இலங்கையின் முதல்தர பாடசாலை கால்பந்து அணிகள் பங்குபற்றிய 19 வயதிற்கு உட்பட்ட டிவிஷன் I  கால்பந்து போட்டித்தொடரின் ஆரம்ப கட்டப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை மொரகஸ்முல்ல மைதானத்தில் அரையிறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

சுற்றுப்போட்டிகளின் இறுதியில் A குழுவின் முதல் இடத்திற்கு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் இரண்டாம் இடத்திற்கு புனித ஜோசப் கல்லூரியும் தெரிவு செய்யப்பட்டது.

முன்னைய செய்திகளுக்கு: அரையிறுதிக்கு இலகுவாக நுழைந்த மாரிஸ் ஸ்டெல்லா, புனித ஜோசப் கல்லூரிகள்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி தாம் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்தது. குறிப்பாக புனித ஜோசப் கல்லூரியுடனான தீர்க்கமான போட்டியில் 2-1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது. புனித ஜோசப் அணி மாரிஸ் ஸ்டெல்லா அணியிடம் தோல்வியுற்றாலும் மிகுதி அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

இதேவேளை B குழுவின் வெற்றியாளர்களாக ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி தெரிவானது. தாம் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் இறுதி சுற்றுப் போட்டியில் திருச்சிலுவை கல்லூரியிடம் தோல்வி கண்டது. அப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் திருச்சிலுவை கல்லூரி பலம் பொருந்திய சாஹிரா கல்லூரியை புறந்தள்ளி இரண்டாம் இடத்தினைப்பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

முன்னைய செய்திகளுக்கு: ஹமீட் அல் ஹுசைனி, திருச் சிலுவைக் கல்லூரிகள் அரையிறுதிக்கு தெரிவு : ஸாஹிரா வெளியேற்றம்

இதனடிப்படையில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி திருச்சிலுவை கல்லூரியுடன் மோதவுள்ளதுடன், ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி புனித ஜோசப் கல்லூரியை சந்திக்கவுள்ளது.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் திருச்சிலுவை கல்லூரி

சென்ற வருடம் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்ட ‘டிவிஷன் I’ கால்பந்து போட்டித் தொடரின் வெற்றியாளர்களாக மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி தெரிவாகியது. அவ்வணி இறுதிப் போட்டியில் கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

களுத்தறை திருச்சிலுவைக் கல்லூரி கடந்த சில வருடங்களில் பாடசாலை மட்ட கால்பந்து போட்டிகளில் சிறப்பான ஒரு அணியாக உருவாகியுள்ளது. இவ்வருட கொத்மலே கிண்ண கால்பந்து போட்டித்தொடரில் காலிறுதி வரை முன்னேறியிருந்தமை அவ்வணியின் முன்னேற்றத்திற்கு ஒரு சான்றாக இருக்கின்றது.

மாரிஸ் ஸ்டெல்லா அணியின் நட்சத்திர வீரரும் தலைவருமான அஞ்சன குணவர்தன திருச்சிலுவை கல்லூரிக்கு நெருக்கடி கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தத்சர பெர்னாண்டோவும் இப்போட்டித் தொடரில் 3 கோல்களை போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சிலுவை கல்லூரி சார்பாக அணியின் தலைவர் மற்றும் கோல் காப்பாளர் மலிந்த அணியை சிறப்பாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிர்மல் உதார 8 கோல்களை விளாசி அதிக கோல் அடித்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ளார்.

இப்போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டாலும் திருச்சிலுவை கல்லூரி ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியை வீழ்த்திய உத்வேகத்தில் களமிறங்கும்.

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி சென்ற வருடம் இதே போட்டித்தொடரில் இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்ட அணியாகும். எனினும் மாரிஸ் ஸ்டெல்லா அணியுடனான இறுதிப்போட்டியில் இவர்களால் வெற்றி பெற முடியாமல் போனது.

பாடசாலை கால்பந்தில் சிறந்த முறையில் தடம் பதித்துவந்த புனித ஜோசப் கல்லூரி கால்பந்து அணியால் கடந்த சில வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்ட முடியவில்லை. எனினும் புனித ஜோசப் கல்லூரி 19 வயதிற்கு உட்பட்ட ‘டிவிஷன் I’ கால்பந்து போட்டித் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி தாம் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் இறுதி சுற்றுப்போட்டியில் திருச்சிலுவை கல்லூரியிடம் தோல்வி கண்டது. எனினும் அந்தப் போட்டியில் அணியின் நட்சத்திர வீரர்கள் பலரிற்கு ஒய்வு வழங்கப்பட்டது குறிப்பிடப்பட வேண்டிய விடயம். அணியின் நட்சத்திர வீரர் மொஹமட் அமான் அரையிறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 19 வயதிற்குக்கீழ்ப்பட்ட தேசிய அணியின் கோல் காப்பாளரான மகேந்திரன் தினேஷ் அணியை மேலும் வலுப்படுத்துவார்.

புனித ஜோசப் அணி இவ்வருடம் தொடரின் அதிக கோல்களை அடித்த அணியாக திகழ்கிறது. சசிந்த மதுரங்க அதிக கோல் அடித்தோர் பட்டியலில் முன்னிலையில் உள்ளார். மேலும் தலைவர் மயுரக தனது களத்தடுப்புப் பணியை செவ்வனே செய்கிறார்.

தீர்க்கமான போட்டியில் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், எதிரணியின் முன்கள வீரர்களை சமாளிக்கும் பொறுப்பு அணியின் பின்கள வீரர்களுக்கு காணப்படுகிறது.

WATCH LIVE: U19 Division I Schools Football Semi-finals 2016