பிரியஞ்சனின் சதத்தோடு T20 லீக் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த தம்புள்ளை

1424

இலங்கை கிரிக்கெட் சபை மாகாண அணிகளுக்கு இடையில் ஒழுங்கு செய்திருக்கும், உள்ளூர் T20 லீக் கிரிக்கெட் தொடரின் (SLC T20 League) போட்டிகள் இன்று (21) ஆரம்பமாகியிருந்தன. தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்குபெறும் இத்தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், தம்புள்ளை அணி கண்டி அணியை 18 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கின்றது.

கொழும்பு கண்டி, காலி மற்றும் தம்புள்ளை ஆகிய நான்கு அணிகள் பங்குபெறும் இந்த T20 லீக் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் தொடங்கியிருந்தது. தொடரின் முதல் ஆட்டத்தில் தினேஷ் சந்திமால் தலைமையிலான  கொழும்பு அணி, சுரங்க லக்மால் தலைமையிலான காலி அணியை 90 ஓட்டங்களால் தோற்கடித்திருந்தது.

உபுல் தரங்கவின் கன்னி சதத்துடன் வெற்றியீட்டியது கொழும்பு

முதல் போட்டியை அடுத்து ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான தொடரின் இரண்டாவது போட்டியில் இசுரு உதான தலைமையிலான தம்புள்ளை அணியும், தசுன் சானக்க தலைமையிலான கண்டி அணியும் மோதின.

ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வென்ற இசுரு உதான முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தம்புள்ளை அணிக்காகப் பெற்றார். தம்புள்ளை அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தனுஷ்க குணத்திலக்க மற்றும் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோர் களம் வந்தனர். ரமித் ரம்புக்வெல்ல அதிரடியாக ஆடி 15 பந்துகளுக்கு 25 ஓட்டங்களை குவித்த வேளையில் தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் மற்றும் T20 தொடர்களில் நன்னடத்தை விதிமீறல் காரணமாக விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்த தேசிய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்க மெதுவான ஒரு இன்னிங்ஸினையே வெளிப்படுத்தினார். 43 பந்துகளை எதிர்கொண்ட குணத்திலக்க 3 பெளண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

எனினும், மத்திய வரிசையில் துடுப்பாடிய வலதுகை துடுப்பாட்ட வீரரான அஷான் பிரியஞ்சன் மிகவும் அதிரடியான முறையில் பெளண்டரி மழை பொழிந்து துரிதகதியில், அரைச்சதம் விளாசியதோடு தொடர்ந்தும் எதிரணியின் பந்துவீச்சாளர்களை சிதைத்து T20 போட்டிகளில் தனது கன்னி சதத்தினை பூர்த்தி செய்தார்.

பிரியஞ்சனின் அதிரடி துடுப்பாட்ட உதவியோடு தம்புள்ளை அணி, 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை குவித்தது. தம்புள்ளை அணிக்காக சதம் கடந்த பிரியஞ்சன் வெறும் 52 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்களைக் குவித்து T20 போட்டிகளில் தனது சிறந்த துடுப்பாட்டத்தினை பதிவு செய்தார்.

கண்டி அணியின் பந்துவீச்சில் இடதுகை சுழல் வீரரான மலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுக்களையும், மிக நீண்ட இடைவெளிக்குப் பின் T20 போட்டிகளில் ஆடும் லசித் மாலிங்க, சசித் பத்திரன மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இதனை அடுத்து சவால் மிகுந்த வெற்றி இலக்கான 203 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற பதிலுக்கு துடுப்பாடிய கண்டி அணிக்கு, திக்ஷில டி சில்வா மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பினை வழங்கியிருந்த போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அணியின் வெற்றிக்கு போதுமான பங்களிப்பை வழங்கியிருக்கவில்லை.

இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை மாத்திரம் பெற்று கண்டி அணி போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இளம் வீரர் யசஷ்வி ஜெய்ஸ்வாலுக்கு சச்சினின் அறிவுறை

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில், இலங்கை அணிக்காக மூன்று T20 போட்டிகளில் விளையாடியிருக்கும் திக்ஷில டி சில்வா வெறும் 38 பந்துகளுக்கு அரைச்சதம் தாண்டி 63 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 43 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

பந்துவீச்சில் தம்புள்ளை அணி சார்பாக தம்புள்ளை அணித்தலைவர் இசுரு உதான மற்றும் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான ஷெஹான் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தனர்.

ஸ்கோர் விபரம்

முடிவு – தம்புள்ளை அணி 18 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<