அரையிறுதிக்கு இலகுவாக நுழைந்த மாரிஸ் ஸ்டெல்லா, புனித ஜோசப் கல்லூரிகள்

434
U19 DivI Group A review

பாடசாலை கால்பந்து அணிகள் மோதும் 19 வயதிற்கு உட்பட்ட டிவிஷன் I’ கால்பந்து போட்டித் தொடரின் குழு மட்டப் போட்டிகளின் முடிவில் ‘A’ குழுவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மற்றும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளன.

நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, கொழும்பு புனித ஜோசப் கல்லூரி, கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி, கம்பளை விக்ரமபாகு கல்லூரி, மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி, கொழும்பு புனித ஆசிர்வாதப்பர் கல்லூரி மற்றும் கொழும்பு இசிபதன கல்லூரி ஆகிய அணிகள் குழு A யில் மோதிக்கொண்டன.

போட்டிகளும், புள்ளி அட்டவணையும்

இலங்கை பாடசாலை கால்பந்தில் சிறந்த பாடசாலைகள் என பெயர் பதித்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரி ஆகிய இரு அணிகளும் இக்குழுவில் அரையிறுதிக்கு முன்னேறும் என அனைவராலும் எதிர்வு கூறப்பட்டது. அது போன்றே இவ்விரு அணிகளும் அரையிறுதிக்கு இலகுவாகத் தெரிவாகின.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

சென்ற வருடம் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்ட ‘டிவிஷன் I’ கால்பந்து போட்டித் தொடரின் வெற்றியாளர்களாக மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி தெரிவாகியது. அவ்வணி இறுதிப் போட்டியில் கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

இந்நிலையில், இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்ட போட்டித் தொடரில் A குழுவில் விளையாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, தாம் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இலகுவாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இதன் மூலம் தாம் வென்ற சம்பியன் கிண்ணத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான அத்திவாரத்தை அவ்வணி பலமாக இட்டுள்ளது.

தொடரின் முதல் போட்டியில் புனித ஆசிர்வாதப்பர் கல்லூரியை எதிர்கொண்ட மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 4-0 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றியை பதிவு செய்தது. மேலும் சிறப்பாக விளையாடிய அணி விக்ரமபாகு கல்லூரி, கிங்ஸ்வுட் கல்லூரி, புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் இசிபதன கல்லூரி ஆகிய அணிகளை முறையே 3-0, 3-0, 2-0 மற்றும் 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

புனித ஜோசப் கல்லூரியுடனான போட்டியில் 2-1 என வெற்றியீட்டிய மாரிஸ் ஸ்டெல்லா அணி, தொடரின் குழு மட்ட சுற்றை தோல்வி காணாது கடந்து அரையிறுதிக்குத் தெரிவாகியது. எனவே பலம் பொருந்திய அணியாக அவ்வணி காணப்படுகின்றது.

அணிக்காக அஞ்சன பெர்னாண்டோ 6 கோல்களை அடித்துள்ளார்.

புனித ஜோசப் கல்லூரி

பாடசாலை கால்பந்தில் சிறந்த முறையில் தடம் பதித்துவந்த புனித ஜோசப் கல்லூரி கால்பந்து அணியால் கடந்த சில வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்ட முடியவில்லை. இவ்வருடம் நடை பெற்ற கொத்மலே கிண்ண கால்பந்து சுற்றுத்தொடரில் அவ்வணிக்கு முதல் சுற்றிலேயே வெளியேற நிகழ்ந்தது. மேலும் புனித பேதுரு கல்லூரியுடனான வருடாந்த கால்பந்து போட்டித்தொடரிலும் தொடர்ந்து இரண்டாவது வருடமாக தோல்வி கண்டது.

எனினும் புனித ஜோசப் கல்லூரி 19 வயதிற்கு உட்பட்ட ‘டிவிஷன் I’ கால்பந்து போட்டித் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தற்பொழுது நடைபெறும் சுற்றுத்தொடரின் ஒரே ஒரு தோல்வியை அவர்கள் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியுடன் சந்தித்தனர்.

எனினும் மிகுதி அனைத்து போட்டிகளிலும் மிகப்பெரிய கோல் வித்தியாசத்தில் வெற்றிகளை பதிவு செய்து அறையிருதிக்குள் நுழைந்துள்ளது. குறிப்பாக, புனித செபஸ்டியன் கல்லூரி, கிங்ஸ்வுட் கல்லூரி, விக்கிரமபாகு கல்லூரி, லும்பினி கல்லூரி அணிகளை முறையே 4-1, 2-0, 6-0 மற்றும் 7-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

மேலும் புனித ஜோசப் கல்லூரி அணியின் பிரபல வீரர் சசிந்த மதுரங்க சுற்றுத்தொடரிலே அதிக கோல்களை அடித்தவராகத் திகழ்கின்றார். இவர் 9 கோல்களை தனதணிக்காக அடித்துள்ளார்.

இவ்விரு அணிகளையும் தொடர்ந்து A குழுவில் கிங்ஸ்வுட் கல்லூரி மூன்றாம் நிலையைப் பெற்றது. இசிபதன கல்லூரி இரண்டு சமநிலை முடிவுகளுடன் இறுதி இடத்தினை பெற்றுக்கொண்டது.

தீர்க்கமான போட்டி

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 2-1 புனித ஜோசப் கல்லூரி