சதம் கடந்த அஷன் பண்டார : லும்பினி கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

690

இன்று நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் தொடரின் மஹிந்த கல்லூரியுடனான போட்டியில் சிறப்பாக செயற்பட்ட லும்பினி கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்துக்கொண்டது.

அதேபோன்று, இன்று ஆரம்பமாகிய மற்றொரு போட்டியில், அஷன் பண்டாரவின் சதம் மற்றும் ஹரீன் புத்திலவின் சிறப்பான பந்து வீச்சு என்பவற்றால் புனித அலோசியஸ் கல்லூரி அணி வலுவான நிலையில் உள்ளது.

லும்பினி கல்லூரி எதிர் மஹிந்த கல்லூரி

கொழும்பு கொல்ட்ஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய குழு B இற்கான இந்த போட்டியில், ஏற்கனவே மஹிந்த கல்லூரி தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி, 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பின்னர், லும்பினி கல்லூரி ஒரு விக்கெட்டினை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, நேற்றைய ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.

இதனையடுத்து, இன்று தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த லும்பினி கல்லூரி அணி, 65.2 ஓவர்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சிற்காக பெற்றுக்கொண்டது.

லும்பினி கல்லூரியின் துடுப்பாட்டத்தில், கனிஷ்க மதுவந்த அணிக்காக அதிகபட்சமாக 48 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில்,  நேற்றைய துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட கவிந்து எதிரிவீர, 75 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த மஹிந்த கல்லூரி அணியினர் நிதானமான ஆரம்பத்துடன் 23 ஓவர்களிற்கு ஒரு விக்கெட்டினை இழந்து 58 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில் போட்டி நிறைவிற்கு வந்தது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

இரண்டாவது இன்னிங்சிற்கான ஆட்டத்தில், போட்டி நேர நிறைவு பெறும் வரை களத்தில் நின்றிருந்த நவோத் பரனவிதான 33 ஓட்டங்களை மஹிந்த கல்லூரிக்காக பெற்றிருந்தார்.

இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றாலும், முதல் இன்னிங்சின் ஓட்டங்கள் அடிப்படையில் லும்பினி கல்லூரி அணி வெற்றி பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்): 173 (87.1) கவிந்து எதிரிவீர 68, KK கெவின் 27, ருவின் பீரிஸ் 3/15, விமுக்தி குலத்துங்க 3/56, கனிஷ்க மதுவந்த 2/27

லும்பினி கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்): 191(65.2) – கனிஷ்க மதுவந்த 48, தனுக்க தாபரே 29, ரவிந்து சஞ்சீவ 29, கவின் பீரிஸ் 20, கவிந்து எதிரிவீர 3/75, KK கெவின் 2/22, பிரனீத் ஹன்சிக்க 2/19, பிரகீத் மலிந்த 2/28

மஹிந்த கல்லூரி அணி (இரண்டாவது இன்னிங்ஸ்): 58/1(23), நவோத் பரணவிதான 33*, ரிசான் கவிந்த 23

போட்டி முடிவுபோட்டி சமநிலையில் நிறைவுற்றது. லும்பினி கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


புனித செர்வாடியஸ் கல்லூரி எதிர் புனித அலோசியஸ் கல்லூரி

இன்று மாத்தறை உயன்வத்த மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், கடந்த போட்டியில் ஸாஹிரா கல்லூரியுடன் தோல்வியடைந்த காலி அலோசியஸ் கல்லூரி பெரும் எதிர்பார்ப்புகளுடன் மாத்தறை புனித செர்வாடியஸ் கல்லூரியுடன் மோதிக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  அலோசியஸ் கல்லூரி அணியின் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை, எதிரணிக்கு வழங்கினார்.

இதன்படி, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த அவர்கள், அலோசியஸ் கல்லூரியின் ஹரீன் புத்திலவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 31.5 ஓவர்களில் 123 ஓட்டங்களுடன் சுருண்டு கொண்டனர். அவர்களின் அணி சார்பாக அதிகபட்சமாக சுபுன் கவிந்து 45 ஓட்டங்களை குவித்தார்.

இந்நிலையில், பந்து வீச்சில் செர்வாடியஸ் கல்லூரியினை புரட்டிப் போட்ட இடது கை சுழல் பந்து வீச்சாளர் ஹரீன் புத்தில அபாரமாக செயற்பட்டு 26 ஓட்டங்களிற்கு 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து, தமது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த அலோசியஸ் கல்லூரி அணி, அஷன் பண்டார பெற்றுக்கொண்ட அபார சதத்தின் (126) உதவியுடன், 56 ஓவர்களிற்கு 222 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையினை நோக்கி நகர்ந்தது.

பந்து வீச்சில், செர்வாடியஸ் கல்லூரி சார்பாக சஷிக்க துல்ஷான் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை இன்றே ஆரம்பித்த, செர்வாடியஸ் கல்லூரி அணி, விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்களை பெற்றிருந்த போது முதலாம் நாளின் ஆட்ட நேரம் முடிவிற்கு வந்தது.

இதனால், அலோசியஸ் கல்லூரியினை விட 95 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், செர்வாடியஸ் கல்லூரி இருக்கின்றது. அவ்வணியினர் நாளை தமது இரண்டாவது இன்னிங்சினை தொடரவுள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

புனித செர்வாடியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 123 (31.5), சுப்புன் கவிந்து 45, சந்தரு நேத்மின 31, ஹரீன் புத்தில 7/26

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 222(56), அஷன் பண்டார 126, ஹரீன் புத்தில 25, சஷிக்க துல்ஷான் 3/42, சந்தரு நேத்மின 2/35

புனித செர்வாடியஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 4/0 (5)

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்