இணை சம்பியன்களாக முடிசூடிய அசோக வித்தியாலயம், யாழ். மத்தி!

U19 Schools Cricket Tournament 2023/24

155
U19 Schools Cricket Tournament 2023/24

பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் ஒருநாள் தொடரின் பிரிவு 2 Tier B இறுதிப்போட்டி மழைக்காரணமாக நிறுத்தப்பட்டதால் யாழ். மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு அசோக வித்தியாலயம் இணை சம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.

பண்டாரகம பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அசோக கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

>>டிவிஷன் – II பாடசாலை தொடர் இறுதிப் போட்டியில் யாழ். மத்தி

அரையிறுதிப்போட்டியில் குலரத்ன கல்லூரிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசியிருந்த மத்திய கல்லூரி வீரர்கள் இந்தப் போட்டியிலும் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

பந்துவீச்சில் ரஞ்சித்குமார் நியூட்டன் அரையிறுதிப்போட்டியை போன்று இறுதிப்போட்டியிலும் முதல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

ஆரம்பத்திலிருந்து தடுமாறிய அசோக கல்லூரி அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க, சுவான் மந்திக அதிகபட்சமாக 19 ஓட்டங்களை பெற்றார். எனினும் பந்துவீச்சில் அபாரம் காண்பித்த இளம் பந்துவீச்சாளர் முரளி திசோன் 30 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

திசோன் மற்றும் நியூட்டன் ஆகியோரின் அபார பந்துவீச்சின் காரணமாக அசோக வித்தியாலயம் 31.3 ஓவர்கள் நிறைவில் வெறும் 95 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

போட்டியின் போது மழைக்குறுக்கிடுவதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில், யாழ். மத்திய கல்லூரி அணி வெற்றிக்காக வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்பட்டது. அதன்படி வெறும் 6.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 54 ஓட்டங்களை குவித்த போதும், மழைக்குறுக்கிட்டதால் போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவுசெய்யப்பட்டது. இதில் அணிக்காக நியூட்டன் 15 பந்துகளில் 32 ஓட்டங்களை விளாசியிருந்ததுடன், விதுர எசான் 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

>>நியூட்டனின் அபார பந்துவீச்சுடன் இறுதிப்போட்டியில் யாழ். மத்தி!

போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவடைந்ததன் காரணமாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய யாழ். மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு அசோக வித்தியாலயம் ஆகிய அணிகள் இணை சம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.

சுருக்கம்

கொழும்பு அசோக கல்லூரி – 95/10 (31.3), சுவான் மந்திக 19, முரளி திசோன் 5/30, ரஞ்சித்குமார் நியூட்டன் 3/21

யாழ். மத்திய கல்லூரி – 54/3 (6.5), ரஞ்சித்குமார் நியூட்டன் 32, விதுர எசான் 2/3

முடிவு வெற்றித் தோல்வியின்றி நிறைவு

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<