பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகளும் சமநிலையில் நிறைவுற்றுள்ளன. இன்று ஆரம்பமாகிய மற்றுமொரு போட்டியில் முதலாம் நாள் ஆட்ட நிறைவில் தர்மசோக கல்லூரி அணி வலுவான நிலையில் உள்ளது.  

புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி

நிமேஷ் பண்டார ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 56 ஓட்டங்களின் துணையுடன், 26 ஓவர்களிற்கு 100 ஓட்டங்களினை பெற்றிருந்த புனித செபஸ்டியன் கல்லூரி அணி, இன்று தமது ஆட்டத்தினை தொடர்ந்தது.

தஷிக் பெரேரா பெற்றுக்கொண்ட 64 ஓட்டங்களின் துணையுடன் தமது முதல் இன்னிங்சிற்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70.3 ஓவர்களில் 289 ஓட்டங்களை அவ்வணி பெற்றுக்கொண்டது. இன்றைய ஆட்டத்தில் நிமேஷ் பண்டார 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 60 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தார். எதிரணியான ஜோசப் கல்லூரிக்காக தினேத் ஜயகொடி 4 விக்கெட்டுகளையும், கவிந்து ஜயதிஸ்ஸ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், புனித ஜோசப் கல்லூரி அணி தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்து, 59 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இன்றைய போட்டியின் ஆட்டநேரம் நிறைவிற்கு வந்தது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

ஜோசப் கல்லூரியின் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த செவோன் பொன்சேகா 83 ஓட்டங்களினை குவித்திருந்த அதேவேளை, செபஸ்டியன் கல்லூரிக்காக வினுஜ ரணசிங்க 3 விக்கெட்டுக்களை இன்று வீழ்த்தியிருந்தார்.

முன்னதாக, தினேத் மதுரவெலின் சதத்துடன் புனித ஜோசப் கல்லூரி அணி 319 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்சினை நிறைவு செய்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 319/7d (64) – தினேத் மதுரவெல 107*, ஜெஹான் பெர்னாந்துப்பிள்ளை 73,தஷிக் பெரேரா 2/70

புனித செபஸ்டியன் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 289 (70.3) – தஷிக் பெரேரா 64, நிமேஷ் பண்டார 60, தினேத் ஜயக்கொடி 4/56

புனித ஜோசப் கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 266/7 (59) – செவோன் பொன்சேக்கா 83, நிப்புன் சும்னசிங்க 48, வினுஜ ரணசிங்க 3/96

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது. புனித ஜோசப் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


புனித செர்வாடியஸ் கல்லூரி எதிர் தர்ஸ்டன் கல்லூரி

மாத்தறை உயன்வத்த மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் தர்ஸ்டன் கல்லூரி அணி, ஒரு விக்கெட்டினை இழந்து 37 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழை காரணமாக நேற்று ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, இன்று தமது ஆட்டத்தினை தொடர்ந்த தர்ஸ்டன் கல்லூரி அணி, 69 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களுடன் வலுப்பெற்றிருந்த போது, தமது முதல் இன்னிங்சினை முடித்து கொள்வதாக அறிவித்தது. முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் நிமேஷ் லக்சன் 61 ஓட்டங்களினை விளாசியிருந்தார். வலதுகை வேகப்பந்து வீசசாளர் திலான் பிரசான் 4 விக்கெட்டுகளை செர்வாடியஸ் கல்லூரி அணியிற்காக கைப்பற்றியிருந்தார்.

பின்னர், செர்வாடியஸ் கல்லூரி அணியினர் 137 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்து, 5 விக்கெட்டுக்களை இழந்து 97 ஓட்டங்களினை பெற்றிருந்தபோது, இப்போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுற்றது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. இன்றைய நாளிலும் ஜனுஸ்க பெர்னாந்து சிறப்பாக செயற்பட்டு 3 விக்கெட்டுகளை தர்ஸ்டன் கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

முதல் இன்னிங்சில் மோசமான ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்த செர்வாடியல் கல்லூரி அணி 123 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித செர்வாடியஸ் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 123 (41.1) – சுப்புன் கவிந்த 46, ஜனுஸ்க பெர்னாந்து 3/15

தர்ஸ்டன் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 260/7d (69) – நிமேஷ் லக்ஷன் 61*, சரணநாணயக்கார 33, திலான் பிரசான் 4/90

புனித செர்வாடியல் கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 97/5 (41.3) – இசுரு தடவத்த 30, ஜனுஸ்க பெர்னாந்து 3/14

போட்டி முடிவு போட்டி சமநிலையில் நிறைவுற்றது. தர்ஸ்டன் கல்லூரி அணிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


ஆனந்த கல்லூரி எதிர் லும்பினி கல்லூரி

4 விக்கெட்டுக்களிற்கு 99 ஓட்டங்களினை பெற்றிருந்தவாறு, இன்றைய ஆட்டத்தினை தொடர்ந்த லும்பினி கல்லூரி அணி, 59.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது. இன்றைய நாளில் லும்பினி கல்லூரியின் தனுக்க தாபரே 13 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்டு 66 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தார்.

