லூசியனாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த திருச்சபை ஊழியர்களில் ஒருவரான போற்றுதலிற்குரிய அருட்தந்தை இயூஜின் ஹேர்பேர்ட் அவர்கள் இலங்கையின் கூடைப்பந்தாட்டத்திற்கு வழங்கிய சேவைகள் எண்ணிலடங்காதவை. ஹேர்பேர்ட் அவர்கள் மக்களை கடவுளின் பக்கம் அழைத்ததோடு மட்டுமன்றி, விளையாட்டில் ஆர்வம் காட்டிய இளம் வீரர்களிற்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து பல உதவிகளை புரிந்திருக்கின்றார். 

Rev.Fr. Eugene Herbert SJ
அருட்தந்தை இயூஜின் ஹேர்ப்பேர்ட் அவர்கள்

இயூஜின் ஜோன் ஹேர்பேர்ட் எனும் இயற்பெயருடைய அருட்தந்தை அவர்கள் 1923ஆம் ஆண்டு அமெரிக்காவின் லூசியனா மாநிலத்தில் பிறந்தவராவார். இயூஜின் அவர்களின் குடும்பம் எண்ணெய் வியாபாரத்தில் வல்லமை வாய்ந்து அப்போது காணப்பட்டிருந்தது. தனது இளமைக்காலத்திலேயே அளவிட முடியாத கடவுள் பக்தியினைக் கொண்டிருந்த இயூஜின் தன்னை 17ஆவது வயதிலேயே திருச்சபைப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டதோடு, அந்த தருணத்தில் இருந்தே கத்தோலிக்க தேவாலயங்களில் ஆராதனைகளில் ஈடுபடத் தொடங்கினார். இளைஞராக இருந்த இயூஜினிற்கு மதகுருவாக மாறும் சந்தர்ப்பம் 1954ஆம் ஆண்டளவில் கிட்டியிருந்தது. இது நடந்து ஒரு வருடத்தின் பின்னர் இந்து சமுத்திரத்தின் முத்தான இலங்கைக்கு பாதிரியார் தனது வருகையினை மேற்கொண்டு இருந்தார்.

புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணியுடன் தந்தை இயூஜின் அவர்கள்

இலங்கைக்கு வந்து பதினாறு வருடங்களின் பின்னர், 1971 இல் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியில் இருந்து மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுக்கொண்ட தந்தை, அதன் மூலம் கூடைப்பந்து மீதான தனது ஈடுபாட்டினால் மட்டு நகரில் அவ்விளையாட்டிற்கு ஒளி விளக்கேற்றி வைத்தார்.

புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணியுடன் தந்தை இயூஜின் அவர்கள்

இயூஜின் அவர்களின் வருகை காரணமாக, புனித மைக்கல் கல்லூரியின் விளையாட்டுத்துறை அதிதுரித வளர்ச்சியினை எட்டியிருந்தது. 13 தொடக்கம் 19 வரையிலான வயதுப்பிரிவுகளிற்குள்ளான மாணவர்களுக்கு பயிற்றுவிப்புக்களை வழங்கத்தொடங்கிய இயூஜின், 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1990ஆம் ஆண்டு வரை கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து விளையாட்டின் பொற்காலத்தில், பல வெற்றிக்கேடயங்களை புனித மைக்கல் கல்லூரி வெல்வதற்காக பெரும்பங்காற்றியிருந்தார்.

புனித மைக்கல் கல்லூரியானது தேசிய அளவிலான கனிஷ்ட சம்பியன்ஷிப் பட்டங்களை ஆறு தடவைகள் வெற்றியீட்டியுள்ளதோடு 1986, 1987 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் சம்பியன் ஆகவும் தமது நாமத்தை பதிவு செய்திருக்கின்றது. இவ்வாறனதொரு சாதனையை இலங்கையில் இதுவரை எந்த அணியினராலும் நெருங்கக்கூட முடியாதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்றின் மூலம் அருட்தந்தை அவர்கள் இல்லாது போன காரணத்தினால், மைக்கல் கல்லூரி மட்டுமல்லாது இலங்கையின் முழு கூடைப்பந்தாட்ட துறையுமே பாரிய இழப்பு ஒன்றினை சந்தித்திருந்தது.

அருட்தந்தை ஹேர்பேர்ட் அவர்கள் இற்றைக்கு 26 வருடங்களின் முன்னர் வாழைச்சேனையை அண்மித்த பகுதியில் ஏற்பட்டிருந்த இனமுறுகல் நிலையொன்றின் போது, தனது ஸ்கூட்டி வகை துவிச்சக்கர வண்டியில் தேவாலயத்தில் இருந்து வீடு திரும்புகையில் காணாமல் போயிருந்தார். ஹேர்பேர்ட் அடிகளை கடைசியாக மட்டக்களப்பு “மீன்பாடும் வாவி” இற்கு அண்மையாக இருந்த பாதையில் இறுதியாக கண்டதாக சாட்சிகள் மூலம் தெரியவருகின்றன.

பாதிரியாரை நினைவு கூறும் விதமாக, புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர்கள் 2011ஆம் ஆண்டிலிருந்து ஹேர்பேர்ட் நினைவுக் கிண்ணத்திற்கான இந்த கூடைப்பந்தாட்டத் தொடரை ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றனர்.

