தடகள மன்னன், ஓய்வுபெற்ற உசைன் போல்ட்டுக்கு சொந்த மண்ணான ஜமைக்காவில் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது. மறுமுனையில் உலக கால்பந்து அரங்கின் நட்சத்திர ஜாம்பவானான லியொனல் மெஸ்சியின் உருவச்சிலை 2 ஆவது தடவையாகவும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
உலக மெய்வல்லுனர் அரங்கில் மின்னல் வேக வீரரான 31 வயதுடைய போல்ட், 100 மீற்றர் ஓட்டத்தை 9.58 செக்கன்களிலும், 200 மீற்றர் ஓட்டத்தை 19.19 செக்கன்களிலும் ஓடி முடித்து உலக சாதனை படைத்தார்.
ஜமைக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட போல்ட், 2008 பீஜிங், 2012 லண்டன் மற்றும் 2016 றியோ ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களையும், 11 உலக சம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்று அசத்தியிருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருடன் சர்வதேச அரங்கிலிருந்து விடைபெற்றார். இதனிடையே, உசைன் போல்ட்டுக்கு ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் சர்வதேச மைதானத்துக்கு முன்னால் முதற் தடவையாக முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் தான் உசைன்போல்ட், தனது 15 வருடங்களுக்கு முன் தேசிய சம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டிகளில் முதற் தடவையாக களமிறங்கி 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சர்வதேச மெய்வல்லுனர் அரங்கிற்கு காலடி எடுத்துவைத்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்றதும், அவர் வெளிப்படுத்துகின்ற உடல் சைகையை போன்று அமைக்கப்பட்ட இந்த சிலையை ஜமைக்கா பிரதமர் ஆன்ட் ஹோல்னஸ் நேற்று முன்தினம் (04) திறந்துவைத்தார். ஜமைக்காவின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு போல்ட் மிகப்பெரிய சேவையாற்றியதாகவும் அவரது உரையின் போது தெரிவித்தார்.
இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமில் வட மாகாண வீரர் நெப்தலி ஜொய்சன்
ஜமைக்காவின் பிரபல கலைஞரான பசில் வொட்சனினால் வடிவமைக்கப்பட்டுள்ள முழுவதும் வெண்கலத்தினாலான இந்த உருவச்சிலைக்கு, மின்னல் போல்ட் என பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து உசைன் போல்ட் கருத்து வெளியிடுகையில், ”எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக இதைக் கருதுகிறேன். என்னுடைய மெய்வல்லுனர் வாழ்க்கையை ஆரம்பித்த மைதானத்துக்கு முன்னால் உருவச்சிலையொன்று வைப்பதென்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. உண்மையில் எனது வாழ்க்கையில் இது சிறந்த தருணமாக அமையவுள்ளது. இதற்காக ஜமைக்க நாட்டு மக்களுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.
மெஸ்சியின் உருவச்சிலைக்கு மீண்டும் சேதம்
ஆர்ஜென்டீனாவில் அமைக்கப்பட்டுள்ள பிரபல கால்பந்து வீரரான லியொனல் மெஸ்சியின் உருவச்சிலை இரண்டாவது தடவையாகவும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் தலைவரும், பிரபல பார்சிலோனா கழகத்தின் நட்சத்திர வீரருமான 30 வயதுடைய மெஸ்சி, உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 5 தடவைகள் வென்றெடுத்தார். 2014 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு சர்வதேச கால்பந்து அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக மெஸ்சி அறிவித்தார். இதனையடுத்து கடந்த வருடம் ஜுன் மாதம் அவருக்கு பியுனஸ் ஏர்சிலில் (Buenos Aires) உருவச்சிலை வைக்கப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டது.

தற்போது விஷமிகள் சிலர், மீண்டும் மெஸ்சியின் உருவச்சிலையின் கால்களை உடைத்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். இவ்வாறு உடைக்கப்பட்ட சிலையின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகின்றது. இதற்கு பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும், குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






















