புதிய தலைவரின் கீழ் தென்னாபிரிக்காவினை எதிர்கொள்ளும் மே.இ.தீவுகள்

52

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுடன் விளையாடவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் மேற்கிந்திய தீவுகளின் தலைவராக பிரண்டன் கிங் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

>>நட்சத்திர வீரர்களை ஒப்பந்தம் செய்த கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர்கள் பலர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்ற IPL தொடரில் பங்கேற்று வருகின்ற இந்த சந்தர்ப்பத்திலேயே புதிய தலைவர் ஒருவரின் நியமனம் இடம்பெற்றிருக்கின்றது.

இந்தப் பருவத்திற்கான IPL தொடரின் பிளே ஒப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி மாத்திரமே எஞ்சியிருக்கும் நிலையில் பிளே ஒப் சுற்றுக்கு தெரிவான அணிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ரொவ்மன் பவல் மற்றும் சிம்ரோன் ஹெட்மேயர் ஆகிய வீரர்கள் விளையாடி வருகின்றனர். அதேநேரம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக அன்ட்ரே ரஸ்ஸல் மற்றும் செர்பானே ருத்தர்போர்ட் ஆகிய வீரர்கள் ஆடுகின்றனர். இவர்கள் ஒருபக்கமிருக்க ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான அல்சாரி ஜோசேப்பும் மேற்கிந்திய தீவுகள் அணியில் இணையும் வாய்ப்பினை இழக்கின்றார்.

இதேநேரம் IPL போட்டிகளில் ஆடாமல் காணப்படும் வீரர்களில் நிகோலஸ் பூரன், ஷாய் ஹோப் ஆகியோருக்கும் தென்னாபிரிக்க T20 தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும் ஷாமர் ஜோசப் மேற்கிந்திய தீவுகள் அணியில் இணைக்கப்பட்டிருப்பதோடு IPL தொடரின் இறுதிப் போட்டிகளை கருத்திற் கொண்டு அல்சாரி ஜோசேப் மற்றும் செர்பானே ருத்தர்போர்ட் மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் இணைக்கப்பட முடியும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

T20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாக முன்னர் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளும் விளையாடவுள்ள இறுதி சர்வதேச தொடராக மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த T20 தொடரின் போட்டிகள் ஜமெய்க்காவில் இம்மாதம் 23, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் குழாம்

 

பிரண்டன் கிங் (தலைவர்), ரொஸ்டன் சேஸ், அலிக் அதனாஸே, ஜோன்சன் சார்ள்ஸ், அன்ட்ரே பிளச்சர், மெதிவ் போர்டே, ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், ஷமார் ஜோசேப், கைல் மேயர்ஸ், ஒபேட் மெக்கொய், குடகேஸ் மோட்டி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஹேய்டன் வால்ஸ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<