பிரியாவிடை போட்டிக்காக காத்திருக்கும் லசித் மாலிங்க

3625

தனது வெளிப்படையான, நேரடியாகப் பேசும் தன்மையும் தான் இலங்கை அணிக்காக தொடர்ந்து தேர்வு செய்யப்படாமலிருப்பதற்கான காரணங்களாக இருக்கலாமென மனவருத்தத்துடன் தெரிவிக்கின்ற இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, நேரம் வரும்போது நிச்சயம் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வினை அறிவிப்பேன் என தனது எதிர்கால நிலைப்பாட்டையும் தெரிவித்துள்ளார்.

அணிக்கு முழுமையாக பங்களிக்க முடியாமல் மைதானத்திலிருந்து வெளியேறிய திக்வெல்ல

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில்..

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாத்தில் லசித் மாலிங்க தேர்வுசெய்யப்படாமையைத் தொடந்து விரைவில் லசித் மாலிங்க ஓய்வை அறிவிக்கப் போகின்றார் என்ற தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியிருந்தன. இவ்வாறான ஒரு நிலையிலேயே அவர் மேற்குறித்த கருத்தை ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளரான 34 வயதாகும் லசித் மாலிங்க கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு பாரிய சேவையாற்றிய முக்கிய வீரராவார். முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸுக்குப் பிறகு பந்துவீச்சாளராக இலங்கை அணிக்கு அதிகளவு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த வீரராகவும் அவர் விளங்குகிறார். அதிலும் குறிப்பாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு முதற்தடவையாக பெற்றுக்கொடுத்த இலங்கை அணியின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

அவை மாத்திரமன்றி, டி-20 போட்டிகளில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுக்கொண்ட ஒரேயொரு இலங்கை வீரரும் மாலிங்கதான்.

எனினும், தொடர் உபாதைகளுக்கு அவர் முகங்கொடுத்து வருகின்ற காரணத்தாலும், அவருடைய வயது முதிர்ச்சி காரணமாகவும் இலங்கை அணியிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றார். அது மாத்திரமின்றி, அவரது ஒருசில நடவடிக்கைககள் மற்றும் கருத்துக்கள் என்பன அவரை தொடர்ந்து அணித் தேர்விலிருந்து புறக்கணிக்கப்படுவதற்கான காரணமாகவும் அமைந்துவிட்டது.  

கனடா குளோபல் டி20 லீக்கில் ஆறு இலங்கை வீரர்கள்

கனடா கிரிக்கெட் சபையினால் முதற்தடவையாக ஏற்பாடு…

இந்த நிலையிலையே 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுடன், தான் ஓய்வுபெறப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் தெரிவித்திருந்தார்.  

இது இவ்வாறிருக்க, தற்போது நடைபெற்றுவருகின்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் மாலிங்கவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அந்த எதிர்பார்ப்பும் வழமையைப் போல அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

அந்தவகையில், இலங்கையின் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் லசித் மாலிங்க தெரிவுசெய்யப்படாதது ஆச்சரியம் அளிக்கப்படாவிட்டாலும், தென்னாபிரிக்காவுடனான டி-20 சர்வதேசப் போட்டியில் லசித் மாலிங்க இடம்பெறுவாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு கடந்த வாரம் மாலிங்க விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில், தனது ஓய்வு குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைககள் குறித்தும் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார். அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

”இலங்கையின் ஆடுகள பராமரிப்பாளர்களை கடந்த வருடம் நான் விமர்சித்தது தான் இலங்கை அணியில் நான் தேர்வு செய்யப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் என நம்புகின்றேன். ஆனாலும், என்னுடைய திறமைகளை நான் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வந்தேன். எதற்காக எனக்கு ஏன் தொடர்ந்து ஓய்வளிக்கப்பட்டு வருகின்றது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

அத்துடன், உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி நல்ல போர்மில் இருந்தாலும், போட்டியொன்றுக்கு தேவையான அழுத்தத்தை என்னால் கொடுக்க முடியாமல் இருப்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் அணித் தேர்வுகள் இடம்பெறும் போது திறமைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்கப்பட்டால் டி-20 போட்டிகளுக்கு என்னைத் தான் முதல் வேகப்பந்து வீச்சாளராக தெரிவுசெய்ய வேண்டும்.

மாகாண அணிகளுக்கிடையிலான டி-20 போட்டியில் மாலிங்க பந்துவீச்சில் ஈடுபட்டபோது

மறுபுறத்தில், விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் மற்றும் தேர்வுக் குழுவினருடன் அண்மைக்காலமாக ஏற்பட்ட முரண்பாடுகளினால் எனக்கு இதுவரை எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் அது ஒரு பூகம்பத்தைப் போன்றது. எனது ஆளுமை மற்றைய வீரர்களில் இருந்து வேறுபட்டது. நான் எப்போதும் நேர்மையான விடயங்களுக்கு முன்நின்று செயற்பட்டேன். ஆனால், இது எல்லோருடைய தேநீர் கோப்பை அல்ல என்பதையும் நன்கு அறிந்து வைத்துள்ளேன்” என்றார்.

எனது ஓய்வு குறித்து இதற்கு முன் பல தடவைகள் நான் பேசியுள்ளேன். ஆனால் இந்த தருணத்தில் ஓய்வுபெறுவதற்கு எந்தவொரு எண்ணமும் என்னிடம் இல்லை. எனினும், காரணம் இல்லாமல் என்னை புறக்கணித்து வருவது ஏமாற்றம் அளிக்கின்றது.

