முக்கோண T20 தொடரில் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி

129
BCB

பங்களாதேஷ் மண்ணில் இடம்பெற்றுவரும் முக்கோண T20 தொடரின் 5ஆவது போட்டியில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது. 

பங்களாதேஷ் மண்ணில் கடந்த வாரம் முதல் இடம்பெற்றுவரும் முக்கோண T20 தொடரில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கெடுத்துவருகின்றன. 

ஜிம்பாப்வேயை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பங்களாதேஷ்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் முத்தரப்பு….

இந்நிலையில் இந்த தொடரில் தாம் விளையாடிய முன்னைய போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்து தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பினை இழந்திருக்கும் ஜிம்பாப்வே அணி, முக்கோண T20 தொடரில் தாம் பங்கேற்கும் கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியினை எதிர்பார்த்து இன்று (20) இடம்பெற்ற மோதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை எதிர் கொண்டிருந்தது.

சத்தோர்கம் நகரில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ரஷீட் கான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தெரிவு செய்து கொண்டார். ஆப்கானிஸ்தான் அணி இந்தப் போட்டியில் பந்துவீச்சு சகலதுறைவீரரான பசால் நியாஸை அறிமுகம் செய்ய, ஜிம்பாப்வே அணியின் தலைவரும் முன்னணி துடுப்பாட்ட வீரருமான ஹமில்டன் மஸகட்ஸா இப்போட்டியினை தனது  கடைசி சர்வதேச போட்டியாக அறிவித்திருந்தார்.

பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை குவித்துக் கொண்டனர். 

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் வெறும் 17 வயதேயான றஹ்மானுல்லா குர்பாஸ் தன்னுடைய கன்னி T20 அரைச்சதத்துடன் 47 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதேநேரம், ஹஸ்ரத்துல்லா சஷாய் 31 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

மறுமுனையில் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு சார்பாக கிறிஸ் ம்பொபு 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருக்க, டினோடென்டா முடோம்பொட்ஸி 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். 

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 156 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய ஜிம்பாப்வே அணி பதிலுக்கு துடுப்பாடியது. 

வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய ஜிம்பாப்வே அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக வந்த அதன் தலைவர் ஹமில்டன் மஸகட்ஸா தனது அதிரடியான துடுப்பாட்டம் மூலம் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தார். 

மஸகட்ஸாவின் அதிரடி துடுப்பாட்டத்தோடு ஜிம்பாப்வே அணி போட்டியின் வெற்றி இலக்கினை 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 156 ஓட்டங்களுடன் அடைந்தது. 

ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு உதவிய ஹமில்டன் மஸகட்ஸா அவரின் 10ஆவது T20 அரைச்சதத்தோடு 42 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதேநேரம், ரெகிஸ் சகப்வாவும் 32 பந்துகளில் 39 ஓட்டங்களை குவித்து தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது உறுதி

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள்….

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முஜிபுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த போதிலும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் ஜிம்பாப்வே அணி முக்கோண T20 தொடரில் ஆறுதல் வெற்றி ஒன்றை பதிவு செய்து தொடரை நிறைவு செய்திருப்பதுடன், அதன் அணித்தலைவர் ஹமில்டன் மஸகட்ஸாவிற்கும் வெற்றியுடன் சிறந்த பிரியாவிடை ஒன்றை வழங்கியுள்ளது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் ம்பொபு தெரிவு செய்யப்பட்டார். 

இந்த முக்கோண T20 தொடரின் ஆறாவதும் இறுதியுமான குழுநிலை போட்டி நாளை (21) ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளின் மோதல் இடம்பெற்ற இதே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் குறித்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 155/8 (20) – றஹ்மனுல்லா குர்பாஸ் 61(47), ஹஸ்ரத்துல்லா சஷாய் 31(24), கிறிஸ் ம்பொபு 30/4(4)

ஜிம்பாப்வே – 156/3 (19.3) – ஹமில்டன் மஸகட்ஸா 71(42), ரெகிஸ் சகப்வா 39(32), முஜிபுர் ரஹ்மான் 28/2(4)

முடிவு – ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<