இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக விக்டோரியா லக்ஷ்மி

133

இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக விக்டோரியா லக்ஷ்மி தெரிவாகியுள்ளார்.

இலங்கை வலைபந்தாட்ட சங்கத்துக்காக எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு (2022-24) புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் தேர்தல் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் (31) நடைபெற்றது.

32 அங்கத்துவ சங்கங்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இத்தேர்தலில் தேசிய சேவைகள் வலைபந்தாட்ட சங்கம் சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விக்டோரியா லக்ஷ்மி 21 வாக்குகளை பெற்றுக்கொள்ள, அவரை எதிர்த்து மேல் மாகாண வலைபந்தாட்ட சங்கம் சார்பாக போட்டியிட்ட க்லெரில் டோசருக்கு 11 வாக்குகளும் கிடைத்தன.

இதன்படி, வலைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ஆசிய வலைபந்தாட்ட சங்கத்தின் உதவித் தலைவருமான லக்ஷ்மி விக்டோரியா 10 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும் இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக தெரிவாகினார்.

இதற்கு முன் இரண்டு தடவைகள் இவர் இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, செயலாளர் பதவிக்கு மூவர் போட்டியிடுவதாக இருந்தது. எனினும் இரத்தினபுரி மாவட்ட வலைபந்தாட்ட சங்க பிரிதிநிதி ஷிரோமி குருப்பு வாபஸ் பெற்றதால் இருவருக்கு இடையில் போட்டி இடம்பெற்றது.

இதன்படி, இரத்தினபுரி மாவட்ட வலைபந்தாட்ட சங்கத்தின் பி. டி. சுமித்ராவை 20 – 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட கேகாலை மாவட்ட வலைபந்தாட்ட சங்க பிரதிநிதி விந்தனா தயாரட்ன புதிய செயலாளராகத் தெரிவானார்.

இதேவேளை, உதவி செயலாளர் பதவிக்கு வவுனியா மாவட்ட வலைபந்தாட்ட சங்கம் சார்பாக நிதர்சனா குலேந்திரன் போட்டியின்றி தெரிவானார். இவர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆசிரியை ஆவார்.

இப் பதவிக்கு போட்டியிடவிருந்த களுத்துறை மாவட்ட வலைபந்தாட்ட சங்கத்தின் பத்மா குணவர்தன கடைசி நேரத்தில் வாபஸ் பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இதனை அடுத்தே நிதர்சனா உதவி செயலாளராக போட்டியின்றி தெரிவானார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையானது ஐந்து பதவிகளைக் கொண்டதாக. மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு வலைப்பந்தாட்ட சங்க பிரிதிநிதி பத்மினி ஹொரணகே பொருளாளராக தெரிவாக, தேசிய சேவைகள் வலைபந்தாட்ட சங்க பிரதிநிதி லயானி ரேணுகா உப பொருளாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனிடையே, உதவித் தலைவராக நிரோதா அபேவிக்ரம (இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கத் தலைவர்), உதவி பொருளாளராக லயனி ரேனுகா குருப்பு ஆகியோர் தெரிவாகினர்.

இது இவ்வாறிருக்க, தேர்தலில் தலைவர் பதவிக்க மூன்று வேட்புமனுக்கள் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சங்கங்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல்கள் குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய அதிகாரிகள்:

தலைவர் – விக்டோரியா லக்ஷ்மி

செயலாளர் – விந்தனா தயாரட்ன

பொருளாளர் – பத்மினி ஹொரணகே

உதவி செயலாளர் – நிதர்சனா குலேந்திரன்

உதவி பொருளாளர் – லயானி ரேணுகா

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<