கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்

43
 

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய பிரெண்டன் மெக்கலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதையடுத்து கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.

இதையடுத்து அந்த அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரும், இந்திய உள்ளூர் போட்டிகளில் மத்திய பிரதேச அணியின் பயிற்சியாளருமான சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அந்த அணி நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

கொல்கத்தா அணியுடனான இந்த வாய்ப்பை தான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக சந்திரகாந்த் பண்டிட் தெரிவித்துள்ளார். முன்னதாக, தன்னால் எந்தவொரு வெளிநாட்டு பயிற்சியாளருக்கு கீழும் பணியாற்ற முடியாது என கடந்த ஜூன் மாதம் அவர் தெரிவித்திருந்தார். அதனால்தான் தன்னால் IPL கிரிக்கெட்டில் பயிற்சியாளராக இணைந்துகொள்ள முடியவில்லை எனவும் சொல்லியிருந்தார். குறிப்பாக கொல்கத்தா அணியின் உரிமையாளரான பொலிவுட் நடிகர் ஷாருக்கான் உடனான சந்திப்பு குறித்தும் அப்போது அவர் தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, கொல்கத்தா அணியின் தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் – புதிய பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூட்டணியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறியுள்ளார்.

இந்திய அணிக்காக 5 டெஸ்ட், 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பண்டிட், ரஞ்சி கிண்ணப் போட்டியில் மும்பை, மத்தியப் பிரதேச அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

இதனிடையே, இந்திய உள்ளூர் கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் அவர் வழிநடத்திய அணிகள்தான் பெரும்பாலும் சம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதுவரையில் மும்பைக்கு 3, விதர்பாவுக்கு 2, மத்திய பிரதேசத்திற்கு ஒன்று என ஆறு ரஞ்சி கிண்ணங்களை வென்று கொடுத்துள்ளார்.

இறுதியாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி மத்தியப் பிரதேசம் அணி 87 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சம்பியன் ஆனமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<