இத்தொடர் ஆறாவது தடவையாக இம்முறை மட்டக்களப்பு மைக்கல் கல்லூரியில் இந்த மாதம் ஏப்ரல் 28ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணியுடன் தந்தை இயூஜின் அவர்கள்

இதுவரை நடந்திருக்கும் தொடரின் ஐந்து வருட போட்டிகளிலும் இரண்டு தடவைகள் கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகமும், HSC ப்ளூஸ் அணியினரும் சம்பியன்களாக முடிசூடியுள்ளனர். கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகமானது 2012ஆம் ஆண்டில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது. மீண்டும் 2016ஆம் ஆண்டு இலங்கை இராணுவப்படையினை வீழ்த்தி சம்பியன் ஆகியிருந்தது.

HSC ப்ளூஸ் அணியினர் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இத்தொடரில் தொடர்ச்சியான சம்பியன்களாக முடிசூடியிருந்தனர். இந்த இரண்டு தடவைகளிலும் இலங்கை விமானப்படை அணியினரை வீழ்த்தியே அவ்வெற்றி அவ்வணியினரால் பெறப்பட்டிருந்தது.

தொடரினை நடாத்தும் மட்டக்களப்பு அணியானது 2015ஆம் ஆண்டில் இணைந்த மாகாண பல்கலைக்கழக அணியினரை வீழ்த்தி ஒரு தடவை மாத்திரம் சம்பியனாக தெரிவாகியுள்ளது.

Colombo District Basketball Club after winning the trophy in 2016
2016 ஆம் ஆண்டில் ஹேர்ப்பேர்ட் கிண்ணத்தினை வெற்றிக்கொண்ட கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணியினர்

இக்கூடைப்பந்து தொடரானது, பங்குபெறும் வீரர்களுக்கு எப்போதும் சவாலான ஒரு தொடராகவே காணப்படுவதோடு, இறுதி வரை போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாத அளவிற்கு விறுவிறுப்பானதாகவும் இருக்கும்.

இத்தொடரில் பல வீரர்கள் சாதனைகளை மேற்கொண்டிருப்பினும் இத்தொடரில் வருடா வருடம் சிறந்த ஆட்டத்தினை ஒவ்வொரு பிரிவிலும் வெளிக்காட்டிய மூன்று வீரர்களின் பெயர்கள் கீழ்வருமாறு:

 

வருடம் பெறுமதி மிக்க வீரர் சிறந்த தாக்குதல் வீரர் சிறந்த தற்காப்பு வீரர்
2012 ரொஷான் பெர்னாந்து ஹர்ஷதேவ டி சில்வா
2013 மிக். I. வெனிட்டோ வஹீஷன் சண்முகலிங்மன் T. திமோத்தி
2014 ரொஷான் ரன்திம ஓசந்த அமரசேன வஹீஷன் சண்முகலிங்கம்
2015 திமோத்தி நிதுஷன் இக்னேஷியஸ் வெனிட்டோ தெர்ரன்ஸ் நெய்டோர்ப்
2016 சரித் பெரேரா சரித் பெரேரா பவன் கமகே
HSC Blues after winning the trophy in 2015
2015 ஆம் ஆண்டுத் தொடரில் கிண்ணத்தை வென்ற HSC ப்ளூஸ் அணி

ஆறாவது முறையாக இந்த தடவை இடம்பெறவிருக்கும் இத்தொடரில் கிண்ணத்தினை வெல்லும் நோக்கில் இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ், இலங்கை கடற்படை , யாழ்ப்பாணம், முத்துவல் கூடைப்பந்தாட்ட கழகம், மொரட்டுவ கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றின் அணிகள் பங்கேற்கின்றன.

தொடரின் நடப்புச் சம்பியனான கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணியினர் இம்முறை தொடரில் பங்கேற்காத காரணத்தினால், இம்முறை இத்தொடரில் ஆதிக்கத்தினை இலங்கை விமானப்படை அணியினர் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், அண்மையில் விமானப்படை அணியானது 51ஆவது தடவையாக இடம்பெற்றிருந்த சிரேஷ்ட அணிகளுக்குரிய தேசிய மட்டப் போட்டிகளில் சம்பியனாக முடிசூடியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத்தீவின் கிழக்கு கடல் சொர்க்கம் என அழைக்கப்படும் கிழக்கின் பிரதான நகரங்களில் ஒன்றான மட்டக்களப்பில் இருந்து பல வருடங்களாக கூடைப்பந்தாட்ட துறைக்காக தேசிய அணிக்கு வீரர்கள் பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

விளையாட்டுக்காக தமெக்கன தனித்துவமான பாணிகளை கொண்டிருக்கும் மட்டு நகரில் மாத்திரமே விளையாட்டுக்களை பார்ப்பதற்கு பார்வையாளர்களிமிடமிருந்து கட்டணம் அறவிடும் முறை இருக்கின்றது. எனினும் போட்டியினை காண வரும் இரசிகர்களை நோக்குமிடத்து கட்டணங்களால் சோர்வடையாத ஒரு பார்வையாளர் பட்டாளத்தினையே எம்மால் மீன்பாடும் தேன் நாட்டில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

முன்னாள் அருட்தந்தை இயூஜின் அவர்களின் நினைவிற்காக எட்டு அணிகள் தம்மிடையே இம்முறை அந்த ஒரு சம்பியன் யார் என அறிவதற்காக ஹேர்பேர்ட்  கிண்ணத்துக்காக மோதுகின்றன.

இக்கட்டுரையினை வடிவமைக்க தகவல்களை தந்து உதவியாய் இருந்த வள்ளுவன் லோகேக்திராவிற்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

குறிப்பு: Fr. Herbert Cup from 29th April in Batticaloa (Rex Clementine – The Island)

புகைப்பட உதவி: புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட சங்கம்