19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் ஆரம்பமாகின. அதில் இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது ரோயல் கல்லூரி அணி மற்றும் டி மெசனொட் கல்லூரி அணிகள் தத்தமது போட்டிகளில் முன்னிலையில் உள்ளன.

ரோயல் கல்லூரி எதிர் இசிபதன கல்லூரி

இத்தொடரின் குழு ‘B’ இற்கான போட்டியொன்றில் ரோயல் கல்லூரி அணியை எதிர்த்து இசிபதன கல்லூரி அணி போட்டியிட்டது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இசிபதன கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ரோயல் கல்லூரி அணி, பசிந்து சூரியபண்டார (79) மற்றும் ரேணுக ஜயவர்தனவின் (49) அதிரடியினால் 9 விக்கெட்டுகளை இழந்து 310 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. ரோயல் கல்லூரியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் இசிபதன கல்லூரியின் ரித்மிக நிமேஷ், நிரஞ்சன் வன்னியாராச்சி மற்றும் லஹிரு டில்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

தொடர்ந்து களமிறங்கிய இசிபதன கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 48 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

ரோயல் கல்லூரி – 310/9d (70.2) – பசிந்து சூரியபண்டார 79, ரேணுக ஜயவர்தன 49, ஹெலித விதானகே 40, ரித்மிக நிமேஷ் 2/15, நிரஞ்சன் வன்னியாராச்சி 2/35, லஹிரு டில்ஷான் 2/67

இசிபதன கல்லூரி – 48/2 (11) – ஹர்ஷ ரத்நாயக்க 20*, ஹிமேஷ் ராமநாயக்க 2/12


நாலந்த கல்லூரி எதிர் டி மெசனொட் கல்லூரி

19 வயதிற்கு உட்பட்டோருக்கான மற்றுமொரு கிரிக்கெட் போட்டியில் நாலந்த கல்லூரியும் டி மெசனொட் கல்லூரியும் மோதிக் கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற டி மெசனொட் கல்லூரி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய நாலந்த கல்லூரி 65 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக சுஹங்க விஜேவர்தன மற்றும் கசுன் சந்தருவன் 40 ஓட்டங்கள் வீதம் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் அசத்திய மிதில கீத் 26 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த டி மெசனொட் கல்லூரி இன்றைய தினத்திற்காக போட்டி நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுகளை இழந்து 42 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி – 229 (65) – சுஹங்க விஜேவர்தன 40, கசுன் சந்தருவன், மிதில கீத் 4/26

டி மெசனொட் கல்லூரி – 42/2 (13) – சந்தீப் தேஷான் 23