குண்டெறிதலில் கிழக்குக்கு பெருமையை தேடிக் கொடுத்த அய்மன்: ரிஹானுக்கு வெள்ளிப் பதக்கம்

120

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளின் மூன்றாம் நாளான இன்று (01) கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மைதான நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட மட்டக்களப்பு, வாழைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தின் ஏ.ஆர்.ஏ அய்மன், ஆண்களுக்கான குண்டெறிதலில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அத்துடன், அண்மைக்காலமாக தேசிய மட்ட கனிஷ்ட போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற கிண்ணியா மத்திய கல்லூரியைச் சேர்ந்த எச்.எம் ரிஹான் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இன்று காலை நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதலில் பங்குகொண்ட மட்டக்களப்பு அந்நூர் மகா வித்தியாலயத்தின் ஏ.ஆர்.ஏ அய்மன், 15.03 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு மருதானை புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த நவீன் விஸ்வஜித்தினால் நிலைநாட்டப்பட்ட (13.55 மீற்றர்) சாதனையை சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அய்மன் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மட்டகளப்பு வலயத்தில் உள்ள முன்னணி தமிழ் பேசுகின்ற பாடசாலைகளில் ஒன்றான வாழைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயம் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் பெற்றுக்கொண்ட முதலாவது பதக்கமும் இதுவாகும்.

இது இவ்வாறிருக்க, இம்முறை நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலை மட்டப் போட்டிகளில் பங்குகொண்டு 11.90 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்ற அய்மன், மட்டக்களப்பு வலயத்தின் அதிசிறந்த வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், வாழைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியராக ஆர். அலோஜிதன் செயற்பட்டு வருவதுடன், விளையாட்டுத்துறைப் பயிற்சியாளராக முன்னாள் தேசிய கபடி வீரரான பி.ரி ப்ரதீப் செயற்பட்டு வருகின்றார்.

குறித்த போட்டியில் 14.38 மீற்றர் தூரத்தை வீசி முன்னைய போட்டிச் சாதனையை முறியடித்த மருதானை புனித ஜோசப் கல்லூரியின் இவானோ வைட் மற்றும் ஹொரனை தக்ஷிலா கல்லூரியைச் சேர்ந்த கிஹான் தத்ஷர ஆகிய இருவரும் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

அத்துடன், அதே 14.38 மீற்றர் தூரத்தை எறிந்து முன்னைய போட்டிச் சாதனையை முறியடித்த யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் அறிமுக வீரரான ஏ. தாஷன் சுகிட்சன் நான்காவது இடத்தைப் பெற்று ஆறுதல் அடைந்தார்.

ரிஹானுக்கு வெள்ளிப் பதக்கம்

கிண்ணியா மத்திய கல்லூரியைச் சேர்ந்த மொஹமட் ரிஹான், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். போட்டியில் அவர் 58.86 மீற்றர் தூரத்தை எறிந்தார்.

இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் திருகோணமலை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட ரிஹான், தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியிருந்தார்.

2016ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்குபற்றி வந்த ரிஹான், 2016, 2017 ஆகிய வருடங்களில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

எனினும், 2018ஆம் ஆண்டு தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 4ஆவது இடத்தையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், உயர்தரம் கற்பதற்காக கடந்த வருடம் முதல் கிண்ணியா மத்திய கல்லூரியில் இணைந்து கொண்ட ரிஹான், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஹானின் பயிற்சியாளராக முன்னாள் தேசிய வீரரும், சர்வதேச மட்டப் பதக்கங்களை வென்றவருமான கே.எம் ஹாரீஸ் மற்றும் குணாளன் ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.  

இது இவ்வாறிருக்க, இன்று நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பண்டாரயநாயக்க கல்லூரியைச் சேர்ந்த டி. ரணசிங்க (59.66 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆர். வந்துஆராச்சி (58.20 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டனர். 

இதேநேரம், குறித்த போட்டியில் பங்குகொண்ட யாழ். அத்தியர் இந்து கல்லூரியைச் சேர்ந்த ஆர். ரேகன் (52.23 மீற்றர்) 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<