அக்குரனை அஸ்ஹருக்கு எதிராக அபாரம் காண்பித்த ஆகிப் ; போராடி தோற்றது யாழ். இந்து!

U19 Schools Cricket Tournament 2022/23

306
U19 Schools Cricket Tournament 2022-23

இலங்கையின் 19 வயதின் கீழ் டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற போட்டிகளில் யாழ். இந்து மற்றும் அக்குரனை அஸ்ஹர் கல்லூரிகள் தோல்விகளை சந்தித்தன.

யாழ். இந்துக் கல்லூரி அணியானது, ஹன்வெல்ல ராஜசிங்க மத்தியக் கல்லூரியை எதிர்கொண்டதுடன், அக்குரனை அஸ்ஹர் கல்லூரி டி.எஸ். ஜயசிங்க மகா வித்தியாலயத்தை எதிர்த்தாடியது.

>> புனித. பத்திரிசியார் கல்லூரிக்கு முதல் வெற்றி ; தோல்வியடைந்த யாழ். மத்தி!

யாழ். இந்துக் கல்லூரி எதிர் ஹன்வெல்ல ராஜசிங்க மத்தியக் கல்லூரி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் ஹன்வெல்ல ராஜசிங்க மத்தியக் கல்லூரி அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜசிங்க மத்தியக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்துக் கல்லூரி அணிக்கு வழங்கியது.

அதன்படி முதுலில் துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி அணிக்காக டி. கஜனாத் மற்றும் டி கிருஷனாத் ஆகியோர் மாத்திரம் இரட்டையிலக்க ஓட்டங்களை கடக்க, ஏனைய வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஏமாற்றினர். இதன்காரணமாக இந்துக் கல்லூரி அணி 41.3 ஓவர்கள் நிறைவில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்துக் கல்லூரி அணிக்காக கஜனாத் 49 ஓட்டங்களை பெற்று ஒரு ஓட்டத்தால் அரைச்சதத்தை தவறவிட, கிருஷனாத் 12 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சந்துஷ் அபிஷேக அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜசிங்க மத்தியக் கல்லூரி அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 100 ஓட்டங்கள் வரை 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்தது. எனினும், அடுத்த 18 ஓட்டங்களை பெறுவதற்குள், இந்துக் கல்லூரி அணி கடுமையான போட்டியை கொடுத்தது.

இறுதிவரை இந்துக் கல்லூரி அணி போராட்டத்தை காண்பித்தாலும் ராஜசிங்க அணிசார்பாக சமித் விதுர இறுதிவரை ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார். எனவே, 43 ஓவர்கள் நிறைவில் ராஜசிங்க மத்தியக் கல்லூரி 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

ராஜசிங்க மத்தியக் கல்லூரி சார்பாக சமித் விதுர 34 ஓட்டங்களையும், ரமிது தெவ்னித 33 ஓட்டங்களையும் பெற, எஸ்.சுபர்ணன் மற்றும் கே.தரனிசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  • யாழ். இந்துக் கல்லூரி – 117/10 (41.3), டி கஜனாத் 49, சந்துஷ் அபிஷேக 16/3
  • ராஜசிங்க மத்தியக் கல்லூரி – 121/8 (43) சமித் விதுர 34, ரமிது தெவ்னித 33, எஸ். சுபர்ணன் 14/3, கே.தரனிசன் 28/3

முடிவு – ராஜசிங்க மத்தியக் கல்லூரி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

அக்குரனை அஸ்ஹர் கல்லூரி எதிர் எஸ்.டி.எஸ். ஜயசிங்க மகா வித்தியாலயம்

அக்குரனை அஸ்ஹர் கல்லூரிக்கு எதிரான போட்டியில் மொஹமட் ஆகிப்பின் அற்புதமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் எஸ்.டி.எஸ் ஜயசிங்க மகா வித்தியாலயம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியொன்றினை பதிவுசெய்துக்கொண்டது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அஸ்ஹர் கல்லூரி 35 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அஸ்ஹர் கல்லூரி சார்பாக மொஹமட் இமாஸ், அணித்தலைவர் மொஹமட் ரிம்ஷாட் மற்றும் மொஹமட் பிஷ்ரி ஆகியோர் துடுப்பாட்டத்தில் ஆரம்பங்களை பெற்றுக்கொண்டபோதும், மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு செல்லத்தவறினர்.

மொஹமட் ரிம்ஷாட் 38 ஓட்டங்களையும், மொஹமட் இமாஸ் 33 ஓட்டங்களையும், மொஹமட் பிஷ்ரி 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டதுடன், ஜயசிங்க மகா வித்தியாலயத்தின் தலைவர் நிதுல் துல்னாத் 5 விக்கெட்டுகளையும், மொஹமட் ஆகிப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எஸ்.டி.எஸ். ஜயசிங்க மகா வித்தியாலயம் ஒருகட்டத்தில் 56 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் பந்துவீச்சில் பிரகாசித்த மொஹமட் ஆகிப், அணித்தலைவர் நிதுல் துல்னாத்துடன் இணைந்து அற்புதமான துடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தினார்.

ஆகிப் வெறும் 28 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை குவித்ததுடன், நிதுல் துல்னாத் 10 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களின் இந்த இணைப்பாட்டத்தின் உதவியுடன் ஜயசிங்க கல்லூரி 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பதிவுசெய்தது. பந்துவீச்சில் மொஹமட் ரியாஸ் மற்றும் மொஹமட் சல்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  • அக்குரனை அஸ்ஹர் கல்லூரி -133/10 (35), மொஹமட் ரிம்ஷாட் 38, மொஹமட் இமாஸ் 33, மொஹமட் பிஷ்ரி 26, நிதுல் துல்னாத் 16/5, மொஹமட் ஆகிப் 31/3
  • எஸ். டி.எஸ். ஜயசிங்க மகா வித்தியாலயம் – 138/7 (19.4) மொஹமட் ஆகிப் 56, மலித் சுதீர 19, மொஹமட் ரியாஸ் 20/2, மொஹமட் சல்மான் 35/2

முடிவு – எஸ்.டி.எஸ். ஜயசிங்க மகா வித்தியாலயம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<