நியூட்டன், பருதியின் அபார பந்துவீச்சுடன் அரையிறுதியில் யாழ். மத்தி!

U19 Schools Cricket Tournament 2022/23

1005

பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் டிவிசன் 3 பிரிவு A கிரிக்கெட் தொடரில் ரஞ்சித்குமார் நியூட்டன் மற்றும் விக்னேஷ்வரன் பருதி ஆகியோரின் அபார பந்துவீச்சின் உதவியுடன் யாழ். மத்தியக் கல்லூரி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

புத்தளம் ஆனந்த தேசிய பாடசாலை அணிக்கு எதிராக அம்பேபுஸ்ஸ இராணுவ ரெஜிமண்ட் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யாழ். மத்தியக் கல்லூரி வெற்றியை பதிவுசெய்தது.

>> கஜன் 150, பருதி 10 விக்கெட்டுகள் ; காலிறுதியில் யாழ். மத்தி

மத்தியக் கல்லூரி அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த போதும், எதிர்பார்த்த அளவிலான துடுப்பாட்ட பிரகாசிப்பை வெளிப்படுத்தவில்லை.

அரையிறுதி வாய்ப்புக்கான இந்தப் போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் சராசரியான பிரகாசிப்பினை மாத்திரமே வழங்கியிருந்தனர். ஆரம்பத்தில் நியூட்டன் 31 ஓட்டங்களையும், ஜெகதீஷ்வரன் விதுசன் 38 ஓட்டங்களுடனும் முதல் விக்கெட்டுக்காக 67 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

இவர்களின் இந்த இணைப்பாட்டத்துக்கு பின்னர் மதீஷ்வரன் சன்சஜன் 30 ஓட்டங்களை பெற்றுத்தந்த போதும், ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 67 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஆரம்பத்தை பெற்றிருந்த மத்தியக் கல்லூரி அணி ஒரு கட்டத்தில் 135 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற தொடங்கியது.

எனினும் இறுதி நேரத்தில் சகாதேவன் சயந்தன் 25 ஓட்டங்கள், தகுதாஸ் அபிலாஷ் 19 ஓட்டங்கள் மற்றும் போல் பரமதயாளன் 13 ஓட்டங்களை பெற்றுத்தர 59 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களை மத்தியக் கல்லூரி பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் இமிந்து பெரேரா 4 விக்கெட்டுகளையும், சிவன் ராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

காலிறுதிப்போட்டி என்பதால் வெற்றியை நோக்கி களமிறங்கிய ஆனந்த தேசிய பாடசாலை அணிக்கு, முதல் இன்னிங்ஸ் வெற்றி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இவ்வாறு களமிறங்கிய ஆனந்த தேசிய பாடசாலை அணி ஆரம்பத்திலிருந்து சறுக்கலை சந்தித்தது.

நியூட்டன் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றி அழுத்தம் கொடுக்க, அதனைத்தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றும் பணியை விக்னேஷ்வரன் பருதி மற்றும் சுதர்சன் அனுசாந்த் ஆகியோர் கையில் எடுத்துக்கொண்டனர்.

ஆனந்த தேசிய பாடசாலை அணிசார்பாக அதிகபட்சமாக ஸ்டீவன் ருவிந்த 27 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்துவீச்சில் பருதி 4 விக்கெட்டுகளையும், நியூட்டன் 3 விக்கெட்டுகளையும், அனுசாந்த் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற ஆனந்த தேசிய பாடசாலை 43.3 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 93 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

எனவே 100 ஓட்டங்கள் பின்னடைவில் போலோவிங் ஒன் முறையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆனந்த தேசிய பாடசாலைக்கு மீண்டும் ஏமாற்றம் காத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசிய நியூட்டன் மற்றும் பருதி ஆகியோர் மேலும் அழுத்தத்தை கொடுக்க, விக்கெட்டுகள் வரிசையாக இழக்கப்பட்டன.

>> விறுவிறுப்பான மோதலில் வெற்றிபெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி!

ஆனந்த தேசிய பாடசாலையின் சார்பாக அதிகபட்சமாக இமிந்து பெரேரா 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஒட்டுமொத்தமாக 71 ஓட்டங்களுக்கு அணி சரிந்தது. பந்துவீச்சில் நியூட்டன் 5 விக்கெட்டுகளையும், பருதி 3 விக்கெட்டுகளையும், அனுசாந்த் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த இன்னிங்ஸ் மற்றும் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மத்தியக் கல்லூரி அணி வெற்றியை பதிவுசெய்தது.

எனவே இந்தப்போட்டியில் வெற்றிபெற்றுள்ள யாழ். மத்தியக் கல்லூரி அணியானது தங்களுடைய அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

  • யாழ். மத்தியக் கல்லூரி – 193/10 (59), விதுசன் 38, நியூட்டன் 31, சன்சஜன் 30, இமுதி பெரேரா 55/4, சிவன் ராஜ் 26/2
  • ஆனந்த தேசிய பாடசாலை – 93/10 (43.3), ஸ்டீவன் ருவிந்த 27, பருதி 18/4, நியூட்டன் 35/3, அனுசாந்த் 37/2
  • ஆனந்த தேசிய பாடசாலை (F/O) – 71/10 (16.1), இமிந்து பெரேரா 23, நியூட்டன் 14/5, பருதி 34/3, அனுசாந்த் 23/2
  • முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 29 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<