எனது திறமைதான் எனக்கு பலம். ஒரு நாள் அரங்கில் 301 விக்கெட்டுக்களையும், 101 டெஸ்ட் விக்கெட்டுக்களையும், 90 டி-20 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளேன். இந்த அனைத்து விக்கெட்டுக்களையும் எனது தாய் நாட்டுக்காக அர்ப்பணிப்புடனும், தியாகங்களுக்கு மத்தியிலும் பெற்றுக்கொடுத்தேன். மீண்டும் மீண்டும் பல தடவைகள் என்னை நிரூபித்துவிட்டேன். எனவே, எனது திறமையை நிரூபிக்க மற்றுமொரு வாய்ப்பை பெற்றுக்கொடுங்கள் என கேட்கிறேன். அதில் நான் தோல்வியைத் தழுவினால் என்னை அணியிலிருந்து நீக்கிவிடுங்கள். அதன்பிறகு எனது எதிர்காலம் குறித்து இறுதி முடிவை எடுப்பேன் என மாலிங்க ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

அத்துடன், சம்பியன்ஸ் கிண்ணத் தோல்வியினை அடுத்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் வீரர்களின் உடற்தகுதி குறித்து வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு மாலிங்க ஆவேசமாக பதில்களை அளித்து கடும் சர்ச்சைகளுக்கும் முகங்கொடுத்தார்.

மாலிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்த இலங்கை கிரிக்கெட்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித்…

எனவே, தனது வெளிப்படையான, நேரடியாகப் பேசும் தன்மையையும் தான் அணியில் தேர்வு செய்யப்படாமலிருப்பதற்கான காரணங்களாக இருக்கலாமெனவும் லசித் மாலிங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை .பி.எல் தொடர் இடம்பெற்ற காலப்பகுதியில் தேசிய அணி வீரர்களின் பங்குபற்றலுடன் மாகாண அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் இடம்பெற்றது. எனினும், குறித்த தொடரில் மாலிங்க விளையாடினால் மாத்திரமே அவரை தேசிய அணிக்கும் மீண்டும் இனைப்பது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனமும், தேர்வுக் குழுவும் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

இதுதொடர்பில் மாலிங்க கருத்து வெளியிடுகையில், நான் .பி.எல் தொடருக்காக இந்தியா செல்தவதற்கு முன் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அதற்கான அனுமதியை அவர்கள் வழங்கியிருந்தனர். இதனையடுத்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக நான் ஒப்பந்தம் செய்துகொண்டேன். ஆனால், போட்டியின் இடைநடுவில் திடீரென என்னை நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்தார்கள். ஆனால், என்னுடைய பொறுப்பை முழுமையாக பூர்த்தி செய்த பிறகு தான் என்னால் மீண்டும் நாடு திரும்ப முடியும் என அறிவித்தேன் என்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முற்பகுதியல் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மாலிங்க கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றார். எனினும், கடந்த வருட முற்பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கியதுடன், கடந்த வருடம் நடைபெற்ற .பி.எல் போட்டிகளிலும் பங்கேற்றிருந்தார். ஆனால் சுமார் ஒன்றரை வருடங்களாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், கடந்த வருடம் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார்.

சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இந்திய அணிக்கெதிராக மாலிங்க விளையாடிய போது

இந்தப் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. எனினும், லசித் மாலிங்க தனது பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்தார். அதுமாத்திரமின்றி, மாலிங்கவின் பந்துவீச்சின் போது இரு முக்கிய பிடியெடுப்புக்களை இலங்கை அணி வீரர்கள் தவறவிட்டனர். இதன் காரணமாகவே பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும், அவர் இலங்கை அணிக்காக இறுதியாக, கடந்த வருடம் இடம்பெற்ற இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் ஒற்றை டி-20 போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமதிபாலவின் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டை அர்ஜுன, அரவிந்த நிராகரிப்பு

எமது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆட்ட நிர்ணயத்தில் ஒருபோதும்..

இந்த நிலையில், மாலிங்க இறுதியாக அண்மையில் நிறைவுக்கு வந்த கனடா குளோபல் லீக் தொடரில் மொன்ட்ரியல் டைகர்ஸ் அணிக்காக விளையாடி 13 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்ததுடன், அவ்வணியின் தலைவராகவும் செயற்பட்டார்.

எனினும், அதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளூர் கழகங்களுக்கிடையிலான டி-20 போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக மாறிய மாலிங்க, தனது வழமையான போர்முக்கு திரும்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஒரு நாள் அணியில் மீண்டும் விளையாடுவது குறித்து மாலிங்க கருத்து வெளியிடுகையில்,

ஒரு நாள் அணியில் எனக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஆனால் தற்போது நடைபெற்று வருகின்ற தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரிற்கான இலங்கை குழாத்தில் என்னை இணைத்துக்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் பயிற்சிப் போட்டியிலாவது எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. எனவே, தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறவுள்ள ஒற்றை டி-20 போட்டியிலாவது எனக்கு வாய்ப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.

உபாதைக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கிய மாலிங்க, கடந்த வருடத்தில் 6 டி-20 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுக்களையும், 13 ஒரு நாள் போட்டிகளில் கலந்துகொண்டு 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<