இசிபதன மற்றும் ரிச்மண்ட் கல்லூரிகளுக்கு வெற்றி

18709
U19 Round Up

இசிபதன கல்லூரி அணியின் வலதுகை துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க 2015/16ஆம் ஆண்டுக்கான 19 வயதிற்குட்பட்டோருக்கான முதலாம் டிவிஷன் கிரிக்கட் பருவ காலத்தின் முதலாவது இரட்டை சதம் அடித்ததன் மூலம்  இசிபதன கல்லூரி அணி இலகுவான வெற்றியைப் பதித்தது.

கொழும்பு இசிபதன கல்லூரி எதிர் ஜனாதிபதி கல்லூரி ராஜகிரிய

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற கொழும்பு இசிபதன கல்லூரி மற்றும் ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டியில் இசிபதன கல்லூரி அணி வீரர் பத்தும் நிசங்கவின் அபார இரட்டைச் சதத்தின் உதவியோடு அந்த அணி இனிங்ஸ் வெற்றியைப் பெற்றது.

நேற்று கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமான 2016/17 ஆண்டுக்கான 19 வயதிற்குட்பட்டோருக்கான முதலாம் டிவிஷன் கிரிக்கட் பருவ காலத்தின் இசிபதன கல்லூரி அணியின் முதலாவது போட்டியில் இசிபதன கல்லூரி அணி ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இசிபதன கல்லூரி அணியின் தலைவர் செஞ்சுல அபேவிக்ரம முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார். இதன்படி ஆடிய ஜனாதிபதி கல்லூரி அணி 145 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் ஹிருன சீகர போராடி 35 ஓட்டங்களைப் பெற்றார்.

கொழும்பு இசிபதன கல்லூரி அணியின் பந்து வீச்சில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மதுசிக சந்தருவன் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்த வேகப்பந்து வீச்சாளர்களான நிரஞ்சன் வன்னியாராச்சி மற்றும் லஹிரு தில்ஷான் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் தமக்கிடையே பங்கு போட்டுக் கொண்டனர்.

பின் தமது முதல் இனிங்ஸிற்காக ஆடிய கொழும்பு இசிபதன கல்லூரி அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.  

பின்னர் இன்று தமது இனிங்ஸைத் தொடர்ந்த அந்த அணி 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 319 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்தியது. இசிபதன அணி சார்பாக மிகவும் அருமையாக ஆடிய பத்தும் நிசங்க 2015/16ஆம் ஆண்டுக்கான 19 வயதிற்குட்பட்டோருக்கான முதலாம் டிவிஷன் கிரிக்கட் பருவ காலத்தின் முதலாவது இரட்டை சதத்தைப் பெற்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 205 ஓட்டங்களைப் பெற்று இருந்தார்.

பின்னர் 174 ஓட்டங்கள் பின்னிலையில் தமது 2ஆவது இனிங்ஸிற்காக ஆடிய ஜனாதிபதி கல்லூரி அணி 66 ஓவர்களில் 173 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதில் ஹிருன சீகர 86 ஓட்டங்களைப் பெற்றார். இசிபத்தன கல்லூரி அணியின் பந்து வீச்சில் லஹிரு டில்ஷான் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இசிபதன கல்லூரி அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 1 ஓட்டத்தால் வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி – 145/10 (41.5 ஓவர்களில்)

ஹிருன சீகர 35, ஷாலக பண்டார 30, முஹமத் ரிபாஸ் 22

மதுசிக சந்தருவன் 4/30, நிரஞ்சன் வன்னியாராச்சி 3/33, லஹிரு தில்ஷான் 2/30

இசிபதன கல்லூரி – 319/5d (51 ஓவர்களில்)

கலன பெரேரா 22, ஹெஷான் பெர்னாண்டோ 25, பத்தும் நிசங்க 205*, சஞ்சுல பண்டார 31*

தனுல சமோத் 2/79

ஜனாதிபதி கல்லூரி – 173/10 (66 ஓவர்களில்)

ஹிருன சீகர 86

லஹிரு தில்ஷன் 4/31, மதுசிக சந்தருவன் 2/57

இசிபதன கல்லூரி அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 1 ஓட்டத்தால் வெற்றி


ரிச்மண்ட் கல்லூரி எதிர் புனித மேரிஸ் கல்லூரி, கேகாலை

“சிங்கர் கிண்ணம்” 19 வயதிற்குட்பட்டோருக்கான முதலாம் டிவிஷன் கிரிக்கட் பருவ காலத்தின் குழு “ஏ” பிரிவில் நேற்று ஆரம்பமான இன்னுமொரு போட்டியில் தென் மாகாணத்தின் முன்னாள் சம்பியன் அணியான காலி ரிச்மண்ட் கல்லூரி அணி மற்றும் கேகாலை புனித மேரிஸ் கல்லூரி அணிகள் மோதின. இப்போட்டி காலியில் நடைபெற்றது.

போட்டியில் முதலில் ஆடிய கேகாலை புனித மேரிஸ் கல்லூரி அணி 22.5 ஓவர்களில் 91 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அஷான் சேனாதிர 31 ஓட்டங்களைப் பெற்றார். ரிச்மண்ட் கல்லூரி அணியின் பந்து வீச்சில் திலங்க உதீஷ 5 விக்கட்டுகளையும் அவரது பந்து வீச்சு ஜோடி தனஞ்சய லக்ஷன் 4 விக்கட்டுகளையும் கைப்பற்றினார்.

