கெட்டினை அடுத்து அயர்லாந்து அணியின் மற்றைய விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தன. இதன்படி, அயர்லாந்து அணியின் இரண்டாம் விக்கெட்டாக வில்லியம் போடர்பீல்ட் 17 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேற, அவரை அடுத்து அயர்லாந்து அணிக்கு நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட அன்ட்ரூ பல்பைரின் விக்கெட்டும் 29 ஓட்டங்களுடன் பறிபோனது.

பின்னர் அயர்லாந்து அணி, தமது சரிவிலிருந்து மீளாத நிலையில் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 198 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

அயர்லாந்து அணியின் துடுப்பாட்டத்தில் பின்வரிசையில் துடுப்பாடிய மார்க் அடைர் 2 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 32 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதேநேரம் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் லியம் ப்ளன்கெட் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சுருட்ட, டொம் கர்ரன் 3 விக்கெட்டுக்களை தனதாக்கியிருந்தார்.

இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் குறைந்த  199 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றம் காட்டியது.

தென்னாபிரிக்க தொடரைப் போல உலகக் கிண்ணத்திலும் பிரகாசிப்பேன் – இசுறு உதான

இலங்கை அணிக்காக 2012 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2009 ஆம் ஆண்டு….

இப்படியாக இங்கிலாந்து அணி, ஒரு கட்டத்தில் 101 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய போதிலும் பென் பொக்ஸ் மற்றும் டொம் கர்ரன் ஆகியோர் பொறுமையான முறையில் துடுப்பாடி நம்பிக்கை தந்தனர்.

தொடர்ந்து இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவிகள் கைகொடுக்க இங்கிலாந்து அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 42 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் பறிகொடுத்த நிலையில் 199 ஓட்டங்களுடன் அடைந்தது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிய பென் பொக்ஸ் தனது கன்னி சர்வதேச போட்டியிலேயே அரைச்சதம் பதிவு செய்து 76 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், டொம் கர்ரன் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் இப்போட்டியிலேயே சர்வதேச அறிமுகத்தினைப் பெற்ற, ஜோஸூவா லிட்டில் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி எதிரணிக்கு அழுத்தம் தந்திருந்த போதிலும் அது வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் பென் பொக்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

அயர்லாந்து – 198 (43.1) – போல் ஸ்டிரிலிங் 33, மார்க் ஏடைர் 32, லியம் ப்ளன்கெட் 35/4, டொம் கர்ரன் 35/3

இங்கிலாந்து – 199/6 (42) – பென் பொக்ஸ் 61*, டொம் கர்ரன் 47*, ஜோஸூவா லிட்டில் 45/4

முடிவு – இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<