ஜப்பானில் தங்கம், வெண்கலம் வென்ற கயன்திகா, அருண

130

உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் வெண்கல பிரிவின் கீழ் ஜப்பானின் Shizuoka வில் நடைபெற்ற Shizuoka International Athletics Meet 2023 சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் இலங்கை அணி 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பை இலக்காகக் கொண்டு உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் நடத்தப்படுகின்ற இந்த ஆண்டுக்கான கண்டங்களுக்கிடையிலான உலக மெய்வல்லுனர் சுற்றுத் தொடர் கடந்த சனிக்கிழமை (29) ஆரம்பமாகியது.

A, B மற்றும் C என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெறுகின்ற இம்முறை போட்டித் தொடரின் ஆசிய கண்டத்தில் நடைபெறுகின்ற முதலாவது A பிரிவு போட்டியான Shizuoka International Athletics Meet 2023 சர்வதேச மெய்வல்லுனர் தொடர் புதன்கிழமை (03) ஜப்பானில் ஆரம்பமாகியது.

இதில் இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட கயன்திகா அபேரட்ன தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவு செய்ய 2 நிமிடங்கள், 04.35 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

இதனிடையே, இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அருண தர்ஷன வெண்கல பதக்கத்தை சுவீகரித்தார். போட்டித் தூரத்தை 45.59 செக்கன்களில் நிறைவு செய்த அவர், தனது அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவு செய்தார்.

இதேவேளை, இம்மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறவுள்ள மற்றுமொரு சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் கயன்திகா அபேரட்ன மற்றும் அருண தர்ஷன ஆகிய இருவரும் பங்குபற்றவுள்ளனர். இவர்களுடன் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தேசிய சம்பியனான நிலானி ரத்நாயகவும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<