பந்து வீச்சில் சமிக்க குணசேகர 3 விக்கெட்டுக்களை ஆனந்த கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த ஆனந்த கல்லூரி அணி, சுப்புன் வரகொடவின் அரைச்சதத்துடன் (58),  சகல விக்கெட்டுக்களையும் இழந்து  161 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டபோது இறுதி நாளான இன்றைய நாளின் ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

இரண்டாவது இன்னிங்சில் வலது கை சுழற்பந்து வீச்சாளரான விமுக்தி குலதுங்க ஆனந்த கல்லூரியின் 8 விக்கெட்டுக்களை அபாரமாக வீழ்த்தி மிரட்டியிருந்தார்.

முன்னதாக, ஆனந்த கல்லூரி அணியினர்  முதல் இன்னிங்சிற்காக 130 ஓட்டங்களினைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 130 (60.1), கவிந்து கிம்ஹான் 37, சுப்புன் வரகொட 29, தனுக்க தாபரே 4/45

லும்பினி கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 155 (59.5), தனுக்க தாபரே 66, கனிஷ்க மதுவத்த 22, சமிக்க குணசேகர 3/43

ஆனந்த கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 161 (66.3), சுப்புன் வரகொட 58, லஹிரு ஹிரன்ய 29, அஷல் சிகர 29, விமுக்தி குலதுங்க 8/67

போட்டி முடிவு – இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது, லும்பினி கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி


புனித தோமியர் கல்லூரி எதிர் குருகுல கல்லூரி

இப்போட்டியில் இன்றைய இரண்டாவது நாளில், நான்கு விக்கெட்டுக்களை இழந்து 71  ஓட்டங்களினை பெற்றிருந்தவாறு தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த குருகுல கல்லூரி அணி, மேலதிகமான ஆறு விக்கெட்டுகளையும் தோமியர் கல்லூரியின் இடது கை சுழல் பந்து வீச்சாளர் டெல்லோன் பீரிஸிடம் 62 ஓட்டங்களிற்குள் பறிகொடுத்தது.

எனவே அவர்கள் 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர். அவ்வணி சார்பாக துடுப்பெடுத்தாடிய ஏனைய வீரர்கள் 30 ஓட்டங்களை தாண்டாத நிலையில் உதார ரவிந்து மாத்திரம் 31 ஓட்டங்களினை அதிகபட்சமாக பெற்றிருந்தார். பந்து வீச்சில் குருகுல கல்லூரியினை அச்சுறுத்தியிருந்த பீரிஸ் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

குருகுல கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சிற்காக பெற்ற ஓட்ட எண்ணிக்கை போதாது என்பதால் மீண்டும் துடுப்பெடுத்தாட வேண்டியநிலைக்கு உள்ளாகியிருந்தது. இதனப்படிடையில் இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த அவர்கள், 69 ஓவர்களிற்கு 6 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களினை பெற்றிருந்த போது, இன்றைய ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் இப்போட்டியும் சமநிலையில் நிறைவுற்றது.

இன்றைய ஆட்ட நிறைவின் போது  குருகுல கல்லூரி சார்பாக அரைச்சதம் கடந்த மலிந்து விதுரங்க 66 ஓட்டங்களுடனும் பத்தும் மஹேஷ் 56 ஓட்டங்களுடனும் களத்தில் நின்றிருந்த வேளையில் ரொமேஷ் நல்லப்பெரும 3 விக்கெட்டுக்களை தோமியர் கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

தோமியர் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் தோமியர் கல்லூரி அணி ஏற்கனவே முதல் இன்னிங்சிற்காக 248 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 248 (68.5) – துலிப் குணரத்ன 46, ரவிந்து கொடித்துவக்கு 35, உதார ரவிந்து 5/41

குருகுல கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 133 (57) – உதார ரவிந்து 31, டெல்லோன் பீரிஸ் 5/30

