பந்து வீச்சாளர்களின் அபாரத்தால் குருகுல கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

250
U19 Cricket Round up

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுபெற்ற போட்டியில் கோட்டை ஜனாதிபதிக் கல்லூரியை தோற்கடித்த களனி குருகுல கல்லூரி இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

ஜனாதிபதிக் கல்லூரி எதிர் குருகுல கல்லூரி

நேற்றைய தினம் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற குருகுல கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய லச்சிந்து அரோஷ் 84 ஓட்டங்கள் குவிக்க, குருகுல கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பந்து வீச்சில் கவிந்த பெரேரா மற்றும் பிரமுக கயாஷான் 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஜனாதிபதிக் கல்லூரி, பிரவீன் நிமேஷ் மற்றும் மலிந்து விதுரங்கவின் அபாரமான பந்து வீச்சை எதிர்கொள்ள இயலாத நிலையில் 95 ஓட்டங்களுக்கே சுருண்டது. பிரவீன் நிமேஷ் 5 விக்கெட்டுகளையும், மலிந்து விதுரங்க 4 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.

இதன்படி 145 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட குருகுல கல்லூரி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த ஜனாதிபதிக் கல்லூரி, இம்முறையும் மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக 138 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்து வீச்சில் குருகுல கல்லூரியின் உதார ரவிந்து 4 விக்கெட்டுகளையும் நுவன் சாணக 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்படி குருகுல கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களினால் இலகு வெற்றியை பெற்றுக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 240/9d (75) லச்சிந்து அரோஷ் 84, செவுர நயனதரு 42, உதார ரவிந்து 39, கவிந்த பெரேரா 3/48, பிரமுக கயாஷான் 3/53

ஜனாதிபதிக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 95 (29.5) டில்ஷான் சிகேரா 26, பிரவீன் நிமேஷ் 5/41, மலிந்து விதுரங்க 4/39

ஜனாதிபதிக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 138 (43.1)  டில்ஷான் சிகேரா 28, உதார ரவிந்து 4/32, நுவன் சாணக 3/22

முடிவு: குருகுல கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களினால் வெற்றி.


ஆனந்த கல்லூரி எதிர் மஹாநாம கல்லூரி

இத்தொடரின் குழு ‘B’ இற்கான போட்டியொன்றில் ஆனந்த கல்லூரியும் மஹாநாம கல்லூரியும் மோதிக்கொண்டன. புளூம்பீல்ட் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற ஆனந்த கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி, இலங்கை அணி வீரர் சம்மு அஷான் மற்றும் சஹன் சுரவீர ஆகியோர் அரைச்சதங்கள் கடக்க, ஆனந்த கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் அஷான் பியுமால் மற்றும் மஹேல டி சில்வா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

தொடர்ந்து களமிறங்கிய மஹாநாம கல்லூரி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றிருந்தது. கவிந்து முனசிங்க 48 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், மலிந்து மதுரங்க ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களை பெற்று களத்திலிருந்தார். ஆனந்த கல்லூரியின் அசேல சிகேரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின்  சுருக்கம்

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 217 (58) சஹன் சுரவீர 55, சம்மு அஷான் 50, அஷான் பியுமால் 2/40, மஹேல டி சில்வா 2/44

மஹாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 124/3 (47) கவிந்து முனசிங்க 48, மலிந்து மதுரங்க 44*, அசேல சிகேரா 2/04