அஷான் பிரியஞ்சன் 124, லசித் அபேரத்ன 103: கொழும்பு கிரிக்கெட் கழகம் வலுவான நிலையில்

633
SLC Premier League

இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ‘A’ மட்டத்திற்கான ஆறு போட்டிகள் இன்று ஆரம்பமாயின.

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி சோனகர் கழக மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிரிக்கெட் கழகம், லசித் அபேரத்ன மற்றும் அஷான் பிரியஞ்சனின் அபார சதங்களின் உதவியுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 443 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அணித்தலைவர் அஷான் பிரியஞ்சன் 124 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், லசித் அபேரத்ன ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வரும் இளம் வீரர் வனிது ஹசரங்க 47 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 443/7 (91) – அஷான் பிரியஞ்சன் 124, லசித் அபேரத்ன 103*, மாதவ வர்னபுர 50, வனிது ஹசரங்க 47


இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

சீக்குகே பிரசன்ன, துஷான் விமுக்தி மற்றும் ஹிமாஷ லியனகே அரைச்சதங்கள் குவிக்க, இராணுவ அணி 297 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சிறப்பாக பந்துவீசிய சரித் சுதாரக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல், 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இன்றைய ஆட்டத்தை நிறைவு செய்தது.

போட்டியின் சுருக்கம்

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 297 (72.4) – சீக்குகே பிரசன்ன 58, துஷான் விமுக்தி 54, ஹிமாஷ லியனகே 52, சரித் சுதாரக 5/98

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 51/5 (14) – விஷாட் ரந்திக 18*, சீக்குகே பிரசன்ன 12/2


NCC கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

இப்போட்டி பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்றதுடன், நாணய சுழற்சியில் வென்ற NCC அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

மேல்வரிசை வீரர்கள் அனைவரும் சிறந்த பங்களிப்புகளை வழங்க, NCC அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. எஞ்சலோ பெரேரா அதிகபட்சமாக 59 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் சாமிக கருணாரத்ன 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

பதிலுக்கு களமிறங்கிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 1 விக்கெட் இழப்பிற்கு 70 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 268 (65) – எஞ்சலோ பெரேரா 59, நிரோஷன் திக்வெல்ல 48, சந்துன் வீரக்கொடி 44, பவன் விக்ரமசிங்க 43, ரமித் ரம்புக்வெல்ல 3/72, சாமிக கருணாரத்ன 3/80

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 70/1 (18) – சித்தர கிம்ஹான் 40*


காலி கிரிக்கெட் கழகம் எதிர் பதுரேலிய விளையாட்டுக் கழகம்

சர்ரே விலேஜ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பதுரேலிய விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்த நிலுஷன் நோனிஸ் மற்றும் தமித ஹுனுகும்புர முறையே 62 மற்றும் 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட போதிலும் மற்றைய வீரர்கள் பெரிதாக சோபிக்காத காரணத்தால், காலி கிரிக்கெட் கழகம் 218 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் அலங்கார அசங்க மற்றும் திலேஷ் குணரத்ன 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடுகளம் பிரவேசித்த பதுரேலிய அணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுகளை இழந்து 33 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218 (78.2) – நிலுஷன் நோனிஸ் 62, தமித ஹுனுகும்புர 55, அலங்கார அசங்க 3/44, திலேஷ் குணரத்ன 3/53

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 33/2 (9)


BRC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

BRC மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற BRC கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது.

பந்துவீச்சில் அசத்திய அமில அபொன்சோ 5 விக்கெட்டுகளை பதம்பார்க்க, BRC கழகம் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் லசித் லக்ஷான் 46 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 44 ஓட்டங்களையும் குவித்தனர்.

அடுத்து களமிறங்கிய ராகம கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களை பெற்று இன்றைய நாள் ஆட்டத்தை நிறைவு செய்து கொண்டது.

போட்டியின் சுருக்கம்

BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 194 (60.1) – லசித் லக்ஷான் 46, பானுக ராஜபக்ஷ 44, அமில அபொன்சோ 5/34, சஹன் நாணயக்கார 3/29

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 69/2 (29)


SSC கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி கட்டுநாயக்கவில் இடம்பெற்றதுடன், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

தொடர்ந்து அபார பந்துவீச்சின் மூலம் அசத்தி வரும் ஜெப்ரி வெண்டர்சே 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, சிலாபம் மேரியன்ஸ் அணி 193 ஓட்டங்களுக்கு சுருண்டது. தொடக்க வீரர்களான அஷென் சில்வா 61 ஓட்டங்களையும் ஷெஹான் ஜயசூரிய 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய SSC கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களை பெற்றிருந்தது. பந்துவீச்சில் பிரகாசித்த மலிந்த புஷ்பகுமார 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 193 (54.1) – அஷென் சில்வா 61, ஷெஹான் ஜயசூரிய 45, ஜெப்ரி வெண்டர்சே 5/61

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 75/4 (35) – மலிந்த புஷ்பகுமார 4/20

நாளை போட்டிகளின் இரண்டாவது நாளாகும்.