ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு

1166

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இரு அணிகளினதும் தலைவர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் வழிநடத்தலால் விறுவிறுப்புடன் நிறைவுக்கு வந்தது.

இதில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டாலும், அண்மைக்கால ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற காரணத்தால் இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் அதிரடி மாற்றங்கள்

இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான..

இந்நிலையில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ஓட்டக்குவிப்பில் அசத்தி வருகின்ற சந்திமால், ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்காக தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இலங்கையின் சிறந்த ஒரு நாள் வீரராக விளங்கிய சந்திமாலுக்கு இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் அணியில் இடம் கிடைக்காமை என்பன குறித்து இந்தியாவின் க்ரிக் பஸ் இணையளத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

”ஒரு நாள் அணியில் இடம் கிடைக்காமை எனக்கு கவலையையோ, மன உளைச்சலையோ கொடுக்கவில்லை. ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு என்னிடம் ஒருசில குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரில் நான் மோசமாக விளையாடியிருந்தேன். துரதிஷ்டவசமாக குறைந்தளவு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தேன்.

இதனால் எனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனது. ஆனாலும் நான் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வத்துடன் உள்ளேன். எனவே எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளேன். எனக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சவாலாக இதை கருதுவதுடன், தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு போராடி ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

தினேஷ் சந்திமால் இதுவரை 134 ஒரு நாள் போட்டிகளில் நான்கு சதங்கள் மற்றும் 21 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 31.92 என்ற சராசரியுடன் 3,288 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.  

இந்நிலையில், டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் துடுப்பாட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

”உண்மையில் அவ்வாறு மிகப் பெரிய மாற்றம் எதையும் செய்யவில்லை. ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்துதான் எனது துடுப்பாட்டத்தில் மாற்றங்களை செய்தேன். ஒருசில சந்தர்ப்பங்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 30 ஓட்டங்களைப் பெற்று அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது எப்படியாவது அணிக்காக நீண்ட நேரம் விளையாடுவதற்கும், எஞ்சிய வீரர்களுடன் இன்னிங்ஸை கட்டியெழுப்புவதற்கும் தான் எதிர்பார்ப்பேன்” என்றார்.

இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால் தொடர்ந்து சிறந்த துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்தி வந்தார். இதன் பலனாக ICCயின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் அவர் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இது சந்திமாலின் மிகச்சிறந்த டெஸ்ட் தரப்படுத்தல் பதிவாகவும் அமைகின்றது.

டெல்லியில் இடம்பெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சிறந்த முறையில் ஆடிய அவர் நிலையாக நின்று 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், இரண்டாவது இன்னிங்சில் இக்கட்டான நிலையில் அணி இருந்தபோது பெறுமதி மிக்க 36 ஓட்டங்களை வழங்கினார்.

உடற்பயிற்சியும், உபாதையும் விளையாட்டில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?

அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி மிக..

தனது அதிகூடிய டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையைப் (164) பெற்றுக்கொண்டமை குறித்து கருத்து வெளியிட்ட சந்திமால்,   

”உண்மையில் டெல்லி மைதானத்தில் விளையாடியதும், அங்கு நிலவிய காலநிலையும் எமக்கு சவாலாக இருந்தது. அவ்வாறான சூழ்நிலையில் எனது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஓட்டத்தை பெற்றுக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இது எனது சிறந்த இன்னிங்ஸாக அமையாது. எதிர்வரும் காலங்களில் எனது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸை விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.

அத்துடன், இலங்கை அணியின் அனுபவமிக்க வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியமை அணிக்கு மேலும் பலத்தை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்மெதிவ்ஸின் மீள்வருகையானது எமக்கு பலத்தை கொடுத்திருந்தது. அணியின் மிகப் பெரிய துரும்புச் சீட்டாக மெதிவ்ஸும், ஹேரத்தும் காணப்படுகின்றனர். அவர்களைப் பார்த்துத்தான் அணியில் உள்ள இளம் வீரர்கள் பல விடயங்களை கற்றுக்கொள்கின்றனர். எனவே மெதிவ்ஸின் பொறுமையான ஆட்டமானது, எந்தவொரு போட்டியின் முடிவையும் மாற்றும் வல்லமையுடையது” எனவும் சந்திமால் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுனரான திலான் சமரவீரவின் பங்களிப்பு குறித்து சந்திமால் கருத்து வெளியிடுகையில், திலான் சமரவீரவின் வருகையானது எனக்கு மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தது. அவர் 5ஆம் இலக்க வீரராக களமிறங்கியவர். எனவே அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உண்டு. அவர் வலைப்பயிற்சிகளில் எமக்கு வழங்குகின்ற அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. அதிலும் குறிப்பாக அஷ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து நிறைய நுட்பங்களை எமது வீரர்களுக்கு சொல்லிக் கொடுத்தது மூன்றாவது டெஸ்டை சமநிலையில் நிறைவுக்கு கொண்டுவர முடிந்தது. அதற்கு திலானுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் வரலாற்று சிறப்பு மிக்க இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில், தனது இளம் வயதில் ஒரு நாள் சதம் பெற்ற பெருமையை சந்திமால் கொண்டுள்ளார்.

எனினும் இலங்கை ஒரு நாள் அணியில் இடமின்றி தவிக்கும் அவர் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு நாள் அணியில் இணைய வேண்டுமாயின் இளம் வீரர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டியையும், போராட்டத்தையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.