ஹமீட் அல் ஹுஸைனியை வீழ்த்தி அரையிறுதிக்குள் சென்றது ஸாஹிரா

695
Zahira vs Hameed Al Husseini

பிரிவு ஒன்றுக்கான பாடசாலை அணிகளுக்கு இடையிலான 18 வயதின் கீழ் கால்பந்து தொடரின் முதலாவது காலிறுதியில் ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய கொழும்பு ஸாஹிராக் கல்லூரி தொடரின் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் அணியாக தம்மைப் பதிவு செய்துள்ளது.

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் இரண்டாம் வாரப் போட்டிகள் ஆரம்பம்

இலங்கை பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையில் இடம்பெறும் ThePapare கால்பந்து…

கொழும்பு சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பமாகி முதல் 5 நிமிடங்களில் ஸாஹிரா வீரர்கள் முதல் கோலைப் பெற்றுக் கொண்டனர். ஹமீட் அல் ஹுஸைனியின் மத்திய களத்தில் இருந்து சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்ட ஸாஹிரா வீரர்கள் அதன் நிறைவில் சஹீல் அஹமட் மூலம் பந்தை வலைக்குள் செலுத்தி அணியை முன்னிலைப்படுத்தினர்.

சில நிமிடங்களில் ஸாஹிரா வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது, அவ்வணியின் மொஹமட் முஷ்பிர் பந்தை ஹெடர் செய்ய, கோலின் மேல் கம்பத்தினூடாக அது வெளியே சென்றது.

தொடர்ந்து ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களின் முயற்சியை தடுக்க முன்வந்த ஸாஹிரா கோல் காப்பாளர் மொஹமட் ஸாகிரின் கைகளில் இருந்து பந்து கீழே விழ, மீண்டும் பந்தைப் பெற்ற ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் அதனை சஹனிடம் வழங்கினர். சஹன் கோல் நோக்கி உதைந்த பந்து கோலின் மேல் கம்பத்தில் பட்டு வெளியேற, சிறந்த முயற்சி அதிஷ்டமற்றுப் போனது.

ஸாஹிரா வீரர் சாஜித் எதிரணியின் பின்கள வீரர்களைக் கடந்து சென்று, ஒரு திசையில் இருந்து பந்தை கோல் நோக்கி உதைய, கம்பங்களை விட தொலைவால் பந்து மைதானத்தை விட்டு வெளியேறியது.  

ஆட்டத்தின் 40 நிமிடங்களை அண்மித்த நிலையில், ஹமீட் அல் ஹுஸைனி அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கை சஹன் பெற்றார். அவர் உதைந்த பந்து தடுப்பு வீரர்களிடம் பட்டு மீண்டும் தன்னிடம் வர, சஹன் கோல் நோக்கி உதைந்த பந்தை ஸாஹிரா கோல் காப்பாளர் ஸாகிர் பிடித்தார்.

மீண்டும் அப்கர் உள்ளனுப்பிய பந்தை, எதிரணியின் பெனால்டி எல்லையில் இருந்த சஹன் ஹெடர் மூலம் கோலுக்குள் செலுத்தினார். இதன்போதும் பந்து கோலின் மேல் கம்பத்தில் பட்டு மைதானத்திற்குள் வந்தது.

மறுமுனையில் ஸாஹிரா வீரர்கள் மேற்கொண்ட சிறந்த முயற்சிகள் அனைத்தும் இறுதித் தருவாயில் வீணாகின.

எனவே, சஹீலின் கோலை மாத்திரம் பெற்ற நிலையில் நிறைவுக்கு வந்தது ஆட்டத்தின் முதல் பாதி.  

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 1 – 0 ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி

இரண்டாவது பாதி ஆரம்பமாகி 5 நிமிடங்கள் கடந்த நிலையில், ஹமீட் அல் ஹுஸைனி அணியின் கோல் எல்லையில் பந்தைப் பெற்ற சாஜித் பின்கள வீரர்களை ஏமாற்றி, தன்னைத் தனிமைப்படுத்தி, கோல் நோக்கி உதைந்த பந்து கோலின் மேல் கம்பத்தில் பட்டு திசை மாறியது.

மேலும் 5 நிமிடங்களில் ஹமீட் அல் ஹுஸைனி அணியின் பாதியில் வலது பக்கத்தில் இருந்து ஸாஹிரா வீரர் மசூத் உள்ளனுப்பிய பந்தை முஷ்பிர் கோலுக்கு அண்மையில் இருந்து பாய்ந்து ஹெடர் செய்தார். பந்து இடது புற கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

போட்டியின் 60 ஆவது நிமிடம் ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கை ஹசன் பெற்றார். மத்திய களத்தில் இருந்து நேரே கோல் நோக்கி உதைந்த பந்தை கோல் காப்பாளர் ஸாகிர் கம்பத்திற்கு அண்மையில் இருந்து வெளியே தட்டி விட்டார்.

ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் ஸஹிரா வீரர்கள் ஹமீத் அல் ஹுஸைனியின் கோல் பரப்பு நோக்கி உதைந்த பந்தை வேகமாக முன்னோக்கி வந்த ஹமீட் அல் ஹுஸைனியின் கோல் காப்பாளர் மொஹமட் நுஸ்கான் பிடித்துக்கொண்டார்.

ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ஸாஹிரா வீரர் ரீசா மைதானத்தில் மத்தியில் இருந்து பந்தைப் பெற்று, எதிரணியின் கோல் எல்லைக்குள் செல்லும்போது பந்தை கோல் காப்பாளர் நுஸ்கான் தடுத்தார். இதன்போது மீண்டும் பந்தை தனது தலையால் கோலுக்குள் செலுத்தி அணிக்கான இரண்டாவது கோலையும்  ரீசா பெற்றுக் கொடுத்தார்.

இரண்டாவது கோலுடன் ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் மேற்கொண்ட இறுதி முயற்சியின்போது போட்டி நிறைவடைவதற்கான விசிலை நடுவர் தரங்க ஊத, பிரிவு ஒன்றுக்கான பாடசாலை அணிகளுக்கு இடையிலான 18 வயதின் கீழ் கால்பந்து தொடரின் காலிறுதியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸாஹிரா வீரர்கள், அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 2 – 0 ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி

கோல் பெற்றவர்கள்

  • ஸாஹிரா கல்லூரி – சஹீல் அஹமட் 05′, ரீசா 90+3′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<