மார்க் வுட் வேகத்தில் வீழ்ந்தது டெல்லி கெபிடல்ஸ்

39
Lucknow Super Giants vs Delhi Capitals

கைல் மேயர்ஸின் அரைச் சதம் மற்றும் மார்க் வுட்டின் அபார பந்துவீச்சு என்பவற்றின் உதவியுடன் டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சுபர் ஜயண்டஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் நேற்று (01) இரவு நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் லக்னோ சுபர் ஜயண்டஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணியின் தலைவர் டேவிட் வோர்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, லக்னோ அணிக்கு அணித்தலைவர் கே.எல். ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகிய இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். நிதானமாக விளையாடிய ராகுல் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். லக்னோ அணி PowePlay முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

PowePlay முடிந்த பின்னர் டெல்லி அணி பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு அதிரடி ஆட்டத்தை மேயர்ஸ் வெளிப்படுத்தினார். 38 பந்துகளில் அரைச் சதம் கடந்த அவர், 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளை அடித்து 73 ஓட்டங்களை எடுத்து அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய நிகொலஸ் பூரான் 21 பந்துகளில் 36 ஓட்டங்களை எடுக்க 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ஓட்டங்களை எடுத்தது. டெல்லி அணி சார்பில் கலீல் அஹமட் மற்றும் சகாரியா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே சற்று தடுமாற்றத்துடனே விளையாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக பிரித்வி ஷாவும், அணித்தலைவர் டேவிட் வோர்னரும் களமிறங்கினர். பிரித்வி ஷா 12 ஓட்டங்களை எடுத்து மார்க் வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ், மார்க் வுட்டின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, ஷர்பராஸ் கானும் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 7 ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. மறுபுறம், டேவிட் வோர்னர் நிதானமாக ஆடினார். அடுத்து களமிறங்கிய ரிலி ரோசா மட்டும் 30 ஓட்டங்களை எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

நிதானமாக ஆடிய வோர்னர் 56 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் லக்னோ அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லக்னோ அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மார்க் வுட் 4 ஓவர்களில் 14 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆவேஷ்கான் மற்றும் பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்க் வுட் போட்டியின் ஆட்டநாயகானாத் தெரிவானார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<