உலக ஆணழகன் போட்டியில் ராஜ்குமாருக்கு வெள்ளிப் பதக்கம்

534

டுபாயில் நடைபெற்ற உலக உடற்கட்டழகர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட நுவரெலியாவைச் சேர்ந்த மாதவன் ராஜ்குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். 

உலக உடற்கட்டழகர் சம்மேளனம் ஏற்பாடு செய்த 73ஆவது உலக உடற்கட்டழகர் வல்லவர் போட்டித் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் கடந்த 05ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெற்றது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 672 வீரர்கள் பங்குபற்றியிருந்த இம்முறை போட்டிகளில் இலங்கை சார்பாக 11 வீரர்கள் கலந்துகொண்டனர்.

ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் ராஜகுமாரனுக்கு வெண்கலப் பதக்கம்

சீனாவின் ஹேர்பின் நகரில் நடைபெற்ற ஆசிய….

இதில் நேற்று (09) நடைபெற்ற ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய மலையகத்தைச் சேர்ந்த மாதவன் ராஜ்குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்

நுவரெலியா மாவட்டம், லபுக்கலைத் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மாதவன் ராஜ்குமார், கடந்த வருடம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்டழகர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றவர்

இதனையடுத்து, கடந்த ஜூலை மாதம் சீனாவின் ஹேர்பின் நகரில் நடைபெற்ற ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட ராஜ்குமார் வெண்லகப் பதக்கத்தை வெற்றி கொண்டு உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார்

ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து மிகவும் ஷ்டத்துக்கு மத்தியில் தனது கல்வியைத் தொடர்ந்து ஒரு தமிழ் பேசுகின்ற வீரராக மலையகத்துக்கும், இலங்கைக்கும் பெருமையை தேடிக் கொடுத்து வந்த அவர், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குகொண்டு வெள்ளிப் பதக்கத்தினை வென்று கொடுத்தார்

மலையகத்தின் பெருமையை உலகறியச் செய்த இந்த தமிழ் இளைஞன், அனுசரணையாளர்கள் இன்றியே இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

எனவே, அவருக்கு எதிர்காலத்தில் அனுசரணையாளர்கள் கிடைக்குமாயின், உலகின் முதல்தர உடற்கட்டழகர் போட்டித் தொடரான ஆனர்ல்ட் கிளாசிக் மற்றும் மிஸ்டர் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்குபற்றும் கனவையும் அவர் நனவாக்கி கொள்வார் என்பதில் சந்தேகம் கிடையாது.

பல்வேறு ஷ்டங்கள், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் டுபாயில் நடைபெற்ற உலக உடற்கட்டழகர் வல்லவர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுத்த மாதவன் ராஜ்குமாருக்கு இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதேநேரம் ஆண்களுக்கான 65 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை வீரரான ஷகதக அமில தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்

ஆண்களுக்கான 60 மற்றும் 65 ஆகிய எடைப்பிரிவுகளில் 24 வீரர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இறுதி போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்ட 10 வீரர்களில் இலங்கையின் ஷகதக அமில மற்றும் மாதவன் ராஜ்குமார் ஆகிய இரண்டு வீரர்களும் தெரிவாகியிருந்தனர்

அத்துடன், சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு உலக உடற்கட்டமைப்பு வல்லவர் போட்டித் தொடரொன்றின் இறுதி 10 பேர் குழாத்தில் இலங்கை வீரர்கள் இடம்பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதன்படி, உலக உடற்கட்டழகர் வல்லவர் போட்டித் தொடரொன்றில் இலங்கை இறுதியாக 2009ஆம் ஆண்டு தங்கப் பதக்கத்தினை வெற்றி கொண்டது.

இலங்கை உடற்கட்டழகர் அணியின் தற்போதைய பயிற்சியாளரான பிரசன்ன பீரிஸ் 2009ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலக உடற்கட்டழகர் வல்லவர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார்

தெற்காசிய உடற்கட்டழகனான மகுடம் சூடிய புசல்லாவை வீரர் ராஜகுமாரன்

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில்…..

அதன்பிறகு 2010இல் அசர்பர்ஜானில் நடைபெற்ற உலக உடற்கட்டழகர் வல்லவர் போட்டித் தொடரில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இறுதியாக, 2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலக உடற்கட்டழகர் வல்லவர் போட்டித் தொடரில் பிரபா சிறிவர்தன வெண்கலப் பதக்கத்தினை வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

எதுஎவ்வாறாயினும், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை உடற்கட்டழகர் சம்மேளனத்தில் நிலவிய வந்த நிர்வாக சிக்கல் மற்றும் தேர்தல் குளறுபடிகள் காரணமாக எந்தவொரு இலங்கை வீரரும் உலக உடற்கட்டமைப்பு வல்லவர் போட்டித் தொடரில் பங்கேற்வில்லை. 

இதுஇவ்வாறிருக்க, இம்முறை உலக உடற்கட்டமைப்பு வல்லவர் போட்டித் தொடரில் உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதி போட்டிப் பிரிவில் இலங்கை சார்பாக 5 வீரர்கள் களமிறங்கியிருந்தனர். எனினும், 65 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட வீரர் மாத்திரம் இறுதிச் சுற்று வரை முன்னேறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<