பின்னர் தமது முதல் இனிங்ஸிற்காக ஆடிய காலி ரிச்மண்ட் கல்லூரி அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. பின் இன்று தமது இனிங்ஸைத் தொடர்ந்த ரிச்மண்ட் கல்லூரி அணி 9 விக்கட்டுகளை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதில் ஹசறு சமிக்கார 60 ஓட்டங்களையும் துவீன் சசிந்து ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் 157 ஓட்டங்கள் பின்னிலையில் தமது 2ஆவது இனிங்ஸில் ஆடிய கேகாலை புனித மேரிஸ் கல்லூரி அணி 20 ஓவர்களில் 89 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் மாஸ் ரஹீம் 32 ஓட்டங்களைப் பெற்றார். ரிச்மண்ட் கல்லூரி அணியின் பந்துவீச்சில் திலங்க உதீஷ 5 விக்கட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ரிச்மண்ட் கல்லூரி ஒரு இனிங்ஸ் மற்றும் 68 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித மேரிஸ் கல்லூரி – 91/10 (22.5 ஓவர்களில்)

அஷான் சேனாதிர 31

திலங்க உதீஷ 5/41, தனஞ்சய லக்ஷன் 4/38

ரிச்மண்ட் கல்லூரி – 248/9

ஹசறு சமிக்கார 60, ஆதித்ய சிறிவர்த்தன 36, ரவிஷ்க விஜேசிறி 60, துவீன் சசிந்து 50*

மாஸ் ரஹிம் 4/76, திமிர குமார 3/55

புனித மேரிஸ் கல்லூரி – 89/10 (20 ஓவர்களில்)

மாஸ் ரஹிம் 32

திலங்க உதீஷ 5/20, சந்துன் மெண்டிஸ் 2/19, தனஞ்சய லக்ஷன் 2/20

ரிச்மண்ட் கல்லூரி  ஒரு இனிங்ஸ் மற்றும் 68 ஓட்டங்களால் வெற்றி


டிரினிட்டி கல்லூரி எதிர் மாத்தறை புனித சேர்விஸ்ட்டர் கல்லூரி

19 வயதிற்குட்பட்டோருக்கான முதலாம் டிவிஷன் கிரிக்கட் பருவ காலத்தின் போட்டி ஒன்றில் டிரினிட்டி கல்லூரி மற்றும் மாத்தறை புனித சேர்விஸ்ட்டர் கல்லூரி அணிகள் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் மோதுகின்றன.

போட்டியின் முதலாம் நாளான இன்று நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மாத்தறை புனித சேர்விஸ்ட்டர் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானம் செய்தது. இதன்படி முதலில் ஆடிய டிரினிட்டி கல்லூரி அணி தமது முதல் இனிங்ஸில் 188 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதில் ஹசிந்த ஜயசூரிய 58 ஓட்டங்களைப் பெற்றார். பின்னர் தமது முதல் இனிங்ஸிற்காக ஆடி வரும் மாத்தறை புனித சேர்விஸ்ட்டர் கல்லூரி அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.

போட்டியின் சுருக்கம்

டிரினிட்டி கல்லூரி – 188/10 (67.1 ஓவர்களில்)

ஹசிந்த ஜயசூரிய 58, திசறு தில்ஷான் 30, ஷெவோன் பரிசல் 25

திலன் ப்ரஷாந் 2/27, ஷஸிக்க தில்ஷான் 4/44

புனித சேர்விஸ்ட்டர் கல்லூரி – 77/4 (25 ஓவர்களில்)

திலன் ப்ரஷாந் 47*

திசறு தில்ஷான் 2/25


கல்கிசை புனித தோமஸ் கல்லூரி எதிர் பன்னிபிட்டிய தர்மபால கல்லூரி

19 வயதிற்குட்பட்டோருக்கான முதலாம் டிவிஷன் கிரிக்கட் பருவ காலத்தின் மற்றுமொரு போட்டி ஒன்றில் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி மற்றும் பன்னிபிட்டிய தர்மபால கல்லூரி அணிகள் மோதுகின்றன. இப்போட்டி பன்னிபிட்டியவில் நடைபெறுகிறது.

போட்டியில் முதலில் ஆடிய புனித தோமஸ் கல்லூரி தமது முதல் இனிங்ஸில் 7 விக்கட்டுகளை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதில் இஷான் பெரேரா 107 ஓட்டங்களையும், மந்தில விஜேரத்ன 102 ஓட்டங்களையும், ரவிந்து கொடிதுவக்கு 62 ஓட்டங்களையும் பெற்றனர். பின்னர் தமது முதல் இனிங்ஸிற்காக ஆடி வரும் பன்னிபிட்டிய  தர்மபால கல்லூரி ஆட்ட நேர முடிவில் 3 விக்கட்டுகளை இழந்து 40 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித தோமஸ் கல்லூரி – 339/7d (80.2 ஓவர்களில்)

இஷான் பெரேரா 107, மந்தில விஜேரத்ன 102, ரவிந்து கொடிதுவக்கு 62

மஹிம வீரக்கோன் 2/86, சமிந்து சமரசிங்க 2/89

தர்மபால கல்லூரி – 40/3 (12 ஓவர்களில்)

தினுற குணவர்தன 2/12