இலகு வெற்றியுடன் பிரிவு III சம்பியனான யாழ் மத்திய கல்லூரி

999

15 வயதுக்கு உட்பட்ட பிரிவு III பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ணத்திற்கான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நிட்டம்புவ, ஸ்ரீ சங்கபோதி கல்லூரி அணியினை கவிதர்சனின் பந்துவீச்சு கஜன், பெல்சியன் ஆகியோரது துடுப்பாட்டத்தினதும் துணையுடன் போட்டியில் இலகு வெற்றி பெற்ற யாழ் மத்திய கல்லூரியினர் சம்பியன்களாக முடிசூடிக்கொண்டனர்.

ஒரு நாள் – நான்கு இன்னிங்சுகளை கொண்டதான இந்த போட்டி, இன்று(5) யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இறூதிப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கம்பஹா ஸ்ரீ சங்கபோதி கல்லூரியினர் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்திருந்தனர்.

ஆரம்ப துடுப்பாட்டவீரர் ஹிரூச லக்சான் சிறந்த ஆரம்பத்தினை வழங்கியபோதும் தொடர்ந்து வந்த வீரர்கள் விரைவாக விக்கெட்டுக்களை பறிகொடுக்க 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். ஐந்தாம் இலக்கத்தில் களமிறங்கிய பபசற டில்கறவின் 17 ஓட்டங்களுடன் கம்பஹா வீரர்கள் 66 ஓட்டங்களை எட்டினர். ஆறாவது விக்கெட்டிற்காக கவிஷ்க மல்ஷான், திசாத்ய உதால ஜோடி விரைவாக 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க வருகைதரு அணியினர் 46 ஓவர்களில் 107 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

கவிதர்சனின் சுழல் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் சாய்க்கப்பட 119 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். அரையிறுதிப்போட்டியிலும் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த கவிதர்சன் இன்றைய இறுதிப்போட்டியில் 7 விக்கெட்டுக்களை தன் வசப்படுத்தியிருந்தார்.

Photos: Jaffna Central College vs Sri Sangabodhi College | U15 Division III Finals

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மத்திய கல்லூரியினர் இரண்டாவது ஓவரிலேயே முதலாவது விக்கெட்டினை பறிகொடுத்தனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெல்சியனின் 30 ஓட்டங்கள், சன்சஜனின் 19 ஓட்டங்கள் மற்றும் மீண்டுமொருமுறை துடுப்பாட்டத்தில் பிரகாசித்த கஜனின் 46 ஓட்டங்களினதும் உதவியுடன் 26 ஓவர்களில் வெறுமனே 3 விக்கெட்டுக்களை மாத்திரம் பறிகொடுத்து சங்கபோதி கல்லூரியினை விட முன்னிலை பெற்று போட்டியில் வெற்றி பெற்றனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக கவிதர்சன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். 600 இற்கும் மேற்பட்ட அணிகள் 10 மாதங்களுக்கும் மேலாக மோதியிருந்த இந்த போட்டி தொடரின் சம்பியன்களாகமத்திய கல்லூரி முடிசூடியுள்ளது. 2019/20 பருவகால 15 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான தொடரில் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி பிரிவு II இல் போட்டியிடவுள்ளன.

போட்டியின் சுருக்கம்

ஸ்ரீ சங்கபோதி கல்லூரி, நிட்டம்புவ – 119 (46) – கவிஷ்க மல்ஷான் 26, திசாத்ய உதால 25, கவிதர்சன் 7/33, கௌதம் 2/26 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – 121/3 (26) – கஜன் 46*, மிகேஷ் பெல்சியன் 30

போட்டி முடிவு – முதல் இன்னிங்ஸ் ஓட்ட அடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க