குருகுல கல்லூரி f/o (இரண்டாவது இன்னிங்ஸ்): 226/6(69) – மலிந்து விதுரங்க 66*, பத்தும் மஹேஷ் 56*, ரொமேஷ் நல்லப்பெரும 3/40

போட்டி முடிவு போட்டி சமநிலையில் நிறைவுற்றது. தோமியர் கல்லூரி அணிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


தர்மராஜ கல்லூரி எதிர் கேகாலை புனித மரியார் கல்லூரி

புனித மரியார் கல்லூரி அணியினர் 108 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது முதல் இன்னிங்சினை இன்று தொடர்ந்தனர். அவ்வணி ராஜித்த கொட்டுவகொட பெற்றுக்கொண்ட 61 ஓட்டங்களின் துணையுடன், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த ருக்மல் தசநாயக்க 3 விக்கெட்டுக்களை தர்மராஜ கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.  

பின்னர் மரியார் கல்லூரியினை விட 23 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த தர்மராஜ கல்லூரி அணியினர், 56.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களுடன் சுருண்டு கொண்டனர்.

மோசமான துடுப்பாட்டம் ஒன்றினை காட்டியிருந்த தர்மராஜ கல்லூரியில், துலாஜ் விஜயகோன் மாத்திரம் அதிகபட்சமாக 32 ஓட்டங்களினை  பெற்றிருந்த இவ்வேளையில், லசித்த உதாகே 6 ஓட்டங்களிற்கு தர்மராஜ கல்லூரியின் 4 விக்கெட்டுக்களை பதம்பார்த்திருந்தார்.

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 105 ஓட்டங்களை பெற பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த மரியார் கல்லூரி அணி, 7 ஓவர்களை முகம்கொடுத்து, வெறும் 16 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்து இக்கட்டான நிலையில் இருந்த போது, இன்றைய போட்டியின் ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது. இதனால், தர்மராஜ கல்லூரியின் பக்கம் சாய்ந்திருந்த இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

ஏற்கனவே, கண்டி தர்மராஜ கல்லூரி அணி 210 ஓட்டங்களினை தமது முதல் இன்னிங்சிற்காக பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 210 (59.1) – தேஷான் குணசிங்க 52, சசிந்த சேனநாயக்க 34, லசித்த உதாகே 4/73, திமிர குமார 3/37,

புனித மரியார் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 233 (69.3) – ராஜித கொடுவகொட 61, சதரு சிரியகாந்த 43, ருக்மல் திசநாயக்க 3/88

தர்மராஜ கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 127 (56.3) – துலாஜ் விஜயகோன் 32, லசித்த உதாகே 4/06, தமிந்த சந்திரசிரி 3/41

புனித மரியார் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 16/6 (7) – ருக்மல் திசநாயக்க 2/01


காலி அலோசியஸ் கல்லூரி எதிர் தர்மசோக கல்லூரி

இன்று ஆரம்பமாகிய குழு C இற்கான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த அம்பலங்கொட தர்மசோக கல்லூரியின் தலைவர், முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை எதிரணியான அலோசியஸ் கல்லூரிக்கு வழங்கினார்.

இதன்படி, களமிறங்கிய அவர்கள் நவிந்து நிர்மல் ஆட்டமிழக்காமல் சிறப்பாக பெற்றுக்கொண்ட 89 ஓட்டங்களின் துணையுடன் தமது முதல் இன்னிங்சிற்காக, 213 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் லோஹன் டி  சொய்ஸா 32 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை தர்மசோக கல்லூரி அணிக்காக கைப்பற்றியிருந்தார்.

பின்னர், ஹர்ஷஜித் ரோஷன் அரைச்சதம் கடந்து பெற்ற 62 ஓட்டங்களின் துணையுடன் 4 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களினை தர்மசோக கல்லூரி அணி அவர்களின் முதல் இன்னிங்சிற்காக பெற்ற வேளையில், இன்றைய போட்டியின் ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.

பந்து வீச்சில் இன்றைய ஆட்ட நேர நிறைவு வரை பறிபோன நான்கு விக்கெட்டுக்களையும் நிதுக்க மல்ஷித் மற்றும் கவிஷ விலோச்சன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் அலோசியஸ் கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி: 213 (64.2) – நவிந்து நிர்மல் 89*, பசிந்து நாணயக்கார 44, லோஹன் டி சொய்ஸா 3/32

தர்மசோக கல்லூரி: 115/4 (34) – ஹர்ஷஜித் ரோசன் 62, தினுக்க தில்ஷான் 37, நிதுக்க மால்ஷித் 2/08, கவிஷ விலோச்சன 2/24