மெதிவ்ஸ், குசல் உட்பட 10 வீரர்களுக்கு LPL தொடரில் விளையாட வாய்ப்பு

Lanka Premier League 2021

251

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) வீரர்கள் வரைவில் அணிகளில் இணைக்கப்படாத, இலங்கை அணியின் முன்னணி வீரர்களை, LPL அணிகளில் இணைக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள LPL தொடருக்கான வீரர்கள் வரைவு கடந்த 09ம் திகதி நடைபெற்றுமுடிந்தது. இந்த வீரர்கள் வரைவில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் இணைக்கப்படாமை, விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

>>LPL தொடர் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை புதிய அறிவிப்பு

குறிப்பாக, T20 உலகக்கிண்ண குழாத்தில் இடம்பெற்றிருந்த குசல் பெரேரா, உப தலைவர் தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால், அகில தனன்ஜய, பிரவீன் ஜயவிக்ரம, ஷிரான் பெர்னாண்டோ மற்றும் மினோத் பானுக ஆகியோர் LPL வரைவிலிருந்து அணிகளால் உள்வாங்கப்படவில்லை. அதுமாத்திமின்றி, இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் எந்த அணிகளாலும் வாங்கப்பட்டிருக்கவில்லை.

இதனால், அதிகமான கேள்விகள் எழுந்திருந்ததுடன், LPL வீரர்கள் வரைவின் மீதான வெளிப்படைத்தன்மை குறித்தும் விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தநிலையில், மேற்குறித்த 8 வீரர்களுடன், சதீர சமரவிக்ரம மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகியோரையும் இணைத்து மொத்தமாக 10 வீரர்களின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் சபை, LPL நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளது. குறித்த இந்த 10 வீரர்களில் தலா இரண்டு வீரர்களை அணிகள் இணைக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, அடுத்துவரும் தினங்களில் அணிகள், இணைக்கப்படும் வீரர்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LPL தொடர், டிசம்பர் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரை நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த சுற்றுப்போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.

இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ள வீரர்கள் விபரம்

அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா, தனன்ஜய டி சில்வா, அகில தனன்ஜய, பிரவீன் ஜயவிக்ரம, மினோத் பானுக, சதீர சமரவிக்ரம, அஷான் பிரியன்ஜன், ஷிரான் பெர்னாண்டோ

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<