பெங்களூர் சின்னஸ்வாமி மைதானத்தில் நேற்று இரவு ஐ.பி.எல். தொடரின் முதல் தகுதிகான் போட்டி நடைபெற்றது. இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த குஜராத் லயன்ஸ் அணியும், 2ஆவது இடத்தில் இருந்த ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் பெங்களூர் அணியின் தலைவர் விராத் கொஹ்லி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் அணி 9 ஓட்டங்களை எடுப்பதற்குள் 3 விக்கட்டுகளை இழந்தது. பிஞ்ச் 4 ஓட்டங்களோடும், மெக்கலம் மற்றும் ரெய்னா 1 ஓட்டங்களோடும் ஆட்டம் இழந்தனர். பின் 5ஆவது வீரராக  களம் இறங்கிய டுவெயின் ஸ்மித் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில்  5 பவுண்டரிகள், 6 சிக்ஸருடன் 73 ஓட்டங்களைக் குவித்து குஜராத் அணியை நல்லதோர் நிலைக்கு  எடுத்துச் சென்றார்.

இதன் மூலம் குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது. பெங்களூர் அணியின் பந்து வீச்சில் வொட்சன்  4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

ஒரு இனிங்ஸில் 9 விக்கட்டுகளை வீழ்த்தினார் வோக்ஸ்

பின்னர் 160 ஓட்டங்களைப் பெற்றால் .பி.எல் இறுதிப்போட்டியில் இடம் கிடைக்கும் என்ற இலக்குடன் பெங்களூர் அணி தமது ஆட்டத்தைத் தொடர்ந்தது. இவ்வளவு போட்டிகளிலும் பிரகாசித்த விராத் கொஹ்லி  தான் சந்தித்த 2ஆவது பந்தில் போல்ட் ஆகி ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். விராத் கொஹ்லி யை வீழ்த்திய தவால் குல்கர்னி பந்தில் அனல் பறந்தது. விராத் கொஹ்லியைத் தொடர்ந்து கெய்ல் 9 ஓட்டங்களோடும், ராஹுல்  மற்றும் சச்சின் பேபி ஆகியோர் ஓட்டங்கள் எதையும் பெறாமலும் குல்கர்னியின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து வெளியறினர்.  மற்ற முனையில் வொ ட்சன் 1 ஓட்டத்தோடு ஜடேஜா வீசிய பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதனால் பெங்களூர் அணி 29 ஓட்டங்களுக்கு 5 முக்கிய விக்கட்டுகளை இழந்தது. இதனால் பெங்களூர் அணி தோற்றுவிடும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால், டி வி்ல்லியர்ஸ் மட்டும் மைதானத்தில் நின்றிருந்தார். அதனால் பெங்களூர் ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.

6ஆவது விக்கட்டுக்கு டி வில்லியர்ஸ் உடன் ஸ்டூவர்ட் பினி ஜோடி சேர்ந்தார். ஜகாதி வீசிய 9ஆவது ஓவரில் பின்னி 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 18 ஓட்டங்கள் கிடைத்தது. ஆனால், அடுத்த ஓவரில் பின்னி ஆட்டம் இழந்தார். அவர் 15 பந்துகளில்  21 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.  

அடுத்து இக்பால் அப்துல்லா டி வில்லியர்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். அப்துல்லா நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி மைதானத்திற்குள் நிலைத்து நின்றார். அதிரடியாக விளையாடவில்லை என்றாலும், பந்துக்கு பந்து ஒரு ஓட்டம்  எடுத்து டி வில்லியர்ஸுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். டி வில்லியர்ஸ் அடிக்கக்கூடிய பந்தை மட்டும் தெரிவு செய்து செய்து பவுண்டரி, சிக்ஸருக்கு விளாசினார்.

சிறப்பாக விளையாடிய டி வில்லியர்ஸ் 33 பந்துகளில்அரைச்சதம் அடித்தார். ஸ்மித் வீசிய 15ஆவது ஓவரில் டி வில்லியர்ஸ் 11 ஓட்டங்களைப் பெற்றார்.  அடுத்த ஓவரில் டி வில்லியர்ஸ், அப்துல்லா தலா ஒரு சிக்ஸ் அடித்தனர். அதன்பின் பெங்களூர் பக்கம் ஆட்டம் திரும்பியது.

சமீரவிற்குப் பதிலாக சமிந்த பண்டார

பிராவோ வீசிய 18ஆவது ஓவரில் இக்பால் அப்துல்லாஹ் கடைசி 3 பந்துகளிலும் தொடர்ச்சியாக பவுண்டரிகள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 19ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் 2 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் பெங்களூர் அணி 18.2 ஓவரில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களை  எடுத்து 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டி வில்லியர்ஸ் 46 பந்துகளில்  5 பவுண்டரிகள், 5 சிக்ஸருடன் 79 ஓட்டங்களோடும், அப்துல்லா 25 பந்துகளில்  3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ஓட்டங்களோடும்  ஆட்டம் இழக்காமல் பெங்களூர் அணியின் வெற்றிக்கு உதவினார்கள். குஜராத் அணியின் பந்துவீச்சில் குல்கர்னி 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வெற்றிப் பாதைக்கு ஈட்டிச் சென்ற டி விலியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணி 9ஆவது .பி. எல் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அத்தோடு டேவிட் வோர்னர் தலைமயிலான சண் றைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கவதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குமிடையிலான போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி 27ஆம் திகதி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் குஜராத் லயசன் அணியை சந்திக்கும். அது போன்று இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி .பி.எல் தொடரில் இருந்து வெளியேறும். அதனால் இரண்டு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக இன்றைய போட்டி அமையும்.

27ஆம் திகதி நடைபெறும் குஜராத் லயன்ஸ் மற்றும் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் இரு அணிகளில் வெற்றிபெறும் அணியும் மோதும். அந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியோடு இறுதிப் போட்டியில் பெங்களூர் சின்னஸ்வாமி மைதானத்தில் 29ஆம் திகதி சந்திக்கும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்