பாடசாலை டிவிஷன் 3 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் யாழ். மத்தி!

U19 Schools Cricket Tournament 2022/23

563
U19 Schools Cricket Tournament 2022/23

பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் டிவிசன் 3 பிரிவு A இரண்டு நாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் வெற்றிபெற்ற யாழ். மத்தியக் கல்லூரி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்த யாழ். மத்தியக் கல்லூரி அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

>>IPL தொடரிலிருந்து வெளியேறும் சகீப் அல் ஹஸன்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. மத்தியக் கல்லூரியை பொருத்தவரை இந்த பருவகாலம் முழுவதும் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது.

அதற்கமைய இந்தப் போட்டியிலும் யாழ். மத்திக்கு பந்துவீச்சில் முழுமையான பங்களிப்பு கிடைத்திருந்தது. ரஞ்சித்குமார் நியூட்டன், சுதர்சன் அனுசாந்த் மற்றும் விக்னேஷ்வரன் பருதி ஆகியோர் அபாரமாக பந்துவீச வெறும் 114 ஓட்டங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக மஹிந்த ராஜபக்ஷ கல்லூரிக்காக பசிந்து லக்சித 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ரஞ்சித்குமார் நியூட்டன் மற்றும் சுதர்சன் அனுசாந்த் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், விக்னேஷ்வரன் பருதி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

எதிரணியை குறைந்த ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய போதும், மத்தியக் கல்லூரியின் துடுப்பாட்ட ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. முதல் 4 விக்கெட்டுகளும் 49 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

எனினும் அதன்பின்னர் களமிறங்கிய நிசாந்தன் அஜய் மற்றும் சுதர்சன் அனுசாந்த் ஆகியோர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் துரதிஷ்டவசமாக அனுசாந்த் 43 ஓட்டங்களுடன் அரைச்சதத்தை தவறவிட, மறுபக்கம் அஜய் தனியாளாக ஓட்டங்களை குவிக்க தொடங்கினார். இதற்கிடையில் சிறிய இணைப்பாட்டங்களையும் தகுதாஸ் அபிலாஷ், ஆனந்தன் கஜன் மற்றும் சகாதேவன் சயந்தன் ஆகியோர் பெற்றுக்கொடுத்தனர்.

இறுதியாக 83 ஓட்டங்களை பெற்றிருந்த அஜய் துரதிஷ்டவசமாக தன்னுடைய சதத்தை பெறமுடியாமல் ஆட்டமிழக்க, 225 ஓட்டங்களுக்கு மத்தியக் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் பந்துவீச்சில் தினுஜ வெனுசர மற்றும் நவிந்து நிம்சார ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 111 ஓட்டங்கள் பின்னடைவில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி மீண்டும் துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை காட்டியது. எப்போதும் போன்று நியூட்டன் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்த அவருடன் இணைந்து அணித்தலைவர் ஆனந்தன் கஜன் எதிரணிகளின் விக்கெட்டுகளை வீழ்த்த ஆரம்பித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி அணிக்காக அதிகபட்சமாக கவிந்து ஹெஷான் 35 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் முதல் இன்னிங்ஸை போன்று தடுமாற்றத்தை காண்பித்தனர்.  இறுதியாக பசிந்து லக்சித 26 ஓட்டங்களையும், நவிந்து நிம்சார 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து போராட்டம் காண்பித்த போதும், 133 ஓட்டங்களுக்கு தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்த மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி 23 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. பந்துவீச்சில் அனுசாந்த் 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, நியூட்டன் மற்றும் கஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இந்தநிலையில் நிர்ணயிக்கப்பட்ட 23 என்ற வெற்றியிலக்கை ஒரு விக்கெட்டினை இழந்து 5.4 ஓவர்களில் கடந்த யாழ். மத்தியக் கல்லூரி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

  • மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி – 114/10 (50.4), லக்சித 25, அனுசாந்த் 12/3, நியூட்டன் 43/3, பருதி 25/2

  • யாழ். மத்தியக் கல்லூரி – 225/9 (56.3), அஜய் 83, அனுசாந்த் 43, நிம்சார 21/3, தினுஜ 69/3

  • மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி – 133/10 (51), ஹெஷான் 35, அனுசாந்த் 38/4, நியூட்டன் 38/2, கஜன் 19/2

  • யாழ். மத்தியக் கல்லூரி – 25/1 (5.4), நியூட்டன் 22*, தினுஜ 6/1

  • முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<