றினோன் தலைவர் கிண்ண இறுதிப் போட்டியில் ஸாஹிரா – ஹமீட் அல் ஹுஸைனி

Schools Football

427
Schools Football

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும்  18 வயதின்கீழ் பிரிவு 1 அணிகளுக்கு இடையிலான றினோன் தலைவர் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு கொழும்பு ஸாஹிரா கல்லூரி மற்றும் கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி அணிகள் தெரிவாகியுள்ளன.

சனிக்கிழமை (6) கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்ற ஒரு அரையிறுதியில் ஸாஹிரா கல்லூரி வீரர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை 8-2 என்ற கோல் கணக்கிலும், ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியே தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கொழும்பு ஸாஹிரா கல்லூரி எதிர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

முதல் அரையிறுதியாக இடம்பெற்ற இந்த போட்டியின் முதல் பாதியாட்டம் நிறைவடையும்போது ஸாஹிரா கல்லூரி வீரர்கள் 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தனர்.

>>றினோன் தலைவர் கிண்ண அரையிறுதியில் யாழ் மத்தி, ஸாஹிரா<<

தொடர்ந்த இரண்டாவது பாதியில் இரண்டு பெனால்டிகள் உட்பட ஸாஹிரா கல்லூரி அணி மேலும் 6 கோல்களைப் பெற, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்களால் இரண்டு கோல்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

எனவே, போட்டி நிறைவில் கொழும்பு ஸாஹிரா வீரர்கள் 8-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றனர்.

அவ்வணி சார்பாக ஷாஹில் ஹட்ரிக் கோலைப் பதிவு செய்தார். மேலும் ஆகில் இரண்டு கோல்களைப் பெற, அணித் தலைவர் ஸியாத் மற்றும் பரீக் ஆகியோர் தலா ஒரு கோலைப் பெற்றுக் கொடுத்தனர். யாழ் மத்திய கல்லூரி வீரர் ஹரிஷ் மூலம் ஸாஹிரா அணிக்கு ஒரு ஓன் கோலும் கிடைத்தது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக சன்தோஷ் மற்றும் ஹரிஷ் ஆகியோர் கோல்களைப் பெற்றனர்.

முழு நேரம்: கொழும்பு ஸாஹிரா 8 – 2 யாழ். மத்தி

ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி எதிர் சென் ஜோசப் கல்லூரி

இரண்டாவது அரையிறுதியாக இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல்கள் எதனையும் பெற முடியாமல் போனது.

இரண்டாம் பாதியிலும் அதே போன்றதொரு நிலை தொடர்ந்தாலும், போட்டியின் 80ஆவது நிமிடம் கடந்த நிலையில், ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் அப்துல்லாஹ் மூலம் போட்டியின் வெற்றி கோலை பெற்றனர்.

முழு நேரம்: ஹமீட் அல் ஹுஸைனி 1 – 0 சென் ஜோசப்  

எனவே, றினோன் தலைவர் சம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (7) மாலை கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெறவுள்ளது.

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<